
பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம்
திங்கட்கிழமை
லூக்கா 7: 1-10
‘பணியாளர்மீது நூற்றுவத்தலைவர் மதிப்பு வைத்திருந்தார்’
நிகழ்வு
சில ஆண்டுகட்கு முன்னம், நம்முடைய இந்திய இராணுவத்தில் போர் விமான ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் விஷால் என்ற போர் விமானி (Jet Pilot). ஒருநாள் அவர் போர் விமானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரி நாட்டுப் படையினர் அவர் சென்றுகொண்டிருந்த போர் விமானத்தின்மீது ஏவுகணையைக் குறி பார்த்து அடித்தனர். இதனால் அந்த விமானமே சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. அவருடைய நல்ல நேரத்திற்கு, அந்த விமானத்தில் வான் குடையானது (Parachute) வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அந்த வான்குடையில் ஏறிக்கொன்று, பத்திரமாகக் கீழே இறங்கினார்.
இது நடந்து ஓராண்டு கழித்து, விஷாலும் அவருடைய மனைவியும் ஓர் உணவகத்தில் சாப்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவரிடம் வந்து பேசிய ஒருவர், “நீங்கள்தானே போர் விமானி விஷால்? உங்களைத் தானே எதிரிகள் ஏவுகணையை வைத்துத் தாக்கினார்கள்? இப்பொழுது நீங்கள் பத்திரமாக இருக்கின்றீர்கள்தானே? “ என்று கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். ‘என்னைக் குறித்து இவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றாரே… இதுவரைக்கும் நான் இவரிடம் பேசியதுகூடக் கிடையாதே… இவர் யாராக இருக்கும்?’ என்று யோசிக்கத் தொடங்கினார்.
பின்னர் விஷால் அவரிடம், “ஆமாம், என்னைக் குறித்து இவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “நான்தான் நீங்கள் ஓட்டிச்சென்ற போர் விமானத்தில் ‘வான் குடையை’ எடுத்து வைத்தவன்” என்றார். இதைக் கேட்டுவிடு போர் விமானி விஷால், “ஓ நீங்கள் போர் விமானத்தில் வான்குடையை வைத்தவரா? இத்தனை நாளும் இது தெரியாமல் இருந்திருக்கின்றேன்… மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, தன்னுடைய மனைவியோடு வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்கு வந்த விஷால் அந்தப் பணியாளரைக் குறித்தே சிந்திக்கத் தொடங்கினார். ‘சே! நம்முடைய உயிரை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கின்றார். அப்படியிருந்தும் இத்தனை நாட்களாக அவரைக் குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றேனே! என்ன மனுஷன் நான்” என்று தன்னையே நொந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற போர் விமானி விஷாலைப் போன்றுதான் பலரும் தங்கட்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் யார்? அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அவர்களுடைய குடும்பம் எப்படியிருக்கின்றது? என்பதைக் குறித்து சிறிதும் தெரியாமலும், தெரிந்துகொள்ள விருப்பமில்லாமலும் இருப்பதைக் காண முடிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தனக்குக் கீழ் பணிபுரிந்த ஒரு பணியாளர் உயிர் பிழைக்கச் செய்யவேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்கின்ற – ஆண்டவர் இயேசுவின் உதவியை நாடுகின்ற நூற்றுவத் தலைவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். நூற்றுவத் தலைவர் தன்னுடைய பணியாளர்மீது கொண்டிருந்த அன்பும் மதிப்பும் எத்தகையது? அதற்காக அவர் என்ன செய்தார்? என்பவை பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.
பணியாளர்களை விலங்கினும் கீழாக நடத்திய/ நடத்தும் சமூகம்
தொழிலாளர் நலச்சங்கம், தொழிலாளர்களின் உரிமைகள் என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்கூட தொழிலார்களை ஒரு பொருட்டாக மதிக்காத ஒருநிலைதான் இருக்கின்றது. அப்படியானால், இவையெல்லாம் இல்லாத காலக்கட்டத்தில் தொழிலார்கள் அல்லது பணியாளர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அச்சமாக இருக்கின்றது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இயேசு வாழ்ந்த காலத்தில், பணியாளர்கள் எல்லாம் அடிமைகளைப் போன்று, ஏன், விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு வந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியில் வருகின்ற நூற்றுவத் தலைவரோ தன்னுடைய பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருக்கின்றார். அவர் அந்தப் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்தார் என்றால், அவர்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார் என்றுதான் சொல்லலாம். இப்படிப் பணியாளர்களை அடிமைகள் போன்று நடத்தும் தலைவர்கட்கு நடுவில், தன் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்ததால், நூற்றுவத் தலைவர் மற்றவர்களை விட அவர் தனித்துத் தெரிகின்றார்.
பணியாளர் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த நூற்றுவத் தலைவர்
நூற்றுவத் தலைவர் தன் பணியாளர்மீது மதிப்புக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொருட்டு – அவர் நலம் பெறும்பொருட்டுத் தன் நிலையிலிருந்து இறங்கி வருகின்றார். நூற்றுவத் தலைவர் நினைத்திருக்கலாம், ‘நான் எவ்வளவு பெரிய ஆள். ஒரு சாதாரண யூதப் போதகரிடம் இறங்கிப் போவதா? அதுவும் ஒரு பணியாளர்க்காக’ என்று. ஆனால், அவர் அப்படி நினைக்காமல், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி, தனது பணியாளர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கின்றார். அது மட்டுமல்லாமல், இயேசு தன்னுடைய வீட்டில் அடியெடுத்து வைக்க தான் தகுதியற்றவன் என்பதைத் தன் பணியாளர்கள் வழியாக அவரிடம் சொல்லச் சொல்கின்றார். இந்தத் தாழ்ச்சியும் நம்பிக்கையுமே, நூற்றுவத் தலைவருடைய பணியாளர்க்கு இயேசுவிடமிருந்து நலனைப் பெற்றுத் தருகின்றது.
நூற்றுவத் தலைவரிடமிருந்த தாழ்ச்சியும் நம்பிக்கையும் சக மனிதர்க்காக இன்னொருவரிடம் இறங்கிபோகும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்’ (1 பேது 3:8) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நம்முடன் பணிபுரிபவர்களிடமும் ஏன், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமும் நூற்றுவத் தலைவரைப் போன்று இரக்கமும் அன்பும் பரிவும் மனதாழ்மையும் கொண்டு வாழ்வோம் .அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
