
அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்!” என்று அப்போஸ்தலர் எச்சரிக் கிறார் (பிலி 2:12). ”நீதிமானே இரட்சணியமடைவது அரிதானால், தேவ துரோகிக்கும் பாவிக்கும் இடம் எங்கே?” என்று அர்ச். இராயப்பர் நம்மை வினவுகிறார் (1 இரா. 4:18).
உண்மை இப்படியிருக்க, கணக்கற்ற பெரும் பாவங்களைக் கட்டிக்கொண்ட அற்ப மனிதன் நடுங்காதிருப்பானா? இனி வீணாக்குவதற்கு நேரமில்லை! ஆத்துமம் இரட்சிக்கப்படுவது முக்கியம். நேரமிருக்கும்போதே பாவி தன் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். சாவான பாவம் கண்ணியையும், வலையையும் போல் எதிர்பாராத நேரத்தில் அவனைச் சிக்க வைக்காதபடி அவன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
அவன் தன்னை முழுவதும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இனியாவது தன் மரண நேரத்தில் தனக்கு மன வேதனை தராமல் ஆறுதல் தரக்கூடிய முறையில் அவன் வாழத் தொடங்க வேண்டும்; அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்; ஆபத்தான பாவ சமயங்களை விட்டுவிலக வேண்டும் கடவுளுக்கு சித்தமானால் உலகத்தையுமே துறந்துவிட வேண்டும். உனது நித்திய இரட்சணியத்தை நிச்சயப்படுத்த வழி தேடு. இப்படி இதை நிச்சயப்படுத்துவதற்காக, நீ எவ்வித பரித்தியாகம் செய்தாலும், எதெதை விலக்கினாலும் அது அதிகமென்று சற்றும் எண்ணாதே.
“நிர்ப்பாக்கிய மனிதா! பரமபிதா காலத்தையெல்லாம் உன் கையில் அடக்கி வைத்தது போல் ஏன் எதிர்காலத்தை நினைத்தபடி வாழ்கிறாய்?” என்று அர்ச். பெர்னார்ட் கேட்கிறார். ”உன்கையில் ஒரு மணி நேரம் இல்லாதிருக்க, ஒரு நாள் உயிரோடிருப்பதாக எப்படிக் கணக்கிட்டுக் கொள்கிறாய்?” என்று அர்ச். அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒரு மணி நேரம் உன் ஜீவிய காலம் நீடித்திருக்கும் என்பதே நிச்சயமில்லாதிருக்க, நாளைக்கும் நான் இருப்பேன் என்று எப்படி நிச்சயமாய் எண்ணு கிறாய்? இன்று நீ மரிக்க ஆயத்தமாயிராவிட்டால், உன் மரணம் துர்மரணமாயிருக்கக் கூடுமென்று அஞ்சக்கடவாய்” என்று அர்ச். தெரேசம்மாள் தீர்மானமாய் சொல்லியிருக்கிறாள்.
இதுவே மனித வாழ்விலெல்லாம் அதிமிக முக்கியத்துவம் உள்ள அலுவல் ஆகும். ஏனெனில், அது ஆத்தும் காரியம். அது போனால் எல்லாம் போய்விடும். ”நம் ஆத்தி மற்றெல்லாப் பொருட்களையும் விட மிக விலையேறப்பெற்றது” என்கிறார் அர்ச். கிறீசோஸ்தோம். இந்தச் சத்தியத்தைக் கண்டறிவதற்கு சர்வேசுரன் தாமே நமது ஆத்துமங்களை இரட்சிப்பதற்காக தமது திருச்சுதனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததை நாம் அறிவதே போதுமானது.
நித்திய வார்த்தையானவர் தமது இரத்தத்தைச் சிந்தி அந்த ஆத்துமங்களை மீட்பதற்குப் பின்வாங்கவில்லை. ”பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் நீங்கள் (1 கொரி. 6). எனவே கடவுளின் விலைதான் மனிதனின் விலையாகவும் இருக்கிறது என்று திருச்சபைத் தந்தை ஒருவர் கூறுகிறார். மனிதனின் இரட்சணியம் மகத்தான விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பதால், அவனது விலை சர்வேசுரனின் விலைக்குச் சமமானதென்று எண்ண வாய்ப்பளிக்கிறது. ஆத்துமமானது இவ்வளவு பெரிய விலை பெறுமானால் உலகத்திலுள்ள எந்தப் பொருளை ஈடாகப் பெற்றுக் கொண்டு அதை இழக்கக் கூடும்?
தன் ஆத்துமத்தை இழந்து போக நேரிடலாம் என்று அஞ்சி நடுங்காதவன் இரட்சிக்கப்பட மாட்டான். ஆகையால் நாம் கஷ்டப்பட்டு, நமக்குப் பலவந்தம் செய்தால்தான் நாம் இரட்சணிய மடைவோம். பரலோக இராச்சியம் பலவந்தப்படுகிறது. பலவந்தம் செய்வோரே அதைப் பறித்துக் கொள்கிறார்கள் (மத். 11:12). “இரட்சணியமடைய வேண்டுமானால் நமது மரணத் தறுவாயில், நமது வாழ்வு நமது கர்த்தராகிய சேசுக்கிறிஸ்துநாதருடைய வாழ்விற்கு ஒத்ததாயிருக்க வேண்டும்.
”இரட்சிக்கப்படக் குறிப்பிட்டவர்களை அவர் தமது திருச்சுதனின் சாயலுக்கு ஒத்தவர்களாக்கினார் (உரோ 8:29). ஆதலால், ஒரு புறத்தில் சகல பாவச் சமயங்களையும் நாம் நீக்க வேண்டும். மறுபுறத்தில், இரட்சணியம் அடைவதற்கேற்ற வழிகளையெல்லாம் உபயோகிக்கவும் வேண்டும். அர்ச். பெர்னார்து சொல்கிறபடி பரலோக இராச்சியம் சோம்பேறிகளுக்குக் கொடுக்கப்படாது.
நன்றி இந்த பதிவு மாதா பரிகார மலரில் இருந்து தருகிறோம் மாதாவின் பரிகார மலர் இரண்டு மாதம் ஒரு முறை வெளியிடுகிறோம் ஆண்டு சந்தா 150 மட்டுமே விரும்பும் உள்ளங்கள் தொடர்பு கொள்ளவும் உங்கள் வீட்ற்கே வந்து விடும்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை
Source: New feed
