
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார்.
இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
நம்பிக்கைதான் நம்முடைய வாழ்வின் அடித்தளம்.
எப்போதாவது நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது குறித்து யோசித்தது உண்டா…? ‘அதெல்லாம் அவ்வளவு சாதாராண காரியமா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு கால் இல்லாதபோதும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒருவர் இருக்கின்றார். அவர்தான் அருணிமா சின்கா என்பவர்.
அருணிமா சின்கா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சார்ந்தவர். மிகச் சிறந்த கூடைப்பந்து ஆட்டக்காரரான இவர், உத்தரப்பிரதேச மாநிலக் கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து, 2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் புது டெல்லியில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய அணியினருடன் புது டெல்லியை நோக்கி இருப்பூர்தியில் (Train) பயணம் செய்துகொண்டிருந்தார். இடையில் ஒரு கொள்ளைக்கூட்டம் அருணிமா சின்கா இருந்த பெட்டிக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களின் பொருட்களை எல்லாம் கொள்ளையடிக்கத் தொடங்கியது. இதனால் அருணிமா சின்காவுக்கும் அந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு இடையே பயங்கரச் சண்டை ஏற்படத் தொடங்கியது. முடிவில் கொள்ளைக் கூட்டம் அருணிமா சின்காவின் ஒரு காலில் கடுமையாகத் தாக்க, அவருடைய கால் செயலிழந்து போனது. இதற்குப் பின்பு அவரோடு இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, சிகிச்சை அளித்தபோதும் அவருடைய காலை சரிசெய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் காலுக்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது ‘மலையேறுதல்’ தொடர்பான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். அந்தப் புத்தகங்கள் அவருடைய உள்ளத்தில் புதுவகையான நம்பிக்கையை விதைத்தது. அப்போதே அவர், ‘ஒரு கால் போனால் என்ன, இன்னொரு காலை வைத்துச் சாதித்துக் காட்டுவோம்’ என்று முடிவு செய்தார். இதற்குப் பின்பு அவர் உத்தரகாசியில் உள்ள மலையேற்றப் பயிற்சி முகாமல் கலந்துகொண்டு பயிற்சி பெறத் தொடங்கினார். பயிற்சி முகாமில் இருந்த எல்லாரும் அவரிடம் ‘ஒரு காலை வைத்துக்கொண்டு மலையேறுவது என்பது சாத்தியமில்லாத ஒருவிடயம். அதனால் தயவுசெய்து இம்முயற்சியைக் கைவிட்டுவிடு” என்று சொல்லிப்பார்த்தார்கள். அருணிமா சின்காவோ என்னால் எப்படிப்பட்ட மலையிலும் ஏறமுடியும் என்று நம்பிக்கயோடு சொல்லி உரிய பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்ற குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணிமா சின்கா நம்பிக்கையோடு சிகரத்தில் ஏறத் தொடங்கினார். இடையில் ஒரு செங்குத்தான பகுதி வந்தது. அதைக் கடந்தால்தான் சிகரத்தின் உச்சியை அடைய முடியும். ஆனால், சிறிது சறுக்கினாலும் கீழே விழவேண்டியதுதான். அப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏறுவதா? வேண்டாமா? என்ற பதற்றம் அவர்க்கு ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் வந்தது வரட்டும் என்று நம்பிக்கையோடு ஏறி சாதனை படைத்தார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய மாற்றுத் திறனாளி என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆனார்.
தன்னுடைய ஒரு காலை இழந்தபோதும் நம்பிக்கையோடு இருந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதித்துக்காட்டிய அருணிமா சின்கா, நம்பிக்கையோடு இருந்தால் நாம் நினைத்தை அடையலாம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துபவராக இருக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகமும் நம்பிக்கையினால் தாங்கள் விரும்பியதைப் பெற்றுக்கொண்ட இருவரைக் குறித்து படிக்கின்றோம். அவர்களைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தன்னுடைய மகளுக்காக இயேசுவிடம் வந்த யாயிர்.
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற யாயிர், “இறந்துபோன என் மகள்மீது நீர் கைவைத்தால் அவள் உயிர்பெறுவாள்” இயேசுவிடம் கூறுகின்றார். உடனே இயேசு அவருடைய வீட்டிற்குச் செல்கின்றார். இந்த யாயிர் சாதாரண மனிதர் கிடையாது, தொழுகைக்கூடத் தலைவர். இப்படி யூத சமூகத்தில் மிகப்பெரிய ஆளாக இருந்தாலும், அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் இயேசுவிடம் மிகுந்த தாழ்ச்சியோடு வருகின்றார். இடையில் இன்னொரு சிக்கல் வந்து தாமதம் ஆனாலும்கூட இயேசுவின்மீது நம்பிக்கையோடு இருக்கின்றார். இறுதியில் தன்னுடைய மகளை உயிரோடு திரும்பப் பெறுகின்றார்.
இயேசுவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டால் போதும் குணம்பெறுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்த பெண்மணி.
இயேசு யாயிரின் வீட்டிற்கு அவசரமாகப் போய்க்கொண்டிருக்கும்போது, இன்னொருவருடைய தேவையைப் பூர்த்திசெய்யும் நிலை ஏற்படுகின்றது. அவர்தான் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இவர் மருத்துவர்களால் கைவிடப்பட்ட போதும், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்துத் தொடுக்கின்றார். அதனால் அவர் குணம் பெறுகின்றார். இப்பெண்மணி குணம்பெற்றது, யாயிர்க்கு இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் இவர் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்டிருந்தவர். இவர்க்கு இயேசு நலமளித்திருக்கிறார் எனில், தன் மகளுக்கும் உயிர்தருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அந்த நம்பிக்கையே அவருடைய வாழ்வில் நன்மையை பெருகச் செய்கின்றது. இவ்வாறு நற்செய்தியில் இடம்பெறும் இந்த இரண்டு நிகழ்வுகளும் இறைவன்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை இறையாசியைப் பெற்றுத் தரும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன.
Source: New feed
