
தர்மம் செய்!
அதை வெளிவேடம் இல்லாமல் செய்
நிகழ்வு
ஓரூரில் அகிலன், முகிலன் என்ற இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். இதில் அகிலன் வஞ்சக மனம் கொண்டவன். முகிலனோ மிகவும் நல்லவன். இவ்விருவரும் வெளியூர் சென்று, வாணிபம்செய்து, பொருளீட்டத் தீர்மானித்தனர். முதலீடு தன்னுடையது என்றாலும், கிடைத்த வருவாயில் பாதியை அகிலனுக்குக் கொடுத்தான் முகிலன். ஆனால், முகிலனின் செல்வத்தை முழுமையாக கவரத் திட்டமிட்ட அகிலன்.
ஒருநாள் அகிலன் முகிலனிடம் “நண்பா! தர்மத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு முகிலன் “தர்மவழியில் செல்வதே சிறந்தது; எந்நிலையிலும், தர்மம் தவறக் கூடாது” என்றான். “தர்மமாவது, புண்ணியமாவது… எப்படியாவது சம்பாதித்து, பணக்காரனாக வாழ்வதுதான் புத்திசாலித்தனம். வேண்டுமானால், உன் கருத்தை பொதுமக்கள் சிலரிடம் கேட்கலாம். அவர்கள், நீ சொல்வதுதான் சரி என்று கூறினால், நீ எனக்குத் தந்த பணத்தை தந்துவிடுகிறேன். மாறாக, நான் சொல்வதுதான் சரி என்றால், உன் செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிட வேண்டும்” என்று பந்தயம் கட்டினான் அகிலன். அகிலனின் வஞ்சக உள்ளத்தை அறியாத முகிலன், அதற்கு ஒப்புக்கொண்டான். வழியில் செல்லும் சிலரிடம், இதுகுறித்து இருவரும் கேட்டனர். தர்மத்தைப் பற்றி அறியாத அவர்களோ, “அகிலன் சொல்வதே சரி” என்றனர். எனவே, பந்தயப்படி முகிலன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டான் அகிலன்.
சில மாதங்களில், மீண்டும் வியாபாரம் செய்து, பெரும் பொருள் ஈட்டினான் முகிலன். பொறாமைகொண்ட அகிலன் மறுபடியும் அதே பந்தயத்தைக் கட்டினான்; இம்முறையும் முகிலன் தோல்வியுற, அவன் கைகளை வெட்டினான் அகிலன்.
‘நல்லவர்க்கு ஏற்படும் சோதனைகூட, வெற்றியில்தான் முடியும்’ என்பதற்குச் சான்றாக, முகிலன் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்க, அவனுக்கு பெருஞ் செல்வம் சேர்ந்தது.
‘இதற்கு மேல் இவனை விட்டுவைக்கக் கூடாது’ என்று தீர்மானித்த அகிலன், ‘தோற்பவர், கண்களை இழக்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், மறுபடியும் பந்தயம் போட்டான். இப்போதும் தோற்று கண்களை இழந்த முகிலன் பல இடங்களில் சுற்றித்திரிந்து கடைசியில், ஓர் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். அங்கு துறவி ஒருவர் இருந்தார். அவர் முகிலனின் நிலையைக் கண்டு இரங்கி, சக்திவாய்ந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதை அவன்மீது தடவினார். உடனே, முகிலன் இழந்த கைகளையும் கண்களையும் பெற்றான்,
இந்நிலையில், அப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசரின் மகளுக்கு பார்வை பறி போனதால், அவளுக்கு யார் பார்வையை திரும்ப வரச் செய்கிறாரோ, அவரை தன் மகளுக்கு மணமுடித்து தருவதுடன், தன் நாட்டுக்கு அரசனாக முடிசூட்டுவதாக அறிவித்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட முகிலன் தனக்கு உதவிசெய்த துறவியின் வழிகாட்டுதலின்படி மன்னனின் மகளுக்குப் பார்வை கிடைக்குமாறு செய்து, இளவரசியை மணந்து, அந்நாட்டுக்கு அரசனானான்.
இது நடந்து சில நாட்கள் கழித்து, காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள். “அரசே! இவன் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தான். அதனால்தான் நாங்கள் இவனை உங்களிடம் பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றோம்” என்றார்கள். அவர்கள் இழுத்துக்ண்டு வந்தது வேறு யாருமல்ல பணத்தாசை பிடித்தலைந்த அகிலனைத்தான். முகிலன் அகிலனைத் தண்டிக்கவில்லை. மாறாக, அவனைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், “நீ எனக்குச் செய்த தீமையிலும் ஒரு நன்மை இருந்திருக்கிறது. நான் இங்கு அரசனாக இருப்பதற்கு முதன்மையான காரணம்தான் நீதான். ஆனால் நீ ஒன்றை மட்டும் புரிந்துகொள், ‘நாம் செய்யும் தர்மம் என்றைக்காவது ஒருநாள் நம்மைக் காப்பாற்றும்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அவனுக்கு நிறையப் பொருளுதவி செய்து அனுப்பிவைத்தான்.
நாம் செய்யும் தர்மம் நிச்சயம் ஒருநாள் நம்மைக் காப்பாற்றும் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் தர்மம் செய்வதன் முக்கியத்துவத்தை அதிலும் குறிப்பாக அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
வெளிவேடமில்லாமல் தர்மம் செய்யப்படும்
நற்செய்தியில் இயேசு யூத சமயத்தின் மூன்று முதன்மையான தூண்களான தர்மம் செய்தல், நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்தல் ஆகிய மூன்றில் முதலாவது மற்றும் மூன்றாவதைக் குறித்துப் பேசுகின்றார். இதில் முதலாவது இடம்பெறும் தர்மம் செய்வதைக் குறித்து மட்டும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
‘உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்’ (லூக் 12:33) என்று சொல்லும் இயேசு, இன்றைய நற்செய்தியில் மக்கள் பார்க்கவேண்டுவேண்டும் என்றும் நீங்கள் தர்மம் செய்யும்போது தம்பட்டம் அடிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார். இயேசு இவ்வாறு சொல்வதற்குக் காரணமில்லாமல் இல்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பலர், மக்கள் தங்களைப் புகழவேண்டும், பாராட்டவேண்டும் என்றே தர்மம் செய்தார்கள். அதனால்தான் இயேசு, இதுபோன்று மக்கள் பார்க்கவேண்டும் புகழவேண்டும் என்று தர்மம் செய்கிறவர்கள் தங்களுடைய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என்று சொல்கின்றார்.
அப்படியானால் ஒருவர் தான் செய்கின்ற தர்மத்தினை ஏற்படிச் செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகின்றார்; “நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” என்கிறார் இயேசு. இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நாம் செய்கின்ற தர்மம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், கடவுட்கு மட்டுமே தெரியக்கூடிய அளவில் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தர்மத்திற்கு மட்டுமே இயேசு விரும்பும் தர்மமாகவும். மேலும் அத்தகைய தர்மத்திற்குக் கடவுள் தக்க கைம்மாறு தருவார்.
சிந்தனை
‘பிறர்க்கு கொடுப்பதினாலோ அல்லது தர்மம் செய்வதினாலோ யாருமே ஏழையாகிவிடுவதில்லை’ என்பார் ஆனி பிராங் என்ற எழுத்தாளர். ஆகவே, நாம் தர்மம் செய்வோம், அதுவும் எந்தவொரு வெளிவேடமும் இல்லாமல் தர்மம் செய்வம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
