
பொதுக்காலம் பதினாறாம் வாரம்
சனிக்கிழமை
மத்தேயு 13: 24-30
யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம்மாற விரும்பும் இறைவன்
நிகழ்வு
தூய வின்சென்ட் ஃபெரர் குருவாகப் பணிசெய்துகொண்டிருந்த இடத்தில் பெண் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்திற்குத் தவறாது வருவார். அதேநேரத்தில் அவர் துன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் பல ஆண்களும் கெட்டுப் போகக் காரணமாக இருந்தார். இதையறிந்த வின்சென்ட் ஃபெரர் தன்னுடைய மறையுரைகளில் பாவத்தின் விளைவுகளைக் குறித்தும் மனம்மாறி வருகின்றவர்களை இறைவன் அன்போடு ஏற்றுக்கொள்வதைக் குறித்தும் தொடர்ந்து போதித்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் ஆற்றிய மறையுரைகள் அந்தப் பெண்மணியின் உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
ஒருநாள் வின்சென்ட் ஃபெரர் ஆற்றிய மறையுரையைக் கேட்டு அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுது தரையில் விழுந்தார். விழுந்த அவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம், அந்தப் பெண் தன்னுடைய பாவத்தை நினைத்து மனம்வருந்தி அழுது அழுது அப்படியே இறந்துபோனார். அவர் இறந்தது தெரிந்ததும் ஆலயத்தில் இருந்த அனைவரும் அவரைச் சுற்றிக்கூடி பலவாறாகப் பேசத் தொடங்கினார். “இவள் ஒரு பாவி… அதனால் இவள் நரகம்தான் செல்வாள்” என்றார்கள்.
எல்லாரையும் விலக்கிக்கொடு அங்கு வந்த வின்சென்ட் ஃபெரர், “இந்தப் பெண் பாவியாக இருந்தாலும், இவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். அதனால் இவர் உத்தரிக்கத் தலம் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனால் இவர்க்காக நாம் இறைவனிடம் மன்றாடுவோம்” என்றார். அப்பொழுது ஓர் அசரீரி ஒலித்தது. அது, “இந்தப் பெண் மிகப்பெரிய பாவியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் தன்னுடைய தவற்றை உணர்ந்ததால், இறைவன் இவரை விண்ணகத்தில் சேர்த்துக்கொண்டார்” என்றது. அதைக்கேட்டு எல்லாரும் மெய்ம்மறந்து நின்றார்கள்.
இறைவன், இவ்வுலகில் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கினாலும், யாரெல்லாம் தங்களுடைய தவற்றை உணர்ந்து மனம் வருந்துகிறார்களோ அவர்கள் மட்டில் அவர் இரக்கம்கொண்டு, அவர்களைத் தன்னுடைய பேரின்ப வீட்டினில் ஏற்றுக்கொள்கின்றார் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகளின் உவமை வழியாக இறுதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதையும் தங்களுடைய தவறுகளை உணர்ந்து வருந்துவோர் மட்டில் இறைவன் எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருக்கின்றார் என்பதைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றார். நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நல்லதாகவே படைத்த இறைவன்
நற்செய்தியில் ஆண்டவர் வயலில் தோன்றிய களைகள் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமை நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. அதில் முதன்மையானது, கடவுள் இந்த உலகத்தில் படைத்த அனைத்தும் நல்லதாகவே படைத்தார் என்பதாகும். உவமையில் வரும் மனிதர் தன்னுடைய வயலில் நல்ல விதைகளை விதைத்தார் என்பது, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் தான் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன (தொநூ ௧:31) என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றன. அப்படியானால் இந்த உலகத்தில் தோன்றிய களைகள் போன்ற தீமைகள், கலவரங்கள், இன்ன பிற யாவும் சாத்தானின் வேலைகள் என்றுதான் சொல்லவேண்டும்.
தீயோர் மனம்மாறக் காலம்தாழ்த்தும் இறைவன்
உவமையில் நிலக்கிழாரிடம் அவருடயை பணியாளர்கள், நிலத்தில் களைகள் இருப்பது பற்றியும் அவற்றை அகற்றவேண்டும் என்பது பற்றியும் சொல்கின்றபோது நிலக்கிழார் அவர்களிடம், அறுவடைக் காலம் காத்திருங்கள் என்று சொல்கின்றது. இவ்வார்த்தைகள் பேதுரு தன்னுடைய திருமுகத்தில் சொல்கின்ற, “ஆண்டவர் காலம்தாழ்த்துவதில்லை. அவர் உங்கட்காகப் பொறுமையோடிருக்கின்றார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாறவேண்மென விரும்புகின்றார்” (2 பேது 3: 9) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. உண்மையில் மானிடர் யாவரும் அழிய வேண்டும் என்பது அல்ல, வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அதற்காக அவர் பொறுமையோடு காத்திருக்கின்றார்.
இறுதியில் ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கும் இறைவன்
இறைவன், பாவிகள் மனம்மாறக் காலம் தாழ்த்துகின்றார். அப்படியிருந்தும் அதையும் பொருட்படுத்தாமல் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் அவர்கட்கு அவர்களின் செயல்கட்கு ஏற்பத் தண்டனை கிடைக்கும் என்று இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். அதைத்தான் நாம், களைகளை எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று நிலக்கிழார் கூறுகின்ற வார்த்தைகளில் காண்கின்றோம். ஆகையால், நாம் கடவுளின் இரக்கப் பெருக்கை உணர்ந்து, மனம் மாறி அவருடைய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்டவர்’ (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் அழிந்துவிடாமல் வாழவேண்டும் என்று விரும்பும் இறைவனிடம் திரும்பி வந்து, அவர்க்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
