
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
“பகைவருக்கு அன்பு”
தவக்காலம் முதல் வாரம் சனிக்கிழமை
I இணைச்சட்டம் 26: 16-19
II மத்தேயு 5: 43-48
“பகைவருக்கு அன்பு”
தன் தந்தையைக் கொன்றவரின் காலடிகளைக் கழுவிய அருள்பணியாளர்:
சிரியாவில் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு பங்கில் பங்குப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். ஒருநாள் இவரது தந்தையை அந்நாட்டில் அகதியாக இருந்த ஒருவர் முன்பகை காரணமாகக் கொன்றுபோட்டுவிட்டார். இச்செய்தியை அறிந்த அருள்பணியாளர் மிகவும் வருந்தினார்.
அப்பொழுது அருள்பணியாளருக்கு அறிமுகமான சிலர் இவரிடம், “கொலைக் குற்றவாளியைச் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி, அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுங்கள்” என்றார். அருள்பணியாளர் அவர்கள் சொன்னது போன்று செய்யவில்லை; மாறாக ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்குக் கொலைகாரனை அழைத்து, அவனுடைய காலடிகளைக் கழுவினார். யாருமே நினைத்துப் பார்த்திராதவகையில் அருள்பணியாளர் தன் தந்தையைக் கொலை செய்தவனுடைய காலடிகளைக் கழுவிய இச்செய்தியைக் கேட்டு, அவர் இருந்த கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு கூடியது.
ஆம், தன் தந்தையைக் கொலை செய்தவனை மன்னித்து, அவனுடைய காலடிகளைக் கழுவியதன் மூலம் இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளர், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய, “உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்” என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தருபவராக இருக்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அடித்தவரைத் திருப்பி அடிக்க வேண்டும்; பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றுதான் இந்த உலகம் போதித்துக்கொண்டிருக்கின்றது; அதையே கடைப்பிடித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றது; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவர் இயேசு, “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்கின்றார். இப்படிச் செய்தால் நாம் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்யும் விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகின்றோம் என்கின்றார் இயேசு.
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களிடம், “நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்ப்பிடிப்பதில் கருத்தாய் இருந்தால்… நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்” என்கின்றார். இங்கு மோசே கூறுகின்ற கடவுளின் கட்டளையைப் ‘பகைவருக்கு அன்பு கூருங்கள்’ என்ற இயேசுவின் கட்டளையோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். எனவே, நாம் பகைவரிடம் அன்பு கூர்ந்து விண்ணகத் தந்தையின் அன்பு மக்களாவோம்.
சிந்தனைக்கு:
தீமைக்கு தீமை ஒருபோதும் தீர்வாகாது. தீமையை நன்மையால் மட்டுமே வெல்ல முடியும்.
நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழச் செய்யும் கடவுள்தான் எத்துணை மேலானவர்.
உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள்; ஏனெனில், அவர்கள் நீங்கள் யாரெனச் சொல்வார்கள் – பெஞ்சமின் பிராங்க்ளின்
ஆன்றோர் வாக்கு:
‘உலகில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட அன்பிற்குத்தான் மிகப்பெரிய ஆற்றல் இருக்கின்றது. ஏனெனில், அன்புதான் பகைவரையும் நண்பராக்கும்’ என்பார் மார்டின் லூதர்கிங் (ஜூனியர்). எனவே, நாம் பகைவரிடமும் அன்பு கொண்டுவாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
