
பெருந்தொற்று, உலக அளவில் பரவலாக வறுமையை, குறிப்பாக, நலிந்தோர் மத்தியில் அதனை அதிகரித்துள்ளவேளை, இந்நிலை, பாலியல் உட்பட பல்வேறு தொழில்களுக்கு மனித வர்த்தகம் அதிகரிப்பதற்கும் காரணமாகியுள்ளது என்றும், இக்குற்றவாளிகளை விசாரிப்பதற்கு, தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புமுறைகளின் பலவீனத்தையும் பெருந்தொற்று உணர்த்தியுள்ளது என்றும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறினார்.
பெருந்தொற்று உருவாக்கியுள்ள அசாதாரண சூழல்களைக் கையாள்வது குறித்து தேசிய மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்திவந்ததை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, குற்றக்கும்பல்கள் மனித வர்த்தகத்தை மாற்றுவழிகளில் அமைத்துள்ளன என்று கூறிய அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், பெருந்தொற்று நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறாரின் பாதுகாப்பும், உரிமைகளும், கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் பள்ளிகளுக்குச் செல்லாமல் இருக்கும் சிறார், கட்டாயத் தொழில் அல்லது மனித வர்த்தகத்திற்கு எளிதாகப் பலியாகும் ஆபத்தை அதிகமாக எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், மனித வர்த்தகம், குடிமக்களின் வாழ்வுக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பரந்த அளவில் தகவல் பரிமாற்றங்கள் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெருந்தொற்று காலச்சூழலில், இன்றைய உலகின் எதார்த்தங்களை எடுத்துரைத்து, மிகுந்த ஒருமைப்பாட்டுணர்வில் அவற்றுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கைகளுக்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்றும் கூறினார், அருள்பணி உர்பான்சிஸ்க்.
Source: New feed