
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
யோவான் 1: 1-18
இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொண்டோருக்குக் கிடைக்கும் கைம்மாறு!
நிகழ்வு
ஒருவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்து, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிச் சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு ஒரு வீடு கட்டினார். வீட்டைக் கட்டி முடித்ததும் இவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கோயிலுக்குச் சென்றார். அவ்வாறு இவர் செல்லும் வழியில் இவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரிடத்தில் சென்ற இவர், ‘புதுமனைப் புகுவிழா’விற்கான அழைப்பிதழைக் கொடுத்து, “வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று திறப்பு விழா வைத்திருந்தோம். அந்த நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுங்கள்” என்றார்.
உடனே பெரியவர், “தம்பி! நான் சொல்கின்றேன் என்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சமீப காலமாக நம்முடைய பகுதியில் அடிக்கடி வெள்ளம் வருகின்றது. போயும் போயும் இந்த நேரத்திலா வீட்டைக் கட்டுவது?” என்றார். அதற்கு இவர், “நான் உறுதியான அடித்தளத்தில்தான் என் வீட்டைக் கட்டியிருக்கின்றேன். அதனால் எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை” என்றார்.
“வெள்ளத்தை விடுங்கள். நம்முடைய பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் புதிதாக வீடு கட்டியிருக்கின்றேர்களே!” என்று விசனப்பட்டார் பெரியவர். அதற்கும் இவர், “நான் உறுதியான அடித்தளத்தில்தான் என் வீட்டைக் கட்டியிருக்கின்றேன். அதனால் எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை” என்றார். பெரியவர் விடவில்லை. “தம்பி! நம்முடைய பகுதியில் பெரிய சூறாவளிக் காற்றும் அடிக்கடி வீசுகின்றது. இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு வீடு கட்டியிருக்கலாமே” என்றார். அப்பொழுதும் இவர் முன்பு சொன்ன பதிலைத்தான் சொன்னார்.
இதைக் கேட்டுப் பொறுமையிழந்த பெரியவர், “என்ன தம்பி! எதற்கெடுத்தாலும் உறுதியான அடித்தளத்தில் வீடுகட்டியிருக்கின்றேன்…..” என்று சொல்கின்றீர்களே! அப்படி என்ன அடித்தளத்தில் வீடு கட்டியிருக்கின்றீர்கள்?” என்று குரலை உயர்த்திப் பேசினார். “நான் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவரை அடித்தளமாகக் கொண்டு வீடுகட்டியிருக்கின்றேன். அதனால்தான் எனக்கு எதைப் பற்றியும் எந்தவொரு கவலையில்லையும் இல்லை என்கிறேன்” என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர் ஆண்டவரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் அவர் எதற்கும் கவலைப்படாமல் இருந்தார். நற்செய்தி வாசகம், ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொள்வோர் எத்தகைய கைம்மாறு பெறுவர் என்பதை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மிடையே குடிகொண்ட இயேசு
இன்றைய நற்செய்திப் பகுதியானது, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் காலைத் திருப்பலியில் இடம்பெற்றது. இப்பொழுது மீண்டுமாக அது இடம் பெறுகின்றது. “தொடக்கத்தில் வாக்கு இருந்தது” என்று தொடங்கும் இன்றைய நற்செய்தி வாசகம், “தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது…” என்று தொடக்க நூலில் இடம்பெறும் முதல் வரிகளை நினைவுபடுத்துகின்றன.
யோவான் தன்னுடைய நற்செய்தி நூலை மேற்கண்ட வார்த்தைகளைக் கொண்டு தொடங்குவதன்மூலம், இயேசு தொடக்கத்திலிருந்தே இருந்தார் என்ற உண்மையை எடுத்துக்கூறுகின்றார். இப்படித் தொடக்கத்திலிருந்தே கடவுளோடு இருந்த வார்த்தையாம் இயேசுதான் மனுவுருவாகி, நம்மிடையே குடிகொண்டார்.
இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்வோருக்கு கடவுளின் பிள்ளையாகும் உரிமை
வார்த்தையான இயேசு, மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்டார் என்று சொல்லும் யோவான், தொடர்ந்து, அவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் என்கின்றார்.
இயேசு மக்கள் நடுவில் பணிசெய்தபொழுது, பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவரை நம்பவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதனைப் பின்புலமாகக் கொண்டு தன்னுடைய நூலுக்கு முன்னுரை எழுதுகின்ற யோவான், இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்வோருக்கு அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் என்கின்றார். கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமை என்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினை நாம் பெற்றுக்கொள்வதற்கு இயேசுவை நம்பி, ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் இயேசுவை நம்பி, ஏற்றுக்கொண்டு, அவருடைய வழியில் நடக்கத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் ஒன்றித்திருக்கின்றார். அவரும் கடவுளோடு ஒன்றித்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் திருத்தூதர் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என்று நம்பி ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவோம்; அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed