
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 18: 12-14
“வழி தவறிப் போன அந்த ஓர் ஆடு நீங்களா?”
நிகழ்வு
அந்தத் துறவுமடத்தில் இருந்த துறவியிடத்தில் சீடராகச் சேர்வதற்குப் பலரும் ஆர்வம் காட்டினர். காரணம் அந்தத் துறவியிடத்தில் சீடர்களாக இருந்தவர்கள் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். இதனால் அந்தத் துறவி இருந்த துறவுமடத்தில் சீடர்களின் எண்ணிக்கை மிகுதியானது.
ஒருநாள் துறவுமடத்தில் இருந்த ஒரு சீடருடைய பொருள் காணாமல் போனது. யார் இந்தத் தவற்றைச் செய்திருப்பார் என்று சீடர்கள் தேடுதலில் இறங்கியபொழுது, குறிப்பிட்ட ஒரு சீடர்தான் அந்தத் தவற்றை செய்தார் என்ற உண்மை தெரியவந்தது. உடனே சீடர்கள் துறவியிடத்தில், “திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தச் சீடரைத் துறவு மடத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்றார்கள். அதற்குத் துறவி அவர்களிடம் மிகவும் பொறுமையாக, “பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர்களை சொல்லி அனுப்பிவிட்டார்.
இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, துறவுமடத்தில் மீண்டுமாகத் திருடு நடந்தது. இந்த முறையும் நடந்த திருட்டில், குறிப்பிட்ட அந்தச் சீடர்தான் ஈடுபட்டிருந்தார். எனவே, சீடர்கள் அச்சீடரை துறவியிடம் அழைத்துக்கொண்டு சென்று, “பார்த்தீர்களா! கடந்த முறை இவர் திருடியபொழுது, இவரைத் துறவுமடத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னோம். நீங்கள் கேட்கவில்லை. இப்பொழுது இவர் மீண்டுமாகத் திருடியிருக்கின்றார். இப்பொழுதாவது இவரைத் துறவுமடத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்றார்கள். அப்பொழுதும் துறவி அவர்களிடம், “பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.
நாள்கள் நகர்ந்தன. ஒரு மாதம் கழித்து, துறவுமடத்தில் மீண்டுமாகத் திருடு நடந்தது. இந்த முறையும் குறிப்பிட்ட அந்தச் சீடர்தான் திருடியிருந்தார். அதைவிடவும் திருடியபொழுது அவர் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டார். சீடர்கள், திருட்டில் ஈடுபட்ட குறிப்பிட்ட அந்தச் சீடரைத் துறவியிடம் இழுத்துக்கொண்டு சென்று, “இத்தோடு இவர் மூன்றுமுறை திருட்டில் ஈடுபட்டுப் பிடிபட்டிருக்கின்றார் இந்தமுறையாவது இவரைத் துறவுமடத்திலிருந்து வெளியேற்றுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்தத் துறவுமடத்திலிருந்து வெளியேறிவிடுவோம்” என்று சினத்தில் கத்த, துறவி அவர்களிடம், “இந்தத் துறவுமடத்திலிருந்து நீங்கள் வேண்டுமானால் வெளியேறுங்கள். இவர் இங்குதான் இருப்பார்” என்றார். துறவியிடமிருந்து இப்படியொரு பதிலை யாருமே எதிர்பார்த்திராததால், அவரை அவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.
அப்பொழுது அவர் அவர்களிடம், “நீங்கள் புத்திசாலிகள்; இந்தத் துறவுமடத்தை விட்டு வெளியேறினாலும் பிழைத்துக் கொள்வீர்கள்; ஆனால், இந்தச் சீடர் அப்படிக் கிடையாது. தான் செய்வது நல்லதா? கேட்டதா? என்பதுகூடத் தெரியாத அளவுக்கு இருக்கின்றார். அதனால் இவருக்கு என்னைத் தவிர வேறு யாராலும் நல்லமுறையில் பயிற்சி கொடுக்க முடியாது என்பதால், இவரை இங்கு வைத்திருக்கின்றேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட, தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்ட வந்த சீடர் தன்னுடைய தவற்றை உணர்ந்தார். அதன்பிறகு அவர் திருடவே இல்லை.
இந்த நிகழ்வில் வருகின்ற திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்த சீடரை எல்லாரும் வெறுத்து ஒதுக்கியபொழுது, துறவி அச்சீடர்மீது தனிப்பட்ட அக்கறை காட்டி அவரை நல்வழிக்குக் கொண்டு வந்தார். நற்செய்தியில் இயேசு சொல்லும் சொல்லும் உவமையில் வருகின்ற ஆயர், தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டு, வழிதவறிப் போன வழிதவறிப் போன ஓர் ஆட்டைத் தேடிச் செல்கின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
யாரும் நெறி தவறிப் போய்விடக்கூடாது என விரும்பும் தந்தைக் கடவுள்
இன்றைய நற்செய்தி நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் இயேசு, “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டிக் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது” (மத் 18: 6) என்று கூறியிருப்பார். இயேசு இங்குக் குறிப்பிடப்படும் ‘சிறியோர்’ வயதில் சிறியவர் மட்டும் கிடையாது. அறிவில், அனுபவத்தில் சிறியவராகவும் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் எதையும் நன்மையா? தீமையா? என்று பகுத்துப் பார்க்கும் திறன்கூட இல்லாதவர்கள். அடிப்படையில் இவர்கள் வலுவற்றவர்கள். ஆதலால், வலுவற்றவராய், எதையும் பகுத்துப் பார்க்கும் திறனற்றவர்களாய் இருக்கும் ஒருவரைத் தேடி, கடவுள் தொண்ணூற்று ஒன்பது பேரைக்கூட விட்டுவிட்டு வருவர் என்கின்றார் இயேசு. இதற்கு முக்கியக் காரணம், யாரும் நெறி தவறிப் போய்விடக்கூடாது என்பதே ஆகும். ஆண்டவர் இயேசுகூட இழந்து போனதைத் தேடி மீட்கவே வந்தார் (லூக் 19: 10)
இத்தகைய சூழ்நிலையில், நாம் செய்த தவற்றினால் வழிதவறிப் போன ஆடாக இருக்கலாம். மற்றவர்களும்கூட தாங்கள் செய்த தவற்றினால் வழிதவறிப் போன ஆடாக இருக்கலாம். எனவே, நாம் வழிதவறிப் போயிருந்தால், ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவோம். மற்றவர்கள் வழிதவறிப் போயிருந்தால், அவர்களிடம் ஆண்டவரின் பேரன்பை எடுத்துச் சொல்லி, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வர வழிவகை செய்வோம்.
சிந்தனை
‘நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் ஆண்டவர் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக’ (தோபி 13:12) என்கிறது தோபித்து நூல். ஆகையால், வழிதவறிப் போன ஆடாய், நலிவுற்றவராய் இருக்கும் நாம் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed