
வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பின் பெருவிழாவன்று, “புனித யோசேப்பு: இறையழைத்தலின் கனவு” என்ற தலைப்பில், இவ்வாண்டு இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் 58வது உலக நாளுக்கென்று, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித யோசேப்பு, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, அந்த புனிதருக்கென்று ஒரு சிறப்பு ஆண்டை தான் அர்ப்பணித்திருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இப்புனிதர் ஓர் அசாதாரண மனிதர், அதேநேரம், நம் மனித அனுபவங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர் என்று கூறியுள்ளார்.
அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் வாழ்வை வழங்கவும், அதை பிறப்பிக்கவும் வல்லமையுடைய ஒரு தந்தையின் இதயத்தை, கடவுள், புனித யோசேப்பில் பார்த்தார், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு, குறிப்பாக, இந்த பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் துன்பக்காலத்தில், இத்தகையப் பண்புகள் அதிகம் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
வருகிற ஏப்ரல் 25ம் தேதி சிறப்பிக்கப்படும், உலக இறையழைத்தல் நாளுக்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், கனவு, பணி, பிரமாணிக்கம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை, நம் ஒவ்வொருவரின் இறையழைத்தலுக்கு, புனித யோசேப்பு, பரிந்துரைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
புனித யோசேப்பின் நான்கு கனவுகள்
நற்செய்தி நூலில் கூறப்பட்டுள்ள புனித யோசேப்பின் நான்கு கனவுகளும் (காண்க. மத்.1:20; 2:13.19.22) கடவுளிடமிருந்து அவருக்கு கிடைத்த அழைப்பு என்றும், அந்த கனவுகள், அவரை, அவர் ஒருபோதும் கற்பனைசெய்து பார்த்திராத அனுபவங்களுக்கு இட்டுச் சென்றன என்றும், இவை அனைத்தும் ஏற்படுத்திய மனக்கிளர்ச்சிகளுக்கு மத்தியிலும், கடவுளின் விருப்பத்தைப் பின்பற்ற அவர் துணிவைக் கண்டார் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கனவு, புனித யோசேப்பு, மரியாவோடு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோதே, அவரை மெசியாவுக்குத் தந்தையாக்கியது, இரண்டாவது கனவு, அவர் எகிப்துக்குச் செல்லக் காரணமானது, அதேநேரம் தன் குடும்பத்தை அது காப்பாற்றியது, மூன்றாவது கனவு, தன் சொந்த ஊருக்குத் திரும்பச் சொன்னது, நான்காவது கனவு, அவரது திட்டத்தை மீண்டும் மாற்றி நாசரேத்துக்கு அழைத்துச் சென்றது.
கனவு காணுதல்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட இறையழைத்தலுக்கு, கனவு காணுதல் முக்கியம் என்பதை பரிந்துரைக்கும் புனித யோசேப்பு, கனவுகள் வழியாகவே, அவர் தன் வாழ்வை ஒரு கொடையாகக் கொடுக்குமாறு, கடவுள் அவரில் தூண்டுதலை எழுப்பினார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
அதேபோல் நம் அழைத்தலிலும், முதல் அடி எடுத்து வைக்கவும், நம்மையே வழங்கவும், முன்னோக்கிச் செல்லவும், கடவுள் நம்மை எப்போதும் தூண்டுகிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, நம் திட்டங்களையும், வசதிகளையும் கைவிட்டு, இறையருளில் நம்பிக்கை வைத்து, நம்மை முழுமையாகக் கையளித்தால் மட்டுமே, “ஆகட்டும்” என்று, உண்மையிலேயே கடவுளுக்கு, நம்மால் கூறமுடியும் என்று கூறியுள்ளார்.
கடவுளின் திட்டங்களை ஏற்பதில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் இருப்பவர் புனித யோசேப்பு என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும், குறிப்பாக, தங்களின் அழைப்பை தெளிந்து தேர்வுசெய்யும் இளையோர், தங்களுக்காக கடவுள் அமைத்துள்ள கனவுகளை உண்மையாக்க புனித யோசேப்பு உதவுவாராக என்றும், எப்போதும் விந்தைகளை ஆற்றுகின்ற, மற்றும், ஒருபோதும் ஏமாற்றாத ஆண்டவருக்கு, “ஆகட்டும்” என்று சொல்வதற்கு, அப்புனிதர் அவர்களில் துணிச்சலைத் தூண்டுவாராக என்றும் கூறியுள்ளார்.
Source: New feed
