
இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
தாமே தெரிந்து கொண்ட அரியணையில் நம் இயேசு வீற்றிருக்கிறார் . தம் உயிரைப் பலியாகக் கொடுத்து சரீரத்தின் சாவின் மேலும் அதைவிட பயங்கரமான ஆத்தும சாவான – அருளையும் ஞான உயிரையும் மக்களிடமிருந்து பறிக்கும் – பாவத்தின் மேலும் வெற்றி கண்டார். வான மேகத்தைப் போல் கருணையை எங்கும் பொழிகிறார் . தம் தாயையும் தம் நேச சீடரையும் தானம் செய்தார். கடவுளே தம்மைக் கை விட்டது போலக் கலங்கினார் . எனினும் தன்னல சிந்தனையின் நிழல் முதலாய் இன்றி மக்கள் மேல் தன் அன்பைக் கொட்டுகிறார். தம்மை வாதித்தவர்களுக்கு மன்னிப்பை மன்றாடுகிறார் . தன்னை நினைத்தருளச் சொன்ன நல்ல கள்ளனுக்கு பரகதியின் பாக்கியத்தைப் பரிமாறுகிறார் . பாவத்திற்காக மனிதன் கொடுக்க வேண்டிய கடனை , கடவுளுக்குத் தம் அன்பின் மிகுதியால் அளிக்கிறார் .
கிறிஸ்து கடவுள் ; தேவ ஆள் தான் நமக்காக மரித்தவர் ; கிறிஸ்து மனிதன் ; மனிதனுக்காக தம் மனுஷ சுபாவத்தில் மரித்தார். சிலுவையில் ஒரு புதிய மனுஷீகம் , ஒரு புது சிருஷ்டிப்பு பிறந்ததுதென்றார் சின்னப்பர் . நாம் அதனுடைய அவயவங்களாகி தேவ சுபாவத்தில் பங்காளியாகிறோம் என்றார் அர்ச் இராயப்பர்
மனுக்குலத்துக்காக ஞான சீவியம் ஆதாமுக்கு அளிக்கப்பட்டது . இறைவனுடைய சித்தத்தைப் புறக்கணித்து தன் இஷ்டத்தை பெரிதாய்க் கருதி நித்திய பாக்கியத்துக்கு பதில் – ஒரு வினாடி சுகத்திற்காக இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் – அதை அவன் இழந்தான்
கிறிஸ்துநாதர் ஞான வாழ்வை மனுக்குலத்திற்குத் திரும்பப் பெற்றார். இறைவனுடைய சித்தத்திற்கு மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்தார் . மனிதனுக்கு நித்திய பாக்கியத்தைச் சம்பாதிக்க வாதனையை தெரிந்து கொண்டார்
ஆதாம் பாவம் செய்த பின் தான் ஆடையின்றி இருப்பதாக உணர்ந்து ஓர் ஆடையைத் தயாரித்துக் கொண்டான் . கிறிஸ்து நாதரோ தம் ஆடையைக் களையவும் மனித கௌரவத்தையே இழக்கவும் அட்ட தரித்திரத்தை சூடவும் தெரிந்து கொண்டார்
“நீங்கள் கடவுளைப் போலாவீர்கள் ” என்ற சோதிப்போனை ஆதாம் நம்பினான் ; கடவுளைப் போலறிய ஆசித்தான் ; கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தான் . கிறிஸ்துநாதர் இறைவனுக்கு கீழ்ப்படிந்ததால் நாம் கடவுளைப் போலாக – தேவ சுபாவத்தில் பங்கு பெற நமக்கு ஆற்றலை அளித்தார்
ஏவாள் ஆதாமைப் பாவத்திற்கு சோதித்து அவரது வீழ்ச்சிக்கும் – மனுக்குல வீழ்ச்சிக்குக் காரணமானாள். தேவமாதா உலகின் ஈடேற்றத்திற்கு தம் மகனை உலகிற்கு அளித்தார் . ஈடேற்ற அலுவலில் பங்கு பெற்ற சிலுவையினடியில் நின்றார். மனுக்குலம் இன்பத்தின் பூங்காவில் பிறந்தது ;ஆதாமின் விலாவிலிருந்து வந்த ஏவாள் அதன் தாய் . கடவுளின் தாயாகிய மாமரி அவருடைய மகனின் புத்துயிரோடு வாழும் சீவியர்கள் யாவருக்கும் தாய் . கிறிஸ்துவின் ஞான சரீரம் , சிலுவையில் வாதனைப் பெருக்கில் தொங்கிய கிறிஸ்துவின் ஈட்டியால் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்தது ; மாமரி அதன் தாய் .
இயேசுவின் மரணம் அவர் மெய்யாகவே மனிதன் என்று உறுதிப்படுத்துகிறது . அவரது தெய்வீகத்திற்கும் சாட்சி . தாம் தேவ குமாரன் என்ற சத்தியத்தை நிலை நிறுத்தியதால் மரித்தார் – அப்பொழுது நடந்த புதுமைகளும் சேர்ந்து அவர் தேவன் என்று கூறுகின்றன . மனிதர்களின் ஆத்துமத்தை ஈடேற்றவல்லவா இயேசு உயிர்விட்டார் ? இயேசுவின் சாவு , ஆத்துமத்தின் விலை மகா உயர்ந்தது என்று பறை சாற்றுகிறது
இயேசுவின் மரணம் பாவத்தின் கனத்தையும் , இறைவனின் நீதியையும் , பாவப் பரிகாரத்தையும் காட்டுகிறது . இயேசுவின் பாடுகள் யாவும் முதல் தொடங்கி கடைசி மட்டும் இச்சத்தியங்களை நிலை நாட்டுகின்றன
எல்லா வரப்பிரசாதத்திற்கும் ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் வழியாக நமக்கு வரும் அருளுக்கு இயேசுவின் பாடுகள் ஊற்று . தம் பாடுகளில் இயேசு எல்லா அருளையும் சம்பாதித்தார்.
சிலுவையில் பாடும் சாவும் , முதல் பூசை . இன்று திவ்விய பூசைக்குப் போகும்போது கல்வாரியின் காட்சியை காணப் போகிறோம் என்று நினைப்போமாக . குருவானவர் தேவ நற்கருணையை எழுந்தேற்றம் செய்யும்போது , கீறிக்கிழித்த இயேசுவின் உடலை , எலும்புக் கூட்டைக் காண்கிறோம் . குருவானவர் பாத்திரத்தை உயர்த்தும் போது அப்பாத்திரத்தில் என்ன இருக்கிறது ? இயேசுவின் சிரசிலிருந்தும் , தேகத்திலிருந்தும், விலாக் காயத்திலிருந்தும் ஓடி விழுந்த திரு ரத்தம் அங்குள்ளது . உலகத்தையே மீட்க வல்லது . இறைவனுக்கு சரியான ஆராதனையையும் , மெய்யான மகிழ்ச்சியையும் கொடுப்பது .
செபம்.
சிலுவையில் பாடுபட்ட நாதரே ! உமது கரங்களில் எங்கள் கரங்களை வைத்து சிலுவையோடு சேர்த்து ஆணி அறையும் . அந்த கனத்த இரும்பை நாங்கள் எடுத்து ஏந்த செய்தருளும் . உமது பாதங்களில் எங்கள் பாதங்களை வைத்து சிலுவையோடு இணைத்து அறைந்தருளும் . அப்போது அவைகள் உம்மை விட்டு விலகி அலையா ; எங்கள் வாக்குத்தத்தங்களும் வார்த்தைப்பாடுகளும் ஆணிகளைப் போல் இறுக்கமாகப் பிடிக்கட்டும் . எங்கள் பாவங்களின் பாரமோ மகா கனம். கடைசி நாளில் எங்கள் பலவீனமும் மகா பெரியது . ஆதலால் ஆணிகளைப் பெயர்த்துக் கொண்டு நாங்கள் நழுவி உம்மிடமிருந்து பிரிந்து போகாமல் உமது ஈடேற்ற அன்பில் உம்மோடு ஒன்றித்திருக்கக் கிருபை செய்யும் திவ்விய இயேசுவே
செபமாலை நாயகியே , உமது செபமாலையை எங்களை விட்டு அகலாமல் எவ்விதம் இறுக்கிப் பிடித்திருக்கிறோமோ , அதே போல பாடுபட்ட இயேசுவின் உடலையும் உள்ளத்தையும் நாங்கள் இறுகத் தழுவி ஒன்றித்துப் போயிருக்க உம் திருமகனை மன்றாடும் . செபமாலை இராக்கினியே வாழ்க. ஆமென்.
Source: New feed
