
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20
அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.
ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.
அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.
அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்.
மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
இயேசுவின் தூதுவர்களாய்…
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள பெல்ஹெல்வி (Belhelvie) என்ற ஊரில் ஜார்ஜ் ஸ்டாட் (George Stott 1835 -1889) என்றோர் ஆசிரியர் இருந்தார். அவர்க்கு ஒரு கால் கிடையாது. இளம்பிள்ளை வாதத்தால்தான் அவர் தன் காலை இழந்திருந்தார். ஆனாலும், அவர் துடிப்புமிக்க ஓர் ஆசிரியராய்ப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சீனாவில் மறைபரப்புப் பணியைச் செய்துவந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பர் என்பவர் ஜார்ஜ் ஸ்டாட் வழக்கமாகச் செல்லும் ஆலயத்திற்கு வந்து, “யாராரெல்லாம் சீனாவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டதற்கு ஆலயத்தில் இருந்த யாரும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் ஸ்டாட் மட்டும், “நான் ஆர்வமாய் இருக்கின்றேன்” என்று தன்னுடைய கையை உயர்த்தினார். அதற்கு ஹட்சன் டெய்லர் அவரிடம், “உங்கட்குத்தான் ஓர் கால் இல்லையே! நீங்கள் எப்படி சீனாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க முடியும்?” என்று கேட்பதற்கு, அவர், “இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்கள் சீனாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்க விருப்பம் தெரிவிக்காததால், ஒற்றைக் காலுள்ள நான் விருப்பம் தெரிவித்தேன்” என்றார்.
இதைக்கேட்டு ஹட்சன் டெய்லர் மிகவும் மகிழ்ந்துபோய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவர் ஜார்ஜ் ஸ்டாட்டிற்கு செயற்கைக் காலினைப் பொருத்தி, சீனாவில் நற்செய்தியை அறிவிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 1865 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற ஜார்ஜ் ஸ்டாட் ஏறக்குறைய இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த உத்வேகத்தோடு அறிவித்து, பலரும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தார். இன்றைக்கு சீனாவில் கிறிஸ்துவம் இந்தளவுக்கு வேரூன்றி இருக்கின்றதென்றால், அதற்கு இவர் ஆற்றிய பணிதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தனக்கு ஒரு காலை இல்லை என்பதைக்கூட ஒரு குறையாகக் கருதாமல், ஆண்டவரின்நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்த ஜார்ஜ் ஸ்டாட் நமது கவனத்திற்கு உரியவர். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் நற்செய்தியை எல்லா மக்கட்கும் எடுத்துரைவேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்தி இரண்டு அல்லது எழுபது சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்விற்கும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வில், அவர் அவர்களைக் கலிலேயாப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார் (மத் 10; லூக் 9: 1-11). ஆனால், இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வில் அவர்களை யூதேயப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார். முன்னவர்களோ திருத்தூதர்கள், பின்னவர்களோ சீடர்கள்.
Source: New feed
