
என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை .
என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டில் இருந்த சூரியக் கடவுளுக்கு புதிதாகக் கோவில் கட்ட நினைத்தான். எனவே அவன் தனக்கு நன்கு அறிமுகமான மூன்று முக்கியமான கட்டிடக் கலைஞர்களை அழைத்து அவர்களிடம், தான் சூரியக் கடவுளுக்குக் கோவில் கட்ட இருப்பதாகவும் அதற்கான மாதிரிக் கோவிலை வரைந்துகொண்டு வருமாறும் கேட்டான். அவர்களும் ஒருசில மாதங்கள் கழித்து சூரியக் கடவுளுக்கான மாதிரிக் கோவிலை வரைந்துகொண்டு வந்தார்கள்.
முதலில் வந்த கட்டிடக் கலைஞர், ஒரு மாதிரிக் கோவிலை வரைந்துகொண்டு வந்து, அதனை கவின்மிகு கற்களால் கட்டி எழுப்பப் போவதாகச் சொன்னார். அரசன் இதைக் கேட்டு மகிழ்ந்து போனான். அதே நேரத்தில் மற்ற இரு கட்டிடக் கலைஞர்கள் என்ன மாதிரியான கோவிலை வரைந்துகொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லி, அவரைக் காத்திருக்கச் சொன்னார். முதலாவது கட்டிடக் கலைஞருக்கு அடுத்து, இரண்டாவது கட்டிடக் கலைஞர் வந்தார். அவர் அரசரிடம் ஒரு வரைபடத்தைக் கொடுத்து, “அரசே! நான் சூரியக் கடவுளுக்கு தங்கத்தால் கோவில் கட்டுவது மாதிரி வரைபடம் வரைந்து வைத்திருக்கிறேன்” என்றார். இதைக் கேட்டு அரசர் இன்னும் மகிழ்ந்து போய், “மகிழ்ச்சி, சூரியக் கடவுளுக்கு தங்கத்தால் கோவிலா… கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது… இருந்தாலும் அடுத்தவர் என்ன மாதிரியான கோவிலை கற்பனை செய்து வரைந்து வைத்திருக்கின்றார் என்று பார்த்துவிட்டுச் சொல்கின்றேன், அதுவரைக்கும் பொறுத்திருக்கவும்” என்று சொல்லிவிட்டு மூன்றாம் கட்டிடக் கலைஞரிடம் சென்றார்,
மூன்றாம் கட்டிடக் கலைஞரோ ஒரு வரைபடத்தைக் காட்டி, “அரசே! நான் சூரியக் கடவுளுக்கு கண்ணாடியால் கோவில் கட்டுவது போன்று வரைபடம் வரைந்து வைத்திருக்கின்றேன். கண்ணாடியால் சூரியக் கடவுளுக்கு கோவில் கட்டுவதால் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று அது சூரியனை அப்படியே பிரதிபலிக்கும். இரண்டு, கோவிலுக்கு உள்ளே இருப்பவர்களும் சூரியனை மிக எளிதாகக் காணலாம்” என்றார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போன அரசன், சூரியக் கடவுளுக்கு கண்ணாடியால் கோவில் கட்டுவதே சிறப்பான காரியம் என்று சொல்லி, அதன்படியே செய்யத் தொடங்கினான்.
மேலே சொல்லப்பட்ட கதையில் எப்படி கண்ணாடிக் கோவில் சூரியக் கடவுளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றதோ, அதுபோன்றுதான் நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவும் ஆண்டவராகிய கடவுளைப் பிரதிபலிப்பவராக இருக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன் சீடர்களிடத்தில், “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்று சொல்ல பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்” அதுவே போதும்” என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்த்கொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என்கின்றார். இயேசு சொல்கின்ற இவ்வார்த்தைகள் நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. அவை எவையெவை என்று இப்போது பார்ப்போம்.
அதில் முதலாவது, இயேசுவை அறிந்து கொள்வதன் வழியாக நாம் தந்தைக் கடவுளை அறிந்துகொள்ளலாம் என்பதாகும். கடவுளைக் கண்கூடாகப் பார்க்க முடியாது, அவரைப் பார்த்தவர்கள் இறந்துபோய்விடுவார்கள் என்ற நம்பிக்கை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்தது. ஆண்டவர் இயேசுவின் வருகையினால் இத்தகைய கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம் பிறந்தது. இயேசு கட்புலனாகாத கடவுளின் சாயல். எனவே காண்பதன் வழியாக, அவரை அறிந்துகொள்வதன் வழியாக எல்லா வல்ல இறைவனை அறிந்துகொள்ளலாம்.
இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய இரண்டாவது உண்மை இயேசுவும் தந்தையும் ஒன்று என்பதாகும். அதைத்தான் அவர், “நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்” என்கின்றார். இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய மூன்றாவது உண்மை இயேசு சொன்ன வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் யாவரும் தந்தையுடையவை ஆகும். இதைத்தான் என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே” என்கிறார். ஆம், இயேசு செய்த செயல்கள், ஆற்றிய அருமடையாளங்கள் யாவுமே, அவர் அவராகச் செய்யவில்லை, மாறாக, தந்தை அவருள் இருந்துகொண்டு செயலாற்றினார்.
ஆகவே, இயேசுவும் தந்தையும் ஒன்று என்ற உண்மையை உணர்ந்துகொள்வோம். இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed
