
பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
லூக்கா 11: 37-41
“உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்”
நிகழ்வு
ஒரு நாட்டில் சிற்பி ஒருவர் இருந்தார். அவர் தத்ரூபமாக சிற்பங்களை வடிக்கக்கூடியவர். ஒருநாள் அரசர் அவரை அழைத்து, ‘காண்பவர் வியக்கும் வண்ணம் அரண்மனையின் முன்பகுதியில் ஓர் அருமையான சிற்பத்தை வடித்துப் பொருத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்” என்றார். சிற்பியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு சிற்பத்தை வடிக்கத் தொடங்கினார்.
ஒருமாதம் கழித்து, அரசர் ‘சிற்பியிடம் கொடுத்த வேலை எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது’ என்று பார்ப்பதற்காக அவருடைய சிற்பக்கூடத்திற்குச் சென்றார். அங்கு அரண்மனையில் பொருத்துவதற்காக சிற்பி வடித்துவைத்திருந்த சிற்பத்தைப் பார்த்து வியந்துபோனார். பின்னர் அவர் அந்தச் சிற்பியிடம், “சிற்பியே! அரண்மனையில் முன் பகுதியில் பொருத்திவைப்பதற்காக நீ வடித்து வைத்திருக்கும் இந்த சிற்பத்தைக் கண்டு வியக்கிறேன். அதே நேரத்தில் உன்னிடம் இன்னொரு செய்தியையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
“சொல்லுங்கள் அரசே!” என்று பணிந்து நின்ற சிற்பியிடம் அரசர், “இந்த சிற்பத்தை சுவற்றில் பொருத்தத்தானே போகிறோம். அப்படியிருக்கையில் சிற்பத்தின் முன்பகுதியை பகுதியை மட்டும் நன்றாகச் செதுக்கிவிட்டு, பின்பகுதியை அப்படியே விட்டுவிட்டிருக்கலாம்தானே… ‘பின்பகுதி எப்படி இருக்கும்?’ என்று யாராவது பார்க்கப் போகிறார்களா…? இல்லை, பார்க்கத்தான் முடியுமா…? எதற்காக நீ அதில் போய் இவ்வளவு நேரம் வீணடித்தாய்…?” என்றார். அப்பொழுது சிற்பி மிகவும் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: “அரண்மனை முன் பகுதியில் பொருத்துவதற்காக நான் வடித்திருக்கும் இந்த சிற்பத்தின் பின்பகுதி எப்படி இருக்கின்றது என்று மனிதர்கள் பார்க்கின்றார்களோ? இல்லையோ? கடவுள் பார்ப்பார். அதனால்தான் நான் இந்த சிற்பத்தின் முன்பகுதியைச் செதுக்குவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேனோ, அவ்வளவு முக்கியத்துவத்தைப் பின்பகுதிக்கும் கொடுத்தேன்.”
சிற்பியிடம் வெளிப்பட்ட இந்த உண்மையை, நேர்மையை நினைத்துப் பெருமிதம் அடைந்த அரசர், அவரை மனதார வாழ்த்திவிட்டு, பரிசுகள் பல தந்துவிட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிற்பியின் செயல்பாடு, வெளிப்புறத்தை மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதும், உட்புறத்தை, உள்ளத்தை எப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கட்கு பெரிய சாட்டையடியாக இருக்கும் என்றால் மிகையில்லை. நற்செய்தியில் இயேசு நம்முடைய வெளிப்புறம் மட்டுமல்ல, உட்புறமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர்
நற்செய்தியில், பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைக்கின்றார். அவர் இயேசுவை எதற்காக விருந்துக்கு அழைத்தார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதிகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசுவுக்கும் பரிசேயர்கட்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்துபார்ப்பார்கள். ‘இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்’ என்று சொல்வார்கள்… ‘அடையாளம் கொடும்’ என்று கேட்பார்கள். எல்லாவற்றிலும் இயேசு அவர்களை மிக இலகுவாக வெற்றிகொள்வார். இத்தகைய சூழ்நிலையில் இயேசுவுக்கு எதிராக அடுத்து என்ன செய்து அவரைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற முனைப்பில்தான் பரிசேயர் ஒருவர் அவரைத் தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைக்கின்றார்.
பரிசேயரின் அழைப்பினை ஏற்று இயேசு அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அங்கு இயேசு உட்பதற்கு முன்னம் கை கழுவாதைக் கண்டு அவர் வியப்படைகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவர்க்குப் பாடம் புகட்டுகின்றார்.
வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் தூய்மையாக வைத்திருங்கள்
பரிசேயர்கள் மூதாதையர் மரபான தட்டுகளையுயம் கிண்ணங்களையும் வெளிப்புறத்தில் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்; ஆனால், தங்களுடைய உள்ளத்தையோ தீமைகளால் நிரப்பி வைத்திருந்தார்கள். அவர்களுடைய உள்ளம் தீமையால் நிரம்பி வழிந்திருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இயேசுவுக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்ததும் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொண்டதும் ஆகும். அதனால்தான் இயேசு அந்த பரிசேயரைப் பார்த்து, “உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்கட்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும்” என்கிறார். உட்புறத்தில் உள்ளத்தைத் தர்மமாகக் கொடுக்கவேண்டும் என்றால், உள்புறத்தில் உள்ளது தூய்மையாக இருந்தால் மட்டுமே கொடுக்க முடியும்.
எனவே, இயேசு பரிசேயர்க்குச் சொன்ன இந்த செய்தியை நமக்கும் சொல்கின்றார் என்ற உணர்வில் நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘யூதாஸ் மரம்’ என்றொரு மரமுண்டு. அதில் அருமையான மலர்கள் பூத்துக்குலுங்கும். அவற்றைப் பார்த்து மயங்கும் வண்டுகள், அந்த மலர்கள் மேல் உட்கார்ந்த சில நொடிகளில் செத்துக் கீழே விழும். காரணம் அந்த மலர்கள் எல்லாம் விசத்தன்மை வாய்ந்தவை. மனிதர்களில் சிலர் இப்படித்தான் வெளிப்பார்வை நன்றாகவும் உள்ளே விசத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் – இவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் இயேசு சொல்வதுபோல் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம். அதன்வழியாக இறைவன் தாங்கும் இல்லிடமாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
