
I யோவேல் 2: 12-18
II 2 கொரிந்தியர் 5: 20-6:2
III மத்தேயு 6: 1-6, 16-18
“கடவுளோடு ஒப்புரவாகுங்கள்”
கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கிறார். நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கிறோமா?
அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய மறையுரைகளிலும் போதனைகளிலும் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்: “கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?” என்பதுதான்.
இதைத் தொடர்ந்து கவனித்து வந்த பெரியவர் ஒருநாள் அருள்பணியாளரிடம் சென்று, “சுவாமி! உங்களுடைய மறையுரைகளில் அடிக்கடி ‘கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி வருகின்றீர்களே! அதற்கான காரணத்தை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். உடனே அருள்பணியாளர் அவரிடம், “நான் இளங்குருவாய் இருந்த காலக்கட்டத்தில் மூதாட்டி ஒருவர் என்னிடம், “நீங்கள் ஏன் உங்களுடைய மறையுரைகளில், ‘கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார். நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தக்கூடாது! இந்த வாக்கியத்தை உங்களுடைய மறையுரைகளில் பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார்.
இதற்குப் பிறகு நான் என்னுடைய மறையுரைகளில் மூதாட்டி சொன்ன அந்த வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்தினேன். என்றைக்கு நான் அந்த வாக்கியத்தைப் பயன்படுத்தத் தொடங்கினேனோ, அன்றையிலிருந்து மக்கள் நடுவில் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கின்றேன். அதனால்தான் நான் அந்த வாக்கியத்தை அடிக்கடி என்னுடைய மறையுரைகளில் பயன்படுத்துகின்றேன்” என்றார்.
ஆம். கடவுள் நம்மோடு ஒப்புரவாக இருக்கின்றார்; நாம் கடவுளோடு ஒப்புரவாக இருக்கின்றோமா?’ என்பதுதான், தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டிய கேள்வியாக இருக்கின்றது. இன்று நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளோடு நாம் ஒப்புரவாவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துச்சொல்கின்றது. அதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
திருநீற்றுப் புதன் – கிறிஸ்தவர்களுக்கான பாவக் கழுவாய் நாள்:
இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏழாம் மாதம், பத்தாம் நாளில் நோன்பிருக்க வேண்டும். அன்றைய நாளில் அவர்கள் தூய்மையாகும்படி, குரு பாவக்கழுவாயை நிறைவேற்றுவார். குரு பாவக்கழுவாயை நிறைவேற்றியதும் அவர்கள் தூய்மையடைவார்கள் (லேவி 16: 29-31). மேலும் அவர்கள் பாவமன்னிப்புப் பெற சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்காரவேண்டும் (யோனா 3: 7).
திருஅவையின் தொடக்கக் காலக்கட்டத்தில், அதிலும் குறிப்பாக முதலாம் கிரகோரி திருத்தந்தையாக இருந்த காலக்கட்டத்தில் (590-604) மிகப்பெரிய பாவம் செய்தவர்கள், சாக்கு உடை அணிந்து, சாம்பலில் உட்கார வேண்டும் என்று அறிவுறுத்தினார். 1091 ஆம் ஆண்டு நடந்த பெனவெந்தோ சங்கமானது, தவக்காலத்தின் முதல் நாளில், சாம்பல் பூசிக்கொண்டு நோன்பிருக்கவேண்டும் என்றது. அப்படித்தான் தவக்காலத்தின் முதல் நாளில் நெற்றியில் சாம்பல் பூசும் வழக்கம் உண்டானது. இஸ்ரயேல் மக்கள் எப்படிப் பாவப் பரிகார நாளில் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருந்தார்களோ, அப்படி கிறிஸ்தவர்களாகிய நாம் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொண்டு நோன்பிருக்கின்றோம். ஆகவே, திருநீற்றுப் புதன் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு பாவக்கழுவாய் நாள் என்று சொல்லலாம்.
இன்றைய நாளில் அருள்பணியாளர் சாம்பலைக் கையில் எடுத்து ஒவ்வொருவருடைய நெற்றிலும் சிலுவை அடையாளம் வரைந்து, ‘மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய்; மண்ணுக்கே திரும்புவாய்’ அல்லது ‘மனம்மாறி, நற்செய்தியை நம்புங்கள்’ என்கிறார். அருள்பணியாளர் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள், நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி, ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.
கடவுளோடு ஒப்புரவாவதற்கான அழைப்பு:
திருத்தூதர் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்கின்றார். இத்தகைய வேண்டுகோளை அவர் தாமாக அல்ல, கடவுளே விடுப்பதாகக் கூறுகின்றார். புனித பவுல் சொல்வதுபோல், நாம் கடவுளோடு ஒப்புரவாகவேண்டுமெனில், எப்படி ஒப்புரவாக வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோவேல் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார்.
கடவுளைப் பலியினால் மகிழ்விக்க முடியாது; எரிபலி செலுத்தினாலும் அதில் அவர் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே (திபா 51: 16-17). ஆகவே, கடவுளோடு ஒப்புரவாக வரும்பொழுது அல்லது அவரிடம் திரும்பி வருகின்றபொழுது ஒருவர் நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு வரவேண்டும். அதையே இறைவாக்கினர் யோவேல், உங்கள் உடைகளை அல்ல, உங்கள் இதயத்தைக் கிழித்துகொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார்.
கடவுளோடு ஒப்புரவாவதற்கான மூன்று வழிகள்:
மேலார்ந்த விதமாக அல்ல, உள்ளார்ந்த விதமாகக் கடவுளிடம் ஒப்புரவாக வேண்டும், அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று இன்றைய முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் எடுத்துக்கூறுகின்ற வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் நாம் கடவுளோடு எப்படியெல்லாம் ஒப்புரவாகலாம் என்பதற்கான மூன்று வழிகளை எடுத்துச் சொல்கின்றது.
அறச்செயல்கள், நோன்பு, இறைவேண்டல் ஆகிய மூன்றும் யூத சமயத்தின் மூன்று முக்கியமான தூண்கள். இம்மூன்றையும் கடவுளோடு ஒப்புரவாவதற்கான வழிகளாக இன்றைய நற்செய்தி இயேசு சொல்கின்றார். நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு, அதிலும் குறிப்பாக வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு அறச்செயல்களை எந்தவோர் பிரதிபாலன் பாராமல் செய்கின்றபொழுது, அது கடவுளுக்கே செய்வதாக இருக்கின்றது (நீமொ 19: 17; மத் 25: 40). அப்படி நாம் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது கடவுளோடு ஒப்புரவாகின்றோம். அடுத்ததாக நாம் மேற்கொள்ளும் நோன்பின் வழியாக, உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு போன்ற தீமைகளும் பாவங்களும் காணாமல் போகின்றன. இதன்மூலம் நம்முடைய உடலை உண்மையிலேயே கடவுளுடைய கோயிலாக (1 கொரி 3: 16) மாற்றிக் கடவுளோடு ஒப்புரவாகின்றோம்.
நிறைவாக நாம் செய்யக்கூடிய இறைவேண்டுதல் கடவுளுக்கும் நமக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்துகின்றது. ஆகவே அதன்வழியாகவும் நாம் கடவுளோடு ஒப்புரவாகின்றோம். இவ்வாறு நாம் மேற்கொள்ளும் அறச்செயல், நோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றின் வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாகும்பொழுது, இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் படிப்பது போன்று, கடவுள் நம்மீது கருணை காட்டி, தம் மேலான ஆசிகளை நமக்கு வழங்குவார் என்பது உறுதி. ஆகவே, நாம் கடவுளோடு ஒப்புரவாகி, அவரது மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை:
‘நாம் ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பு காட்டுகின்றபொழுது, கடவுள் ஒப்புரவிற்கான பாதையை அமைக்கின்றார்’ என்பார் ஹாரி சாப்மேன் என்ற அறிஞர். எனவே, நாம் ஒருவர் மற்றவரிடம் காட்டும் அன்பின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாகி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
