
சாலமோனின் ஞானம் 11: 22-12: 2
II 2 தொசலோனிக்கர் 1: 11-2:12
III லூக்கா 19: 1-10
இ(ற)ழந்துபோனதை மீட்க வந்த இயேசு
நிகழ்வு
ஒரு சிற்றூரில் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயருக்குத்தான் கிறிஸ்தவராக இருந்தாரே ஒழிய, மிகவும் தாறுமாறாக வாழ்ந்து வந்தார்; அவருடைய மனைவி இவர்க்கு முற்றிலும் மாறாக, எல்லார்க்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தார். அவர் தன்னுடைய கணவரிடம் எவ்வளவோ அறிவுரைகள் சொன்னபோதும்கூட, அவை விழலுக்கு இறைத்த நீர்போன்று வீணாய்ப்போயின.
அந்தக் கிறிஸ்தவர் ஒவ்வொருநாளும் காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டி, அவற்றைக் கொண்டு சந்தையில் விற்று, அதன்மூலம் பிழைப்பை ஓட்டிவந்தார். ஒருநாள் அவர் வழக்கம்போல், தன்னுடைய தோள்மேல் கோடாரியைப் போட்டுக்கொண்டு காட்டுக்கு விறகு வெட்டச் சென்றார். அன்று அவருடைய பார்வைக்கு காய்ந்து, பட்டுப்போன ஒரு மரம் வெகு சீக்கிரத்திலேயே தென்பட்டது. உடனே அவர் அந்த மரத்திற்கு அருகில் சென்று, அதை வெட்டத் தொடங்கினார். அப்பொழுது அவர்க்குள் இருந்து ஒரு குரல், “நீயும் காய்ந்து. பட்டுப்போன மரம்போன்றுதானே இருக்கின்றாய்…! கடவுள் உன்னையும் வெட்டியெறிய நினைத்தால் நீ என்ன செய்வாய்…?” என்று ஒலித்தது. அவர் திடுக்கிட்டுப் போனார். ‘என்ன இது…? இப்படியொரு குரல் ஒலிக்கின்றதே…?’ என்று ஒருகணம் சிந்திக்கத் தொடங்கினார். பின்னர் அவர் அந்தச் சிந்தனையை ஓரம்கட்டிவிட்டு, மரத்தை வெட்டத் தொடங்கினார்.
சிறிதுநேரம் கழித்து, முன்புகேட்ட அதே குரல் கேட்டது. அவர் ஆடிப்போனார். ‘என்ன இது…? முன்பு கேட்ட அதே குரல் கேட்கின்றதே…?’ என்று சிந்திக்கத் தொடங்கிய அவர், ‘இதையே நினைத்துக் கொண்டிருந்தால் இன்றைக்குப் பட்டினி கிடக்கவேண்டியதுதான்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, மரத்தை வெட்டத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் முன்பு கேட்ட அதே குரல் மீண்டுமாக அவர்க்குக் கேட்டது. அவர் அப்படியே மூர்ச்சையானார். ‘நிச்சயமாக இது இறைவனுடைய குரலாகத்தான் இருக்கும்’ என்று முடிவுசெய்துகொண்டு, வீட்டிற்கு வேகமாக ஓடிவந்து, திரு இருதய ஆண்டவரின் படத்தின் முன்னம் முழந்தாள்படியிட்டு, கண்ணீர் மல்க வேண்டத் தொடங்கினார்: “இறைவா! பட்டுப்போன மரமாகிய என்னை இத்தனை நாள்களும் நீர் உயிரோடு வைத்திருக்கின்றாயே! உன்னுடைய இரக்கம் மிகப்பெரியது. இனிமேலும் நான் தவறான வழியில் செல்லமாட்டேன்; உமக்குகந்த வழியில் நடப்பேன். இது சத்தியம்.”
தன்னுடைய கணவர் இப்படிக் கண்ணீர்விட்டு இறைவனிடம் வேண்டுவதைப் பார்த்த அந்தக் கிறிஸ்தவ விறகுவெட்டியின் மனைவி, “இறைவன் இவர்க்கு நல்ல புத்தியைக் கொடுத்துவிட்டார்’ என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டவராகிய இயேசு இ(ற)ழந்துபோனதைத் தேடி மீட்க வந்தார். அப்படிப்பட்டவரிடம் பாவத்தால் இறந்துபோன அல்லது பட்டுப்போன யாவரும் அவருடைய அருள்பெருக்கை எண்ணி அவரிடம் திரும்பி வந்தால், அவர்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! பொதுக்காலத்தின் முப்பது ஒன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், ‘இ(ற)ழந்துபோனதை மீட்கவந்த இயேசு’ என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பெயருக்கு ஏற்ப வாழாத சக்கேயு
நற்செய்தியில் சக்கேயுவைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு என்றால் ‘நேர்மையாளர்’ என்று பொருள். ஆனால், சக்கேயுவோ தன்னுடைய பெயருக்கு ஏற்ப நேர்மையாக வாழாமல், மக்களிடமிருந்து அதிகமான வரிவசூலித்து வந்தார் (லூக் 3: 12-13). இதனால் அவர் யூதர்களின் வெறுப்புக்கு உள்ளானார். யாராவது உரோமையர்களிடம் பணிபுரிந்தால், அவரைத் துரோகியாகப் பார்த்த யூதர்கள், சக்கேயு மக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடவும் அதிகமான வரியை வசூலித்து வந்ததால், அவர்களுடைய வெறுப்புக்கு இன்னும் அதிகமாக உள்ளானார். இவ்வாறு சக்கேயு தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழாது, அதற்கு முரணான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், ஏராளமாகப் பணம் இருந்தபோதும், உள்ளத்தில் வெறுமையோடு வாழ்ந்து வந்தார்.
