
தீர்ப்பிடுதல் என்னும் பெருங்குற்றம்
நிகழ்வு
அடர்ந்த காடு ஒன்றில் வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி அவனைத் திருமணம் செய்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த ஓரிரு மாதங்களிலேயே இறந்துபோனாள். இதனால் அவனே அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருசமயம் அவனிருந்த காட்டில் உணவுக்கு வழியில்லாத ஒரு நிலை வந்தது. இதனால் அவன் பக்கத்துக் காட்டுக்கு உணவு தேடிச் செல்லவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டான்.
உணவுதேடிச் செல்லும்போது, தன்னுடைய இரண்டு வயது மகனைக் கையோடு தூக்கிக்கொண்டு போகமுடியாது என்பதால், என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கினான். அப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அந்த யோசனையின் படி அவன் செயல்படத் தொடங்கினான். ஆம், அவனிடம் ஒரு நம்பிக்கைக்குரிய நாய் இருந்தது. அந்த நாயின் பாதுகாப்பில் குசந்தையை விட்டுவிட்டுப் போனால், அது எந்தவோர் ஆபத்தும் இல்லாமல் குழந்தையைப் பாதுகாத்துக்கொள்ளும் என்று முடிவுசெய்துகொண்டு, வேட்டைக்குக் கிளம்பிப் போனான். அவன் வேட்டைக்குக் கிளம்பிப் போகும்போது குளிர் மிக அதிகமாக இருந்ததால், மகனை வீட்டுக்குள் வைத்துவிட்டு வெளியே அவனுடைய ‘நம்பிக்கைக்குரிய நாயைக்’ காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றான்.
பகல் முழுவதும் உணவைத் தேடியலைத்தான். ஓரிடத்தில் அவனுக்கு ஒரு மான் அகப்படவே அதை அவன் வேட்டையாடி, தன் வீட்டுக்கு கொண்டுவரத் தொடங்கினான். வழியில் இருட்டிவிடவே, இனிமேலும் தன்னுடைய வீட்டிற்குப் போவதற்கு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்த ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டு, பொழுது விடிந்ததும் வீட்டிற்கு வரத் தொடங்கினான்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவனது நம்பிக்கைக்குரிய நாயின் வாயில் ஒரே இரத்தம். அவனுடைய குழந்தையை வேறு காணவில்லை. அவன் ஒரு நிமிடம் திடுக்கிட்டான். ‘இந்த நாய்தான் சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று நம்முடைய மகனைக் கொன்று தின்றுவிட்டதுபோலும்’ என்று நினைத்துக்கொண்டு, பக்கத்தில் கிடந்த கோடாரியால் நாயை ஒரே வெட்டு வெட்டிக் கொன்றுபோட்டான். அவன் தன் நாயை வெட்டிக் கொன்றுபோட்ட மறுகணம், வீட்டின் ஒரு மூலையிலிருந்து அவனுடைய மகனின் அழுகைச் சத்தம் கேட்டது. அவன் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போய் நின்றான்.
மகனின் அழுகைச் சத்தம் வந்த திசையை நோக்கி அவன் நகர்ந்து போனான். அங்கு அவனுடைய மகன் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் பத்திரமாக இருந்தான். ‘மகனுடைய உடம்பில் ஒரு சிறு கீறல்கூட இல்லை. அப்படியானால் நம்முடைய நாயின் வாயெல்லாம் இரத்தம்! அது எப்படி வந்தது?’ என்று அவன் யோசித்துககொண்டே வீட்டுக்கு வெளியில் வந்தான். அங்கிருந்த புதரில் ஓர் ஓநாய் உடம்பெல்லாம் இரத்தத்தோடு செத்துக்கிடந்தது. அதைப் பார்த்த மறுகணம், அவன் பேச்சு மூச்சற்று நின்றான். ‘இந்த ஓநாயிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றுவதற்குதானோ நான் வளர்த்த நாயானது இரத்தக் கரையோடிருந்தது!. இந்த உண்மை தெரியாமல் அநியாயமாக எனது நன்றியுள்ள நாயை இப்படிக் கொன்றுபோட்டுவிட்டேனே’ என்று கதறி அழுதான்.
இந்த நிகழ்வில் வருகின்ற வேடன் எப்படி முழு உண்மையையும் தெரியாமல், நன்றியுள்ள நாயைக் கொன்றுபோட்டானோ, அதுபோன்றுதான் இன்று பலர் ஒருவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவரைக் குறித்துத் தீர்ப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இன்றைய இறைவார்த்தை அடுத்தவரைக் குறித்துத் தீர்ப்பிடுதல் என்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
தீர்ப்பிடுதல் ஏன் பெருங்குற்றம்
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு தீர்ப்பிடுதல் என்பது மிகப்பெரிய குற்றம் என்பதை விளக்கும் வகையில், உன் கண்ணில் உள்ள மரக்கட்டையைப் பார்க்காமல், அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பைக் கவனிப்பதேன்? முதலில் உன் கண்ணில் உள்ள மரக்கட்டயைத் தூக்கி ஏறி, அதன்பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க, எளிதாய்க் கண்தெரியும் என்கின்றார்.
மரக்கட்டை என்பது அளவில் பெரியது. அவ்வளவு பெரிய தவறை ஒருவர் தன்னிடம் வைத்துக்கொண்டு, அடுத்தவரிடம் இருக்கும் சிறு தவறைச் சுட்டிக்காட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றார் இயேசு. அடுத்ததாக, இந்த உலகத்தில் யாரும் யாரைக் குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கையில் அடுத்தவரைக் குறித்துத் தீர்ப்பிடுவது சரியானதாக இருக்காது. அதனால் தீர்ப்பிடக்கூடாது என்கின்றார் இயேசு.
பல சமயங்களில் நம்மிடம் இருக்கும் தவறை மறைக்க அடுத்தவருடைய தவறைப் பெரிதுபடுத்துகின்றோம். மேலும் அடுத்தவரைக் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலே தீர்ப்பிடுகின்றோம். இது மிகப்பெரிய தவறு. ஆகவே, இத்தகைய தவறை இனிமேலும் செய்யாமல் இருக்க முயற்சி செய்வோம்; தீர்ப்பிடாது இருக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘ஒரு மனிதனின் ஒரு செயலை வைத்துக்கொண்டு அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்று சொல்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்பார் தாமஸ் புல்லர் என்ற எழுத்தாளர். ஆகையால், ஒருவரின் செயலை வைத்து அவரைத் தீர்ப்ப்பிடுவது சரியானது கிடையாது என்பதாலும் தீர்ப்பிடும் அதிகாரம் நமக்கு இல்லை, இறைவனுக்கு மட்டுமே இருக்கின்றது என்பதாலும் யாரையும் தீர்ப்பிடாது வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed