
சமூக சம நீதிக்காய் தமிழ் தேசிய அறவுணர்வுடன் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குரலாய் பல சவால்களுக்கு மத்தியிலும் இனமானவுணர்வுடன் இன விடுதலைக்காய் அறப்பணி புரிந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஆண்டகையின் நினைவு பேருரை மன்னாரில் இடம்பெற்றது.தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின் தலைவர் வீ.எஸ். சிவகரனின் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (02.04.2022) மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் அரங்க அறிமுக உரையினை தாழ்வுபாடு பங்கு தந்தையும், மனித உரிமை தொடர்பாக செயல்படும் அருட்பணி எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் வழங்கியதுடன், தமிழ்த்தேசிய இருப்பில் அமரர் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வகிப்பாகம் என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் உரையாற்றினார்.
அத்துடன் இந் நிகழ்வில், ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் கொண்டு மறைந்த ஆயரின் தயவால் விடுதலையாகி இன்று குரலற்ற மனிதர்களின் குரலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட்பணி விக்ரர் சோசை அடிகளார், பிரதம அதிதிகள் ஆகியோர் உரையாற்றினர்.
விழா ஆரம்பத்தில் ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையால் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் படத்திற்கு குத்துவிளக்கேற்ற, யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ. ஜெபரட்ணம் அடிகளார் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து கலந்து கொண்டோர் யாவரும் மறைந்த ஆயரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் அவர்களால் ஆக்கம் செய்யப்பட்ட ‘தமிழ்த்தேசிய இருப்பில் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வகிபாகம்’ என்ற நூல் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையால் மறைந்த ஆயர் யோசேப்பு ஆண்டகையின் உறவினரான அருட்சகோதரியிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: New feed
