
இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.
அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
பகிர்தலில் தழைக்கும் மானுடம்
நிகழ்வு
ஒரு நகரில் பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் ஏராளமான செல்வம் இருந்தது; ஆனால், அவனிடம் தன்னிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்கும் மனம்தான் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்டவன் தன்னிடம் இருந்த செல்வத்தை மேலும் பெருக்க நினைத்தான். அதனால் அவன் தனக்குத் தெரிந்த ஒரு கணிதவியலாரை அழைத்து, அவரிடம் பணத்தைப் பெருக்குவதற்கான ஆலோசனை கேட்டான். அவரும் இரண்டொரு நாளில் நல்லதோர் ஆலோசனை சொல்வதாகச் சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார்.
இரண்டு நாள்கள் கழித்து, கணிதவியலார் நல்லதோர் ஆலோசனையோடு செல்வந்தனைப் பார்க்க வந்தார். அவர் செல்வந்தனிடம் வந்த நேரம், செல்வந்தன் அவசர அவசரமாக வெளிநாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் அவர், பணத்தைப் பெருக்க தன்னிடம் நல்லதோர் ஆலோசனை இருக்கிறது என்று சொன்னபோது, அவன், “அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை… நான் உன்னிடம் பணத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், நீ உனக்குத் தோன்றிய யோசனைபடியே பணத்தைப் பத்திரப்படுத்தி வை… வெளிநாட்டுப் பயணம் முடிந்ததும், நான் உன்னிடம் பணத்தை வாங்கிக் கொள்கிறேன்” என்றான். கணிதவியலாரும் செல்வந்தன் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டுப் பணத்தைப் பெருக்கத் தொடங்கினார்.
ஓராண்டு கழித்து வெளிநாட்டிற்குச் சென்ற செல்வந்தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தான். வந்ததும் கணிதவியலாரை அழைத்து, “பணத்தைப் பெருக்கச் சொல்லி என்னிடமிருந்த பணத்தையெல்லாம் உன்னிடம் ஒப்படைத்தேனே… என்னவாயிற்று…? என்றார். “நீங்கள் கொடுத்த பணத்தையெல்லாம் ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டேன்!” என்றார் கணிதவியலார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வந்தன், “என்ன நான் கொடுத்த பணத்தை ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாயா….? நான் உன்னிடம் பணத்தைப் பெருக்கத்தானே சொன்னேன்… நீ ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று செல்வந்தன் கணிதவியலாரைப் பிடித்து வீட்டுச் சிறையிலடைத்தான்.
Source: New feed