
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா?
அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“இயேசுவின் உண்மையான சீடராக வாழத் தயாரா?”
பிரான்ஸ் நாட்டிலுள்ள லயோன்ஸ் நகரச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் பீட்டர் வால்டோ (Peter Waldo). இவர்க்கு ஒரு நண்பர் இருந்தார்; அவர் குடியும் கூத்தும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் திடீரென்று இறந்துபோனார். நண்பருடைய திடீர் இறப்பினால் அதிர்ந்துபோன பீட்டர் வால்டோ இந்த மண்ணுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்தார்; மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்தி பார்த்துவிட்டு, கிறிஸ்துவுக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து, அவருடைய நற்செய்தி எல்லா மக்கட்கும் எடுத்துச் சொல்வதுதான் நிலையான மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்ந்தார்.
இதற்குப் பின்பு இவர் ஓரிரு ஆண்டுகள் விவிலியத்தை முறையாகக் கற்றுக்கொண்டு, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எங்கும் அறிவிக்கத் தொடங்கினார். இவர் மக்களிடம் அடிக்கடிப் போதிக்கக்கூடிய போதனை இதுதான்: “நீங்கள் இயேசுவின் உண்மையான சீடராக இருக்கவேண்டும் என்றால், அவரை ஊற்றுநோக்குங்கள்; அவர் சொல்வதற்குச் செவிமடுங்கள்; அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் இயேசுவை உற்றுநோக்கி, அவர்க்குச் செவிகொடுத்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்தீர்கள் என்றால், நீங்கள் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருப்பீர்கள்.”
இயேசுவின் சீடர்கள் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு பீட்டர் வால்டோ தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய மூன்று முதன்மையான கருத்துகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உண்மையான சீடர் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவுக்குக் முதன்மையான இடம் கொடுக்கவேண்டும்.
நற்செய்தியில் இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்; அவர்க்குப் பின்னால் ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றார்கள். இயேசுவுக்கு நன்றாகவே தெரியும், தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்களில் பெரும்பாலானோர் ஆதாயத்திற்காகத்தான் வருகின்றார்கள் என்று. இத்தகைய சூழ்நிலையில்தான் அவர் தன்னுடைய சீடர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தினைத் தருகின்றார்.
இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள்கூட்டத்தைப் பார்த்து முன்வைக்கின்ற முதன்மையான செய்தி, தன்னுடைய சீடர் மற்ற எல்லாரையும்விட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதாகும். ஆம், இயேசுவின் சீடர் மற்ற எல்லாரையும்விட அவரை மேலாகக் கருதி, அவர்க்குத் தன்னுடைய வாழ்வில் முதன்மையான இடம்கொடுக்கவேண்டும்; அவரை முதன்மையான அன்புசெய்யவேண்டும் (மத் 10: 37) இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
Source: New feed
