
ஜெர்மனியின் Strasbourg நகரில், இளம் பேராசிரியர் ஒருவர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதக்கட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார். இறையியலில், மெய்யியலில், இசை என்று பல துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றிருந்த அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் ஒவ்வொரு நாளும் கடித வடிவில் வந்தன. அன்று அவருக்கு வந்திருந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த இதழில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது. “காங்கோ பணித்தளத்தின் தேவைகள்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: “இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே… கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வரிகளை வாசித்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர், தனது நாள் குறிப்பேட்டைத் திறந்து, “என் தேடல் முடிவுற்றது”என்று எழுதினார். அன்றுவரை அவர் செய்துவந்த அனைத்தையும் விட்டுவிட்டு, அவர், ஆப்ரிக்காவில் பணியாற்ற முடிவுசெய்தார்.
30 வயது நிறைந்த அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவர் பணியாற்ற விழைந்த ஆப்ரிக்க மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஆப்ரிக்காவின் பின்தங்கியப் பகுதி ஒன்றில், தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகள், அவர், ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைத்தார். இறைவனின் அழைப்பு, ஆல்பர்ட் அவர்களின் வாழ்வை வேறு திசையில் அழைத்துச் சென்றாலும், இறைவன் மீது தன் முழு நம்பிக்கையை வைத்து, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம். இந்த உழைப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். – லூக்கா நற்செய்தி 10: 1-5
“அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு” என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் வாசிக்கிறோம். பொதுவாக, தேவ அழைத்தலுக்காகச் செபிக்கும்போது, இச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ‘தேவ அழைத்தல்’ என்றதும், குருக்கள், துறவறத்தார் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழ வாய்ப்புண்டு. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளை ஆய்வு செய்தால், இயேசு, 72 பேரை புதிதாக நியமித்து, தன் பணிக்கென அனுப்பிய வேளையில், இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்பதை உணர்கிறோம்.
இயேசுவுடன் வாழ்ந்த பன்னிருத் திருத்தூதர்கள், ஏனைய 72 சீடர்கள் அனைவருமே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள். எனவே, “அறுவடைக்கு வேலையாள்கள் தேவை” என்று இயேசு கூறியது, குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் வேலையாள்களை நினைத்து, இயேசு, இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது உண்மை.
இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை அறுவடை செய்ய, தனித் திறமைகள் பெற்றிருக்கவேண்டும். அதேநேரத்தில், பிறரோடு இணைந்து உழைக்கும் திறமையும் பெற்றிருக்கவேண்டும். இறையரசுக்காக உழைப்பவர்கள் பெற்றிருக்கவேண்டிய திறமைகளை, இன்றைய நற்செய்தியில், ஒரு சில நிபந்தனைகளாகச் சொல்கிறார் இயேசு.
முதல் நிபந்தனை: “ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்”இயேசுவுக்குத் தேவை. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதா? இது விபரீதமான முயற்சியாகத் தெரிகிறதே என்று நாம் தயங்கலாம். ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள், வீரக்கதைகளாகத் தொடர்ந்து நடந்துவருகின்றன என்பது நமக்குத் தெரியும்.
அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்த கோலியாத்து என்ற மனித மலையோடு (காண்க. 1 சாமுவேல், 17: 4-7) மோத புறப்பட்ட தாவீது, நம் நினைவுக்கு வருகிறார். அந்த மோதலில் யார் வென்றது, ஓநாயா, ஆட்டுக்குட்டியா என்பது நாமறிந்த வரலாறு.
“யார் இந்த அரை நிர்வாணப் பரதேசி?” என்று, ஆங்கில அரசு ஏளனமாகப் பார்த்த காந்தியடிகள் நம் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக்குட்டி, ஓநாய்களாய் வலம்வந்த ஆங்கில அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது உலகறிந்த வரலாறு.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், ‘காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு’ என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார்.
இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, “வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்” என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலத்தடி எரிசக்திகளை ஏற்றுமதி செய்யும், பெட்ரோலிய நாடுகளின் கூட்டமைப்பான OPEC, கிரேட்டா துன்பர்க் அவர்களின் போராட்டத்தைக் குறித்து தற்போது, கலக்கமடைந்துள்ளது. OPEC நிறுவனத்தின் தலைமைச் செயலர், மொஹம்மத் பார்கிண்டோ (Mohammad Barkindo) அவர்கள், இளம்பெண் கிரேட்டா அவர்களின் போராட்டம் நிலத்தடி எரிசக்தியை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் என்று, ஜூலை 5, இவ்வெள்ளியன்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள், எதிர்காலத்திற்காகப் போராடி வரும் எனது தலைமுறைக்குக் கிடைத்த சிறந்ததொரு பாராட்டு இது என்று கூறியுள்ளார்.
Source: New feed
