
லூக்கா 1: 5-25
“நம் மன்றாட்டைக் கேட்கும் கடவுள்”
நிகழ்வு
ஒரு சிற்றூருக்கு வெளியே இருந்த திருக்கோயில் அது. அந்தத் திருக்கோயிலில் பலரும் நம்பிக்கையோடு வேண்டிவிட்டுச் செல்வதுண்டு.
ஒருநாள் அந்தத் திருக்கோயிலுக்கு வந்த விவசாயி ஒருவர், “கடவுளே! இன்றைக்குத்தான் நான் நிலத்தை உழுது, விதை விதைத்திருக்கின்றேன். அதனால் நல்லதொரு மழையைத் தாரும்” என்று வேண்டிவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலைஞர் ஒருவர் வந்தார். அவர் கடவுளிடத்தில், “கடவுளே! இன்றிரவு இவ்வூரில் நான் தெருக்கூத்துக் கலையை நிகழ்த்த இருக்கின்றேன். அதனால் நீர் மழை பெய்யாதவாறு செய்யும்” என்று சொல்லிச் சத்தமாக வேண்டிவிட்டுச் சென்றார்.
இருவருடைய இறைவேண்டல்களையும் கேட்டுத் திருக்கோயிலுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த இறை நம்பிக்கை இல்லாத இளைஞர்க்கூட்டம் சத்தமாகச் சிரித்தது. பின்னர் அதிலிருந்த இளைஞன் ஒருவன், “ஒருவர் மழை வேண்டும் என்று வேண்டுகின்றார்; இன்னொருவர் மழை வேண்டாம் என்று வேண்டுகின்றார். கடவுள் யாருடைய வேண்டுதலுக்குத்தான் செவிசாய்ப்பார்?” என்று கேலியாய்ப் பேசினான். அதற்கு மற்ற இளைஞர்கள் “ஆமாம். கடவுள் யாருடைய வேண்டுதலுக்குச் சாய்க்கின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர்.
அன்று மாலை, பொழுது நன்றாக இருட்டியபிறகு தெருக்கூத்துக் கலைஞர், சக கலைஞர்களோடு தெருக்கூத்தினை நிகழ்த்துவதற்காக ஊரில் இருந்த ஒரு திடலில் வந்து நின்றார். ஊர் மக்களெல்லாம் அவர் நிகழ்த்தப் போகும் தெருக்கூத்தினைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்தனர். அப்பொழுது திடீரென மேகம் திரண்டுவந்து, மழை பெய்யத் தொடங்கியது. இதைப் பார்த்துவிட்டுத் தெருக்கூத்துக் கலைஞர் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவ்வூர்த் தலைவர், அங்கிருந்த பள்ளியின் தலையாசிரியரை அணுகிச் சென்று, “நம்மூருக்கு வந்திருக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள் தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கு பள்ளியில் உள்ள கலையரங்கை ஓரிரு மணி நேரங்களுக்குத் தந்தால் வசதியாக இருக்கும்” என்று சொல்ல, அவரும் அவ்வாறே செய்தார். இதனால் மக்கள் அனைவரும் தெருக்கூத்துக் கலையை இரம்மியான மழையோடு கண்டு இரசித்தார்கள்..
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையில்லாத இளைஞர்கள் “கடவுள் எல்லாருடைய வேண்டுதலுக்கும் செவிசாய்க்கின்றார். உண்மையில் அவர் மிகப்பெரியவர்” என்று சொல்லிக் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.
ஆம், கடவுள் தன்னிடம் நம்பிக்கையோடு வேண்டுகின்ற எல்லாருக்கும் செவிசாய்க்கின்றார். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவராகிய கடவுள் செக்கெரியாவின் மன்றாட்டுற்குச் செவி சாய்த்ததைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிள்ளை இல்லாத செக்கரியா–எலிசபெத் தம்பதி
ஆண்டவர் பார்வையில் நேர்மையாளர்களாய் விளங்கியவர்கள் செக்கரியாவும் எலிசபெத்தும். இவர்கள் இருவரும் கடவுளின் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாகவும் நடந்து வந்தார்கள்; ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஒருவருக்குப் பிள்ளை இல்லாமல் இருப்பது ஆண்டவர் கொடுத்த தண்டனையாகவே யூதர்களால் பார்க்கப்பட்டது (லேவி 20: 20, 21). இரு ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் செக்கரியாவும் எலிசபெத்தும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, தங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்று தொடர்ந்து நம்பிக்கையோடு மன்றாடி வந்தார்கள்.
மன்றாட்டைக் கேட்ட இறைவன்
எருசலேம் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான குருக்கள் குருத்துவப் பணியை ஆற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் இருபத்து நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டாண்டுக்கு ஒருவாரம் வீதம் (1குறி 24: 4-19) எருசலேம் திருக்கோயிலுக்குள் சென்று, தூபம் காட்டி வந்தனர். இந்நிலையில் செக்கரியாவின் முறை வந்தபோது, அவர் திருக்கோயிலுக்குள் சென்று தூபம் காட்டுகின்றபொழுதுதான் வானதூதர், “செக்கரியா, உமது மன்றாட்டுக் கேட்கப்பட்டது” என்கிறார்.
ஆம், செக்கரியாவும் அவருடைய மனைவியும் கடவுளிடம் எழுப்பிய மன்றாட்டு உடனடியாகக் கேட்கப்படாவிட்டாலும், உரிய காலத்தில் கேட்கப்பட்டது. எனவே, நாம் கடவுளிடம் எழுப்புகின்ற மன்றாட்டு கேட்கப்படவில்லை என்று பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்காமல், அவர்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திருந்தால் நம்முடைய மன்றாட்டு ஒருநாள் கேட்கப்படும் என்பது உறுதி.
ஆகவே, நாம் இறைவனிடம் நம்பிக்கையோடும் பொறுமையோடும் நம்முடைய மன்றாட்டுகளை எடுத்துரைத்து, அவர் தருகின்ற அருளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘இந்த ஏழைக் கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்’ (திபா 34:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்முடைய கூக்குரலுக்குச் செவிசாய்க்கும் ஆண்டவரிடம் நம்முடைய வேண்டுதலை நம்பிக்கையோடு எடுத்துரைத்து, அதில் இறுதிவரை நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