இன்றைக்கும் கூட பல கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெயருக்கு ஏற்ப வாழாமலும் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழாமலும் அதற்கு முரணான வாழ்க்கை வாழ்ந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் சக்கேயுவைப் போன்று தங்களுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.
சிறுகுழந்தையைப்போன்று மாறிய சக்கேயு
‘தன்னிடம் ஏராளமான பணம் இருந்தும் நிம்மதியில்லையே!’ என்று சக்கேயு புலம்பிக்கொண்டிருந்த தருணத்தில், பாவிகளை ஏற்று, அரவணைத்துக் கொள்கின்ற இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒருவேளை முன்பு வரிதண்டுபவராக இருந்து, பின் இயேசுவின் சீடராகிய மாறிய மத்தேயுவிடமிருந்து (லூக் 5: 27-39) அவர் கேட்டிருக்கலாமோ! தெரியவில்லை. ஆனால், அவர் இயேசுவைக் குறித்து கேட்டறிந்த பின்பு, ‘மற்றவர் என்ன நினைப்போரோ?’, ‘சமூகம் என்ன நினைக்குமோ?’ என்று எண்ணிக் கொண்டிருக்காமல், ஒரு குழந்தையைப் போன்று ஓடிப்போய், இயேசு கடந்து போகவிருந்த வழியில் இருந்த மரத்தில் ஏறிக்கொள்கின்றார்.
இங்கு ‘அவர் (சக்கேயு) ஓடிப்போய்’ என்ற வார்த்தைகள் சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. குழந்தைகள்தான் ஓடும் ஆடும். சக்கேயு ஒரு குழந்தையைப் போன்று ஓடுகின்றார். அப்படியானால் அவர், இயேசு சொல்வதைப் போன்று, இறையாட்சியை ஒரு சிறுபிள்ளையைப் போன்று ஏற்றுக்கொண்டார் (லூக் 18: 17) என்றுதான் சொல்லவேண்டும். சக்கேயு ஒரு குழந்தையாய் மாறி, தன்னைப் பார்க்க வந்ததை அறிந்த இயேசு அவரிடம், “சக்கேயு! விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் தங்கவேண்டும்” என்று சொல்லி அவரை வியப்படைய வைக்கின்றார்.
குள்ளமாக இருந்து, பெரியவரான சக்கேயு
இயேசு சக்கேயுவிடம், உம்முடைய வீட்டில் நான் தங்கவேண்டும் என்று சொன்னதும் அவர் இயேசுவை மகிழ்ச்சியோடு தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கின்றார். வழக்கமாக பாவம் செய்த யாரும் கடவுளிடமிருந்து மறைந்துகொள்வது வழக்கம் (தொநூ 3: 1-10) ஆதாமும் ஏவாளும் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. ஆனால், சக்கேயு அப்படியில்லாமல் ஆண்டவரைத் தேடிச் செல்கின்றார். அந்த விதத்தில் சக்கேயு மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுகின்றார்.
அடுத்ததாக, இயேசு சக்கேயுவின் வீட்டிற்கு வருவதாகச் சொன்னதும் சக்கேயு இயேசுவிடம், என் உடைமைகளில் பாதியை ஏழைகட்கும் எவரிடமிருந்தாவது, எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்று கூறுகின்றார். மோசேயின் சட்டம், ஒருவர் இன்னொருவரை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்திருந்தால், அவர் அந்தப் பொருளையும் அந்தப் பொருளின் ஐந்தில் ஒரு பகுதியையும் திருப்பித் தரவேண்டும் என்றும் (லேவி 6: 5), திருடியதைத் திருப்பித் தரமுடியாவிட்டாலும் நான்கு மடங்காகத் தரவேண்டும் (விப 22: 1) என்றும், திருடும்போது பிடிபட்டால் இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும் (விப 22:4) என்றும் கூறுகின்றது. சக்கேயுவோ இப்படிப்பட்ட மோசேயின் சட்டம் அல்லது சட்டங்களைக் கடந்து சென்று தன்னிடம் இருப்பதைத் திரும்பித் தரமுன் வருகின்றார். ஆகையால்தான் இயேசு அவரிடம், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று… இழந்துபோனதைத் தேடி மீட்கவே, மானிடமகன் வந்திருக்கின்றார்” என்று கூறுகின்றார்.
இங்கொரு முக்கிய உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் குள்ளமாக இருந்த சக்கேயு (பாவம் செய்யும் ஒவ்வொருவரும் குள்ளம்தான் உரோ 3:23) இயேசுவிடம் வெளியிட்ட அறிக்கையினால் உயர்ந்துநிற்கின்றார்; மீட்பினைக் கொடையாகப் பெறுகின்றார். அப்படியானால், பாவிகள் யாவரும் தங்களுடைய குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அவரோடு ஒப்புரவானால், அவர்கள் இறைவனுடைய பார்வையில் பெரியவர்கள் ஆவார்கள் என்பது உறுதி. நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அவரோடு ஒன்றிணையத் தயாரா? சிந்திப்போம்.
Source: New feed
