
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, ‘இருக்கிறவர் நானே’ என்பதை அறிந்துகொள்வீர்கள்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30
அக்காலத்தில்
இயேசு பரிசேயர்களை நோக்கி, “நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்” என்றார். யூதர்கள், “ ‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்றார்.
அவர்கள், “நீர் யார்?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர், “நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்” என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
I எண்ணிக்கை நூல் 21: 4-9
II யோவான் 8: 21-30
“நீங்கள் நம்பாவிட்டால் பாவிகளாய்ச் சாவீர்கள்”
நம்பிக்கையில்லாத மக்கள்:
பல ஆண்டுகளுக்கு முன்பாக கயிற்றின்மீது நடக்கும் ஒருவர், நயாகரா நீர்வீழ்ச்சியின் நடுவே கயிற்றைக்கட்டி நடந்தார். அக்காட்சியைக் கண்டு மக்களெல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். சிறிதுநேரம் கழித்து, மக்களெல்லாம் இன்னும் ஆச்சரியப்படும் வகையில், கயிற்றின்மீது ஒரு சக்கர நாற்காலியை வைத்து, அதன்மீது அவர் நடந்து சென்றார்.
பின்னர் அவர் மக்களைப் பார்த்து, “மீண்டுமாக நான் இந்தச் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கயிற்றில் வரமுடியும் என்று நம்புகிறீர்களா?” என்றார். அதற்கு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “ஆமாம், நாங்கள் நம்புகிறோம்” என்றார்கள். “நான் இந்தச் சக்கர நாற்காலில் அமர்ந்துகொண்டு, மீண்டுமாகக் கயிற்றில் வரமுடியும் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் எனில், என்னோடு யாரேனும் ஒருவர் வரமுடியுமா?” என்றார். இதற்கு மக்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததைக் கண்டு, அவர் மிகவும் நொந்து கொண்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மக்கள் எப்படி கயிற்றின்மீது நடப்பவர்மீது முழுமையான நம்பிக்கை இல்லாமல் இருந்தார்களோ, அப்படி இயேசுவின் காலத்தின் வாழ்ந்த பலரும் அவர்மீது நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் பாவிகளாய்ச் சாவார்கள் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்றார். அதைக்குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு கிறிஸ்து தான் இறைமகன் என்பதை பல்வேறு அருமடையாளங்கள் வழியாகவும், வல்ல செயல்கள் வழியாகவும் வெளிப்பபடுத்திக்கொண்டே இருந்தார். மக்களோ அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; நம்பவும் இல்லை. யோவான் நற்செய்தி 6: 29 இல் இயேசு இதை இன்னும் மிகத்தெளிவாக, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்று சொல்லியிருப்பார். அப்படியிருந்தும் மக்கள் அவரை நம்பி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்நிலையில்தான் இயேசு அவர்களைப் பார்த்து, “இருக்கின்றவர் நானே என்பதை நீங்கள் நம்பாவிடில் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்கிறார்.
எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பாம்பு கடித்த மனிதர்கள் வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பார்கள். அது போன்று இயேசுவே இறைமகன் என்று நம்புகின்ற யாவரும் பாவிகளாய்ச் சாகாமல் உயிர்பிழைப்பார்கள். நாம் இயேசுவை இறைமகனாக நம்பி ஏற்றுக்கொள்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்பினால் மீட்பு பெறுவோம் (உரோ 10: 9).
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது (எபி 11: 6)
ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவர் ஆண்டவர் இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்தது.
இறைவாக்கு:
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?” என்பார் யோவான். எனவே, நாம் இயேசு இறைமகன் என்று நம்பி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
