
I விடுதலைப் பயணம் 20: 1-17
II 1 கொரிந்தியர் 1: 22-25
III யோவான் 2: 13-25
இறையன்பு – பிறரன்பு
நிகழ்வு
ஓர் ஊரில் மாதா பக்தர் ஒருவர் இருந்தார். இவர் நாள்தவறாமல் கோயிலுக்குச் சென்று, மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றி, வேண்டிவிட்டு வருவார். இதைக் கவனித்த பங்குப்பணியாளர் அவரிடம், “உங்களுக்கு மாதாவின்மீது அவ்வளவு நம்பிக்கையா…? நாள்தவறாமல் கோயிலுக்கு வருவதும், மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றுவதுமாக இருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு அந்த மாதா பக்தர், “ஆமாம், எனக்கு மாதாவின்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு… அடிப்படையில் நான் ஒரு விவசாயி. எனது நிலத்திற்குப் பக்கத்தில் ஒரு காலி இடம் இருந்தது. அதைப் பத்திரப் பதிவாளருக்கு இலஞ்சம் கொடுத்து, என்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டேன். இப்பொழுது அந்தக் காலி இடத்திற்குச் சொந்தக்காரர் எல்லாவற்றையும் அறிந்து, என்மீது வழக்குத் தொடுத்திருக்கின்றார். நீதி மன்றத்தில் தீர்ப்பு என் சார்பாக வரவேண்டும். அதற்காகத்தான் நான் நாள் தவறாமல், கோயிலுக்கு வந்து, மாதாவின் திருவுருவத்தின் முன்பாக மெழுகுதிரி ஏற்றிவிட்டுச் செல்கின்றேன்” என்றார். அந்த மனிதர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட பங்குப் பணியாளர் அதிர்ந்துபோனார்.
பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற மாதா பக்தரைப் போன்றுதான் கடவுள்மீது அன்பு அல்லது நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தங்களோடு வாழும் சகோதரர் சகோதரிகளைப் பகைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை இறையன்பு, பிறரன்பு என்றால் என்ன, இவற்றிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலாய் இருக்கின்றது. இது குறித்து நாம் சிந்திப்போம்.
கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகள்
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், பத்துக்கட்டளைத் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்தப் பத்துக் கட்டளைகளில் முதலில் வருகின்ற நான்கு கட்டள்கள் கடவுளை அன்பு செய்வதைக் குறித்தும், அடுத்து வருகின்ற ஆறு கட்டளைகள் அடுத்திருப்பவரை அன்பு செய்வதைக் குறித்தும் இருக்கின்றன.
ஆண்டவராகிய கடவுள் இந்தப் பத்துக் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்களுக்குத் தருவதற்கு முன்பாக மோசேயிடம் பேசுகின்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்….. நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப 19: 5). இதுதான் கடவுள் மோசேயிடம் பேசிய வார்த்தைகளாகும். இதன்படி இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வார்த்தைகளைக் – பத்துக் கட்டளைகளைக் – கடைப்பிடித்து, அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடியாமல், அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள்; மட்டுமல்லாமல், அவர்கள் தங்களோடு இருந்த வறியவர்களை ஒடுக்கினார்கள். இதனால் “அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது, தன்னை அன்புசெய்வது போல பிறரையும் அன்பு செய்வது” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கும் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், கடவுள் தங்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள்.
எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய இயேசு
இறையன்பையும் பிறரன்பையும் வலியுறுத்தும் பத்துக்கட்டளைகளைக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருக்க, அவர்களோ அவற்றைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தார்கள் என்று சிந்தித்தோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துகின்ற நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம். இந்த நிகழ்வுகூட இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் எதிராக மக்கள் நடந்துகொண்டதாலேயே நடந்து என்றுகூடச் சொல்லலாம்.
கி.மு. 949 ஆம் ஆண்டு சாலமோன் மன்னர் முதல் கோயிலைக் கட்டியெழுப்பினார். இக்கோயிலானது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. அத்தோடு எருசலேமில் இருந்தவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் (2அர 25). இவ்வாறு பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் திருக்கோயிலானது எஸ்ரா மற்றும் நெகேமியா ஆகியோரின் தலைமையில் 515 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டியெழுப்பட்டது; இது செருபாபேல் கோயில் என அழைக்கப்பட்டது. இக்கோயிலானது பின்னர் ஏரோது மன்னனால் நாற்பத்து ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டது.
