
பொதுக்காலம் பதினோறாம் வாரம்
திங்கட்கிழமை
மத்தேயு 5: 38-42
தீமைக்குப் பதில் நன்மை செய்வோம்!
நிகழ்வு
ஒரூரில் நிலவன் என்றொரு விவசாயி இருந்தார். மிகுந்த இரக்ககுணம் படைத்த அவர் ஊரில் யார் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தாலும் அவரைத் தன்னுடைய குதிரையில் ஏற்றிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்துவிட்டு அவரைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு வருவார். தவிர, உதவி என்று யார் வந்தாலும் அவர்கட்கு மனங்கோணாமல் உதவி செய்வார். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட நிலவனின் விளைநிலம் ஒவ்வோர் ஆண்டும் நன்றாக விளைந்து வந்தது.
இது நிலவனின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த கதிரவனுக்குப் பிடிக்கவே இல்லை. அடிப்படையில் பயங்கர சோம்பேறியான கதிரவன் நோகாமல் முன்னுக்கு வர வேண்டுமென்று நினைத்தான். ஆனால் அது சாத்தியப்படாமல் போனதால், விளைநிலமெல்லாம் நன்றாக விளைந்து, மிகவும் மகிழ்ச்சியாக வாழந்துவந்த நிலவன்மிது பொறாமை கொள்ளத் தொடங்கினான். அந்தப் பொறாமையே கதிவனை நிலவனுக்கு எதிராகச் செயல்பட வைத்தது.
ஒரு நாள் இரவு. ஊரிலிருந்த எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்த சமயம், கதிரவன் நிலவனுடைய வயிலில் தீ வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் தன்னுடைய வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டான். நிலவனின் வயல் எரிவதைப் பார்த்த ஒருசிலர் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டியொழுப்பி அவர்க்கு உண்மையைச் சொன்னார்கள். அவர் வயலுக்குப் போவதற்குள் வயல் பாதிக்கு மேல் எரிந்திருந்தது. அதன்பிறகு அண்டை வீடுகளில் இருந்த ஆட்களை உதவிக்கு அழைத்து ஒருவழியாகத் தீயை அணைத்தார் நிலவன். அதற்குள் தீயானது முக்கால் வாசி வயலை எரித்திருந்து.
‘யார் இந்தப் பாதகச் செயலைச் செய்திருப்பார்கள்’ என்று நிலவன் யோசித்துப் பார்த்தார். அவர்க்கு கதிரவன் மேல் சிறிது சந்தேகம் வந்தது. நெருப்பு கதிரவன் வீட்டுக்குப் பின் பக்கத்திலிருந்து தொடங்கி இருந்ததால் அவன்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டார். இருந்தாலும் அவர் அதனைக் கதிரவனிடம் கேட்காமல் அமைதியாய் இருந்தார்.
இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் நள்ளிரவு வேலையில், நிலவன் தன்னுடைய வீட்டில் நன்றாகத் தூக்கிக் கொண்டிருந்தபோது மக்கள் அழுது ஒப்பாரி வைப்பது அவர்க்குக் கேட்டது. உடனே அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து என்னவாயிற்று என்று பார்க்க வந்தார். அப்போதுதான் கதிரவனின் மகன் மருந்தைக் குடித்து, உயிர்க்குப் போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனே அவர் கதிரவனின் மகனைத் தன்னுடைய குதிரை வண்டியில் போட்டுக் கொண்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றினார்.
இதற்குப் பின்பு ஒருநாள் கழித்து கதிரவன் நிலவனைப் பார்க்க வந்தான். அவன் நிலவனிடம், “நிலவா! என்னை மன்னித்துக் கொள். உன்னுடைய வயலைக் கொழுத்தியது நான்தான்” என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு நிலவன், “எல்லாம் எனக்குத் தெரியும்” என்றார். “என்ன! எல்லாம் உனக்குத் தெரியுமா? அப்படி இருந்தும் எப்படி உன்னால் என்னுடைய மகனைக் காப்பாற்ற முடிந்தது” என்றான் கதிரவன். அதற்கு நிலவன், “உன்னைப் போன்று நானும் தீமைக்குப் பதில் தீமை செய்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை உணர்ந்தேன். அதனால்தான் உயிர்க்குப் போராடிக் கொண்டிருந்த உன் மகனைக் காப்பாற்றினேன்” எனறார். இதைத் தொடர்ந்து கதிரவன் தன் தவறை உணர்ந்து நிலவனிடம் மன்னிப்புக் கேட்க, இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
தீமைக்குப் பதில் தீமை செய்யாமல் நன்மை செய்த நிலவன் நமது பாராட்டிற்குரியவர். இன்றைய நற்செய்தி வாசகமும் இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
தீமைக்குத் தீமை தீர்வாகாது
நற்செய்தியில் இயேசு, ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ (விப 21: 23-25) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு மற்றாக ‘தீமை செய்வோர்க்கு நன்மை செய்யுங்கள்’ என்ற புதிய கட்டளையைக் கொடுக்கின்றார். இயேசு இக்கட்டளையைக் கொடுக்க மிக முக்கியமான காரணம், தீமைக்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது என்பதால்தான். மேலும் தீமைக்கு நன்மை செய்யும்போது, அத்தீமை செய்தவன், இப்படிப்பட்டவர்க்கா நான் தீமை செய்தேன்!’ என்று திருந்த வாய்ப்பிருக்கிறது. அதனால்தான்இயேசு அப்படிச் சொல்கிறார்.
பவுல் இதே கருத்தைத்தான், தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர், எல்லார்க்கும் நன்மை எனக் கருதுபவற்றையே எண்ணுங்கள் என்றும் தீமையால் தீமையை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள் என்றும் (உரோ 12: 17, 21) இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். ஆகையால், இயேசுவின் இக்கட்டளையை உள்ளத்தில் தாங்கியவர்களாய் நன்மை செய்ய முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘தன்னை வெட்டுவோர்க்கும் நிழல் தருமாம் மரம்’. எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரைப் போன்று தீமை செய்வோர்க்கும் நன்மை செய்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
