
சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோர், பல்வேறு வழிகளிலும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மதம், கல்வி, நலவாழ்வு என்று அனைத்து தளங்களையும் சார்ந்த அமைப்புக்கள், அவர்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர் ஒருவருக்கு மடல் அனுப்பியுள்ளார்.
ஜூன் 24, வருகிற திங்கள் முதல், 26, புதன் முடிய இத்தாலியின் பெனெவெந்தோ எனுமிடத்தில் நடைபெறும் ஒரு கருத்தரங்கையொட்டி, பெனெவெந்தோ உயர் மறைமாவட்ட பேராயர் பெலிச்சே அக்ரோக்கா (Felice Accrocca) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
சமுதாய வாழ்வில் பொறுப்பில் உள்ளோருக்காக நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கு வழியே, அப்பகுதியில் வாழும் மக்கள் மீது திருஅவை கொண்டுள்ள அக்கறை வெளிச்சமாகிறது என்று திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்குப் பணியாற்றும் அனைவருமே நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று தன் மடலில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாய சிந்தனைகள் கொண்ட திருஅவை ஏடுகளும் இக்கருத்தரங்கில், விவாதிக்கப்பட உள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
இக்கருத்தரங்கின் விளைவாக, நலிவுற்ற மக்கள் நடுவே நம்பிக்கை தரும் விடயங்கள் பல வெளியாகும் என்று தான் நம்புவதாகவும், அதற்காக தன் செபங்களையும் ஆசீரையும் வழங்குவதாகவும் திருத்தந்தை இம்மடலின் இறுதியில் கூறியுள்ளார்.
Source: New feed