இத்தகைய நீண்டநெடிய பாரம்பரியம் கொண்ட எருசலேம் திருக்கோயிலைத்தான் இயேசு தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு காரணங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஒன்று, எருசலேம் திருக்கோயிலில் நடந்த முறைகேடு. ஆண்டுதோறும் பாஸ்காவிழாவைக் கொண்டாட எருசலேமிற்குச் செல்கின்றவர்கள் திருக்கோயிலில் பலியிட ஆடுமாடுகளை கொண்டுசெல்வர் (இச 12: 5-7); ஆனால், திருக்கோயிலின் வளாகத்திலேயே ஆடு மாடுகளின் விற்பனை நடைபெற்றதால், மக்கள் தங்களோடு ஆடுகளைக் கொண்டு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. இவ்வாறு திருக்கோயிலின் வளாகத்திற்குள் விற்கப்பட்ட ஆடு மாடுகளின் விலை மிகுதியாக இருந்தது. மேலும் நாணய மாற்றுதலிலும் முறைகேடுகள் நடந்தன. எவ்வாறெனில் பல இடங்களிலிருந்தும் வந்த மக்கள் கோயில்வரியினைச் செக்கேலில் செலுத்தவேண்டியிருந்தது. இதன்மூலம் நாணய மாற்றுவோர் மிகுதியாக இலாபம் அடைந்தனர்.
இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துவதற்கான இரண்டாவது காரணம், பிற இனத்தாருக்கான வழிப்பாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் ஆகும். சாலமோன் மன்னர் எருசலேம் திருக்கோயிலைக் கட்டிமுடித்து, அதை அர்ச்சிக்கின்றபொழுது, அன்னியர் அல்லது பகைவர் இத்திருக்கோயிலை நோக்கி வேண்டிக்கொண்டால், நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, நீதி வழங்குவீராக (1 அர 8: 48-49) என்று கடவுளிடம் வேண்டியிருப்பார். மேலும் எருசலேம் திருக்கோயில் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என்று ஆண்டவரே சொல்லியிருப்பார் (எசா 56: 7). உண்மை இப்படியிருக்கையில், எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் பிற இனத்தார் வழிபடும் இடத்தில் வாணிபம் செய்ததால்தான் இயேசு அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார்.
எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் அதிலும் குறிப்பாக அதை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிற இனத்து மக்களையும் அன்பு செய்திருந்தால் அங்கு வாணிபம் செய்திருக்கமாட்டார்கள். இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாதாலேயே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.
இறையன்புக்கும் பிறரன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இயேசு
இஸ்ரயேல் மக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, எருசலேம் திருக்கோயிலை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, இயேசு இறைவனையும் பிறரையும் அன்பு செய்கின்றார். அவர் இறைவனையும் பிறரையும் அன்பு செய்தார் என்பதன் அடையாளம்தான், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு.
இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தும்பொழுது சொல்லக்கூடிய வார்த்தைகள், “என் தந்தையின் இல்லம்” என்பதாகும். தந்தைக் கடவுளின்மீது, அவரது இல்லத்தின்மீது இயேசு உண்மையான அன்பு கொண்டிருந்ததாலேயே அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது. அதைப்போன்று இப்பகுதியை மாற்கு நற்செய்தியில் படிக்கும்பொழுது, “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு” (மாற் 11: 17) என்று இயேசு சொல்வதாக வரும். மக்கள் எல்லாரையும் அன்பு செய்ததாலேயே அவரால் ‘மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு’ என்று சொல்ல முடிந்தது. இவ்வாறு இயேசு இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கினார். நாமும் இறைவனையும், அதேநேரத்தில் சக மனிதர்களையும் முழுமையாக அன்புசெய்ய வேண்டும். ஏனெனில் இறையன்புக்கு இணையான கட்டளை பிறரன்பு ஆகும் (மத் 22: 39)
சிந்தனை:
‘தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1யோவா 4: 20). என்பார் யோவான். எனவே, நாம் நம்மோடு வாழும் சகோதர் சகோதரிகளை அன்பு செய்து, இறைவனை அன்பு செய்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
