
உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவோர், உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை காரணமாக ஒதுக்கப்பட்டிருக்கும் வறியோருக்கு முன்னுரிமை வழங்கி, வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முன்வரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மாநாட்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சமுதாயவியல் பாப்பிறைக் கழகம், “ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்” என்ற தலைப்பில், உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், சனவரி 5, இப்புதனன்று மாலை உரையாற்றிய திருத்தந்தை, தற்போதையை உலகில் நிலவும் பொருளாதாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை வெளிச்சமிட்டுக் காட்டினார்.
வறியோர் எண்ணிக்கையில் வளரும் உலகம்
உலகம் செல்வச்செழிப்பில் வளர்கிறது என்ற அதே வேளையில், நம்மைச் சுற்றி, வறியோரின் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக வளர்ந்து வருகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
உறைவிடம், உணவு, நலவாழ்வு, கல்வி, மின்சாரம், குடிநீர் என்ற பல்வேறு அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டுள்ள மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, வறுமை தொடர்பான பல்வேறு காரணங்களால், இவ்வாண்டு, 50 இலட்சம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்பதை வேதனையுடன் குறிப்பிட்டார்.
விரக்தியில் ஆழ்த்தாமல், தீர்வுகளைக் காண…
வருவாயில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால், கொத்தடிமைத்தனம், விபச்சாரம் மனித வர்த்தகம், உடல் உறுப்புக்களின் வர்த்தகம் போன்ற கொடுமைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளாகின்றனர் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
வேதனை தரும் இப்புள்ளிவிவரங்கள், நம்மை விரக்தியில் ஆழ்த்தாமல், இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் தீர்வுகளைக் காண்பதற்கு நம்மை உந்தித்தள்ள வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்
Source: New feed
