
கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் நெருக்கடிகள்: பழங்குடி இன மக்களின் உணவு முறைகளின் மதிப்பு” என்ற தலைப்பில், பிப்ரவரி 02, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள பழங்குடி இன மக்களின் ஐந்தாவது உலக மாநாட்டிற்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
IFAD எனப்படும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், வேளாண் வளர்ச்சி உலக நிதி அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பங்குபெறும் பிரதிநிதிகளுக்கு, இச்செவ்வாயன்று திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், பன்மைத்தன்மையை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்படுவதற்கு, திருஅவை தன்னை தொடர்ந்து அர்ப்பணித்துள்ளது என்பதை, இச்செய்தியில் மீண்டும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உலகத்தாராளமயமாக்கல் என்பது, பன்மைத்தன்மையைப் புறக்கணித்து, காலனி ஆதிக்கத்தின் புதிய வடிவத்தைப் புகுத்தும், முறை அல்ல என்று கூறியுள்ளார்.
எவரும் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடாது என்ற மாற்றுச்சிந்தனையை உருவாக்கவேண்டிய சவாலை நாம் எதிர்கொள்கின்றோம் என்றும், பன்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும்போது, மக்களிடையே ஒன்றிப்பு மலரும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, ஒருங்கிணைந்த சூழலியல் பற்றியும் விளக்கியுள்ளார்.
ஒருங்கிணைந்த சூழலியலில், நம் பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதோடு அத்துடன் தொடர்புடைய சமுதாய நீதியையும் உள்ளடங்கியுள்ளது என்பதை, தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்போது, பசிக்கொடுமை தீர்க்கப்படுவதையும், நீதி, நன்மைத்தனம் போன்ற நிலைத்த விழுமியங்களின் அடிப்படையில், சமுதாயம் அமைக்கப்படுவதையும் காணமுடியும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.
தனிமனிதக் கோட்பாட்டால் ஆட்கொள்ளப்படும், இவ்வுலகப் போக்குகள், மற்றும், ஆன்மீக வெறுமையால் காயப்படாமல், அனைவருக்கும் பயனுள்ள காரியங்களில் அக்கறை காட்டப்படுமாறு, இம்மாநாட்டில் பங்குகொள்வோரைத் தான் விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டிற்கு தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Source: New feed
