
பொதுக்காலம் பதினோறாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 6: 19-23
எது நிலையான செல்வம்
நிகழ்வு
ஒரு நகரில் வைர வியாபாரி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னிடமிருந்த வைரங்களையெல்லாம் விற்றுப் பணமாக்க விரும்பினார். எனவே, அவர் பக்கத்து நகரில் இருந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஒரு பணக்காரரிடம் சென்று, தன்னிடமிருந்த வைரங்களையெல்லாம் கொடுத்துவிட்டு, அதற்கு இணையான பணத்தை வாங்கி, ஒரு மரப்பெட்டியில் வைத்துக்கொண்டு, யார்க்கும் தெரியாமல் இருக்க, ஒரு காட்டுப்பாதை வழியாக வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அவர் திரும்பி வரும் வழியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அவர், ‘ஆற்றில் தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. பணம் இருக்கின்ற இந்த மரப்பெட்டியை அப்படியே தலையில் வைத்துக்கொண்டு மெல்ல நடந்து சென்றால், பத்திரமாக ஆற்றைக் கடந்து, வீட்டை அடைந்துவிடலாம்’ என்று யோசிக்கத் தொடங்கினார். அதன்படி அவர் பணம் இருந்த மரப்பெட்டியைத் தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, ஆற்றில் மெல்ல நடந்துசென்றார்
அவர் ஆற்றில் பாதிதூரம் சென்றிருப்பார். அப்பொழுது ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கவே, அவர் நிலைதடுமாறி, தன்னுடைய தலையில் வைத்திருந்த பணபெட்டியை நழுவவிட்டார். இதனால் அவருடைய பணப்பெட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது. அவரோ “ஐயோ! என்னுடைய பணப்பெட்டி போகிறதே, பணப்பெட்டி போகிறதே” என்று சத்தமாகக் கத்தத் தொடங்கினார். இதை அந்த வழியாக வந்த ஓர் இளைஞன், ‘யாரோ ஒருவர் தன்னுடைய பணப்பெட்டியை ஆற்றுக்குள் தவறவிட்டுவிட்டார் போலும்’ என நினைத்துக்கொண்டு, ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பணப்பெட்டியை வேகமாக நீந்திச்சென்று எடுத்துக்கொண்டு கரை ஏறினான்.
பின்னர் அவன் அந்த பணப்பெட்டிக்குச் சொந்தக்காரர் எங்கிருக்கின்றார் என்று சுற்றும் முற்றும் தேடினான். நீண்ட நேரமாகத் தேடியும் அவனுக்கு அந்தப் பணப்பெட்டிக்குச் சொந்தக்காரர் கண்ணில் தட்டுப்படாமல்போகவே, அவன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான், ‘இந்தப் பணப்பெட்டியின் உரிமையாளர் ‘ஆறு என்னை இழுத்துச் செல்கின்றது, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தியிருந்தால் கூட, அவரைக் காப்பாற்றியிருக்கலாம். பாவம், ‘என்னுடைய பணப்பெட்டி போகிறதே’ என்று கத்தியதால்தான், அவருடைய பணப்பெட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்று அவருடைய நிலையை நினைத்து நொந்துகொண்டான்.
பணம் பணம் என்று அலைவோருடைய வாழ்வு கடைசியில் எப்படி முடிகின்றது என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவும் பணத்தில்தான் விளையும் தீமையைக் குறித்து, விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பதன் முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுகின்றார். நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கண்ணியில் சிக்கிக்கொள்ளும் செல்வம் சேர்ப்போர்
நற்செய்தியில் இயேசு, மண்ணுலகில் செல்வத்தை சேர்த்து வைக்கவேண்டாம் என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்கவேண்டாம் என்று இயேசு சொல்வதை, செல்வமே சேமிக்கவேண்டாம் என்று புரிந்துகொள்வதை விடவும், செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்வைச் சிதைத்துக் கொள்ளவேண்டாம் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். இயேசுவின் இவ்வார்த்தைகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் கூறுகின்ற வார்த்தைகளை இங்கு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
“செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவர்கள் சோதனையான கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள். அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் ஆபத்திலும் ஆழ்த்துபவை (1 திமொ 6:9). பவுலின் இவ்வார்த்தைகள் செல்வம் சேர்ப்பதில் உள்ள தீமையை அப்படியே எடுத்துச் சொல்கின்றன. இவ்வாறு செல்வம் சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பவர்கள் இத்தகைய அழிவுக்கு ஆளாவார்கள் என்பதால்தான் இயேசு, மண்ணுலகில் அல்ல, விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேர்த்து வையுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
விண்ணுலகில் எப்படிச் செல்வத்தைச் சேர்த்து வைப்பது?
நற்செய்தியில் இயேசு, (மண்ணுலகில் அல்ல) விண்ணுலகில் செல்வத்தைச் சேர்த்து வையுங்கள் என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று இப்பொழுது பார்ப்போம். பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமடலில், நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகச் செய்யுங்கள்’ என்று குறிப்பிடுவார் (1கொரி 10: 31) இந்த இறைவார்த்தையையும் திருவெளிப்பாடு நூலில் யோவான் கூறுகின்ற, “அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவர்க்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது” (திவெ 22: 11) என்ற இறைவார்த்தையையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போமேயானால், விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பது என்பது வேறொன்றும் இல்லை. அது கடவுட்கு பணிசெய்வது, அவருடைய திருப்பெயர் விளங்கச் செய்வது என்பதே ஆகும். அத்தகைய வாழ்க்கையை வாழ்கின்ற ஒருவர் விண்ணகத்தில் செல்வம் சேர்க்கிறவர் ஆவார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆகவே, அழிந்துபோகின்ற செல்வத்தைச் சேர்ப்பத்தில் நாட்டம் கொள்ளாமல், அழியா செல்வமாகிய கடவுட்கு ஊழியம் புரிவதை தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் கொடைகளை அபரிவிதமாகப் பெறுவோம்.
சிந்தனை
‘நீங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் ஆண்டவர்க்காகச் செய்யுங்கள். ஆண்டவர் உங்கட்குக் கைம்மாறு அளிப்பார்’ (கொலோ 3: 23-24) என்பார் பவுல். ஆகவே, நாம் செய்கின்ற அனைத்தும் பணிகளையும் ஆண்டவர்க்காகச் செய்து, விண்ணுலகில் செல்வம் சேர்ப்பவர்களாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
