
மத்தேயு 13: 54-58
புறக்கணிப்புகளை நாம் எப்படி அணுகுகின்றோம்?
நிகழ்வு
ஒரு நகரில் விற்பனைப் பிரதிநிதி (Sales Representative) ஒருவர் இருந்தார். அவர் தான் பணிசெய்து வந்த நிறுவத்தின் பொருள்களை ஒவ்வோர் இடமாகச் சென்று விற்பனை செய்கையில், யாரும் அவர்க்குச் சரியாகப் பதிலளிக்கவில்லை. ஒருசிலர் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியும் இன்னும் ஒருசிலர் அவரை அவமதிக்கும் மற்றும் சிலர் அவரைக் கண்டுகொள்ளாமலும் அனுப்பிவைத்தனர்.
இவற்றையெல்லாம் அவர் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் மூத்த விற்பனைப் பிரதிநிதியிடம் சொல்லி, “எல்லாரும் என்னை இப்படிப் புறக்கணிக்கின்றார்களே” என்று கண்ணீர் விட்டு அழுதார். அதற்கு அந்த மூத்த விற்பனைப் பிரதிநிதி, “உன்னைப் போன்றுதான் எல்லாரும் என்னை அவமானப்படுத்தினார்கள்… அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். சில சமயங்களில் என்னை அடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்கள். அவற்றையெல்லாம் முதலில் நான் சந்தித்தபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், நான் அவர்கள் புறக்கணிக்கின்றார்கள் என்று வருத்தப்படவில்லை. மாறாக, எந்தெந்த வழிகளில் பேசினால் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கலாம்… எந்தெந்த வழிகளில் பேசினால் அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். பின்னர் அந்த வழிகளில் நடந்தேன். இப்பொழுது என்னுடைய பணியில் தொடர்ந்து வெற்றிதான். நீயும் உன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற புறக்கணிப்புகளைப் புறக்கணிப்புகளாகப் பார்க்காமல், கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகப் பார்த்தால், உன்னுடைய வாழ்க்கையிலும் வெற்றிதான்” என்றார்.
இதைக் கேட்டுப் புத்துணர்வு அடைந்த அந்த இளைய விற்பனைப் பிரதிநிதி, தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த புறக்கணிப்புகளை கற்றுகொள்ளவேண்டிய பாடமாக எடுத்துக்கொண்டு, வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற புறக்கணிப்புகளை வெறும் புறக்கணிப்புகளாகப் பார்க்காமல், கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகப் பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இயேசுவைப் புறக்கணித்த அவருடைய சொந்த ஊர் மக்கள்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊர்க்கு வந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். முதலில் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், சிறிதுநேரத்தில், “இவர் தச்சர் மகன் அல்லவா…?” என்று புறக்கணிக்கத் தொடங்குகின்றார்கள்.
இயேசுவை அவருடைய சொந்த ஊர்க்காரர்கள் புறக்கணித்ததற்கு முதன்மையான காரணம், அவர்கள் இயேசுவை மனித முறைப்படி மதிப்பிட்டதுதான். பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் சொல்கின்ற, “முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்” (2 கொரி 5:16) என்ற வார்த்தைகள் இதை நிரூபிப்பதாக இருக்கின்றன. இயேசு மனிதராகப் பிறந்தாலும் மனிதர்களோடு வளர்ந்தாலும் இறைமகனாக இருந்தார். இந்த உண்மையை உணராமல்தான் நாசரேத்தைச் சார்ந்தவர்கள் இயேசுவைப் புறக்கணித்தார்கள்.
இயேசுவை அவர்கள் புறக்கணித்ததற்கு மற்றுமொரு காரணம் இருந்தது. அதுதான் அவர்களுடைய அறியாமை. இயேசுவின் ஊரைச் சார்ந்தவர்கள் எளிய மனத்தவர்களாகவோ, தாழ்ச்சியானவர்களாகவோ இல்லாமல் மண்டை வீங்கிகளாக இருந்தார்கள். இதனால் அவர்கட்டு இயேசு தன்னை வெளிப்படுத்தவில்லை. இயேசு தன்னை வெளிப்படுத்தாமல் போனதாலேயே (மத் 11: 27) அவர்கள் அவரை அறிந்துகொள்ள முடியாமல், அறியாமையில் இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள்.
இயேசுவைப் புறக்கணித்ததால், இழப்பு இயேசுவுக்கு அல்ல, அவர்கட்குதான்
‘தன்னுடைய சொந்த மக்களே தன்னைப் புறக்கணித்து விட்டார்களே!’ என்று இயேசு வருத்திக் கொண்டிருக்கவில்லை; அதனால் அவர்க்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக, அவரைப் புறக்கணித்ததற்காக மக்கள் பெரிய இழப்பினைச் சந்தித்தார்கள். அது என்ன இழப்பு எனில், அவர்கள் அவரிடமிருந்து ஆசியைப் பெற முடியாமல் போனார்கள் என்பதாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில், ‘அவர்கட்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்ல செயல்களைச் செய்யவில்லை’ என்ற சொற்றொடர் வருகின்றது. உண்மைதான். இயேசுவின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், அவர்கள் அவரிடமிருந்து கிடைக்கவிருந்த ஆசியைப் பெற முடியாமல் போனார்கள்.
இன்றைக்கும் கூட பலர் இயேசுவின் மீதும் அவருடைய வார்த்தையின்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்து, அவரிடமிருந்து கிடைக்கும் ஆசியைப் பெறாமல் இருக்கின்றார்கள். ஆதலால், நாம் இயேசுவிடமிருந்து ஆசியைப் பெற, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வது தேவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
சிந்தனை
‘மக்கள் உன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வாழ்ந்துகொண்டிருந்தால், அவர்களுடைய புறக்கணிப்பால் நீ இறந்துபோய்விடுவாய்’ என்பது பொன்மொழி. நாம் மக்கள் நம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும் மனந்தளராமல், இலக்கை நோக்கித் தொடர்ந்து நடந்துசெல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
