
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10
அக்காலத்தில்
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?
கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
“மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்”
நிகழ்வு
ஒரு நகரில் மிகப்பிரபல மறைப்போதகர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் வந்த ஓர் இளைஞர், “சுவாமி! நான் மிகப்பெரிய பாவி; நான் என்னுடைய பாவ வாழ்க்கையை விட்டுவிலகி, புதிய மனிதனாக வாழவேண்டும். அதற்கு நீங்கள்தான் வழி சொல்லவேண்டும்” என்றான்.
மறைப்போதகர் ஒரு வினாடி யோசித்தார். பின்னர் அவர் அவனிடம், “ஒரு பாத்திரத்தில் காற்று இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காற்றை அப்புறப்படுத்த நீ என்ன செய்வாய்?” என்றார். “பாத்திரத்தில் உள்ள காற்றை அப்புறப்படுத்த, காற்றழுத்தக் கருவியைப் பயன்படுத்துவேன்” என்றான் அந்த இளைஞன். “காற்றழுத்தக் கருவையைப் பயன்படுத்திப் பாத்திரத்தில் உள்ள காற்றை அப்புறப்படுத்திவிட்டாலும், மீண்டுமாக அந்தப் பாத்திரத்தில் காற்று புகாமல் இருக்குமா?” என்றார் மறைப்போதகர். “புகும்” என்று அந்த இளைஞன் சொன்னதும், மறைபோதகர் அவனிடம் தொடர்ந்து பேசினார்:
“பாத்திரத்தில் உள்ள காற்றை அப்புறப்படுத்துவதற்குக் காற்றழுத்தக் கருவியை பயன்படுத்து எப்படி இருக்கின்றது என்றால், பாவத்திலிருந்து வெளியே வருவதற்கு, நீ அதைவிட்டு விலகி ஓடுவதைப் போன்று இருக்கின்றது. பாத்திரத்திலிருந்து காற்றை அப்புறப்படுத்துவதற்குக் காற்றழுத்தக் கருவியைப் பயன்படுத்துவதையும், அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால், காற்று நிரந்தரமாகப் பாத்திரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடும். அதுபோன்று நீ பாவத்திலிருந்து வெளியே வருவதற்கு, பாவத்தைவிட்டு விலகி ஓடுவதைவிடவும், உன்னுடைய வாழ்க்கையைக் கடவுள், நற்செயல், போன்ற தண்ணீரால் நிரப்பு. நிச்சயம் உன்னால் பாவத்திலிருந்து வெளியேறி, நல்ல மனிதனாக மாறமுடியும்.”
மறைப்போதகர் சொன்ன இந்த அறிவுரையைக் கேட்டு அந்த இளைஞன் நாள்தோறும் கோயிலுக்கு வந்து, திருப்பலியில் கலந்துகொண்டு இறைவார்த்தையைக் கேட்டான். அது அவனை நற்செயல்கள் செய்யத் தூண்டியது. இதனால் அவன் இறைவனுக்கு அஞ்சி நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினான்; பாவமும் அவனுடைய வாழ்க்கையை விட்டு முற்றிலும் விலகியது. ஒரு மாதத்திலேயே அவனிடத்தில் இப்படியொரு மாற்றத்தைக் கண்ட மறைப்போதகர் பெரிதும் மகிழ்ந்து, “தம்பி! நீ இப்பொழுது வாழ்க்கின்ற இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ். பாவம் உன்னை அணுகாது” என்று மனதார வாழ்த்தி அனுப்பினார் (Hendry Bosch)
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் மனம்மாறிப் புதிய மனிதனாக வாழத் தொடங்கியதும், மறைப் போதகர் பெரிதும் மகிழ்ந்தார். அதுபோன்று இன்றைய நற்செய்தியில், “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்” என்கின்றார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இழந்துபோனதைத் தேடிமீட்க வந்த இயேசு
இயேசு தன்னுடைய பணிவாழ்வில் எல்லாரையும் அன்பு செய்தாலும், பாவிகள், வரிதண்டுவோர், வறியவர்கள் ஆகியோரை மிகுதியாக அன்பு செய்தார். இன்னும் சொன்னப்போனால் இந்த வரிதண்டுபவர்களும் பாவிகளும்தான் இயேசு சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவரோடு உணவருந்துகிறாரே” என்றுதான் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். இப்படித் தான் சொல்வதைக் கேட்க நெருங்கி வந்த, யூத சமூகத்தால் ‘தீண்டத் தகாதவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்ட, வாழ்வையே இழந்து போயிருந்த வரிதண்டுவோர், பாவிகள் ஆகியோரின் மனமாற்றத்தால் விண்ணகத்திலும், கடவுளின் தூதரிடத்திலும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்கின்றார் இயேசு.
ஏன் பாவிகள் மனமாற்றத்தால் மகிழ்ச்சி
பொதுவாக இழந்த ஒன்றைத் திரும்பப் பெறுகின்றபொழுது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் அலாதியானது. இதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன ஆடு உவமை மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இந்த அடிப்படையில் பாவி ஒருவர் மனம்மாறுகின்றபொழுது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கடவுளுக்கும் கடவுளின் தூதர்களும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகின்றது. அப்படியானால், நேர்மையாளர்களால் கடவுளுக்கு மகிழ்ச்சி உண்டாகாதா? என்ற கேள்வி எழலாம். நேர்மையாளர்களால் கடவுளுக்கு மகிழ்ச்சி உண்டாகும், எப்பொழுது எனில், அவர்களும் தாங்கள் பாவிகள் என்ற உண்மையை உணர்ந்து, மனம்மாறுகின்றபொழுது. ஏனெனில், இந்த உலகத்தில் கடவுள் ஒருவரைத் தவிர, நல்லவர் எவருமில்லை (லூக் 19: 18)
ஆதலால், பாவிகள் மட்டுமல்லாது, தங்களை நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்கின்ற பரிசேயர்களைப் போன்றவர்களும் மனம்மாறிவிட்டால், அதைவிடக் கடவுளுக்கு மகிழ்ச்சியளிப்பது வேறெதுவும் இல்லை. எனவே, பாவிகளாகிய நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனம்மாறி விண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாகக் காரணமாக இருப்போம்.
சிந்தனை
‘கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே’ (திபா 51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் செய்த தவற்றை உணர்ந்து மனம்வருந்தி, மனம்திரும்பி ஆண்டவரிடம் செல்வோம். அதன்வழியாக விண்ணகத்தில் மகிழ்ச்சி பிறக்கக் காரணமாக இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed