
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
கதிரவனைப் போல் ஒளிவீசுபவர் யார்?
ஈரோடைச் சார்ந்த சைக்கிளில் துணி வியாபாரம் செய்யும் ஒரு தந்தைக்கும் வீட்டு வேலைகளைச் செய்துவரும் ஒரு தாய்க்கும் மகனாகப் பிறந்தவன்தான் முகமது யாசின் என்ற எழுவது வயதுச் சிறுவன்.
இவன் தன்னுடைய வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள ஓர் அரசாங்க பள்ளியில் இரண்டாவது வகுப்புப் படித்து வருகின்றான். இவருடைய பெற்றோர் இவனைச் சிறுவயது முதலே, ‘யாருடைய பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது… எப்பொழுதும் உண்மை பேசவேண்டும்… நேர்மையாக இருக்கவேண்டும்… என்று சொல்லி வளர்த்து வந்தார்கள். இவனும் அதற்கேற்றாற் போல் யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாமலும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து வந்தான்.
இந்நிலையில் 2018, ஜூலை 15 ஆம் நாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் முகமது யாசின் ஐம்பதாயிரம் உரூபாயைக் கண்டெடுத்தான். உடனே அவன் வேகமாக வீட்டிற்குச் சென்று, வழியில் நிகழ்ந்தவற்றைத் தந்தையிடம் எடுத்துச் சொல்லி, தந்தையைத் தன்னுடைய உதவிக்குக் கூட்டிக்கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் ஐம்பதாயிரம் உருபாய்ப் பணத்தை ஒப்படைத்தான். காவல்துறை அதிகாரி அந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து சிறுவன் முகமது யாசின் தான் கண்டெடுத்த ஐம்பதாயிரம் உருபாய்ப் பணத்தைக் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச்செய்தி நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுடைய செவிகளை எட்ட அவர், சிறுவன் முகமது யாசினின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்தார்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் நேர்மையோடு இருக்கின்றபோது, அவர்க்கு எத்தகைய ஆசி கிடைக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தத்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
வயலில் தோன்றிய களைகள்.
இன்றைய நற்செய்தி வாசகம், ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகள் உவமைக்கு விளக்கம் அளிப்பதாக இருக்கின்றது. இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற நிலக்கிழார் நல்ல விதைகளை விதைத்த போதும், சாத்தான் களைகளை விதைத்துவிட்டு போகிறது. இதைத் தொடர்ந்து நடந்த அனைத்தையும் நிலக்கிழாரின் பணியாளர்கள் அவரிடம் சொல்ல, அவர் அவர்களிடம் அறுவடைக்காலம் வரைக் காத்திருக்குமாறு சொல்கிறார். இங்கு அறுவடைக் காலம் என்று சொல்லப்படுவதை இறுதித் தீர்ப்பு என்று சொல்லலாம். இந்த இறுதித் தீர்ப்பில் இரண்டு முக்கியமான விடயங்கள் நடைபெறுகின்றன. ஒன்று, தீயோர்க்குத் தண்டனை, மற்றொன்று நல்லோர் அல்லது நேர்மையாளர்க்கு வெகுமதி. இந்த இரண்டையும் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தீயோர்க்குத் தண்டனை.
இயேசு சொல்லும் ‘வயலில் தோன்றிய களைகள்’ உவமையின் இறுதியில், வானதூதர்கள் ஆண்டவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள் என்கின்றார். இங்கு குறிப்பிடப்படும் ஆண்டவரின் ஆட்சிக்குத் தடையாக உள்ளோரும் நெறிகெட்டோரும் வேறு யாருமல்ல, அவர்கள் கடவுளின் வழியை விட்டுவிட்டுச் சாத்தானின் வழியில் நடப்பவர்கள். இத்தகையோர் தங்களோடு வாழும் சக மனிதரைக் குறித்து அக்கறை கொள்வதும் கிடையாது… சகலமும் படைத்த இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதும் கிடையாது. அதனாலேயே இவர்கள் தீச்சூளைக்குள் தள்ளப்படுவார்கள்.
நேர்மையாளர் கதிரவனைப் போன்று ஒளிவீசுவர்.
தீயோர் தீச்சூளையில் தள்ளப்பட்டு அழிக்கப்படுகையில், நேர்மையாளரோ கதிரவனைப் போன்று ஒளிவீசுவர் என்கின்றார் ஆண்டவர். கதிரவனைப் போன்று ஒளிவீசும் அளவுக்கு நேர்மையாளர் அப்படி என்ன செய்திருப்பார் என்று சிந்தித்துப் பார்க்கையில், மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும் இறுதித் தீர்ப்பு உவமையே நமக்குப் பதிலாக இருக்கின்றது.
இயேசு சொல்லும் அந்த இறுதித் தீர்ப்பு உவமையில், அரியணையில் வீற்றிருப்பவர், தன் வலப்பக்கத்தில் உள்ள செம்மறியாடுகள் எனப்படும் நேர்மையாளர்களைப் பார்த்து, “நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள்… தாகமாய் இருந்தேன்; நீங்கள் எனக்குத் தண்ணீர் அளித்தீர்கள்…” (மத் 25: 34-39) என்பார். ஆகையால், நேர்மையாளர் என்பவர் கடவுட்கு உகந்த வழியில் நடந்து, சக மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்பவர்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால் அவர்கள் கதிரவனைப் போன்று ஒளிவீசுவார்கள். நாமும் நேர்மையாளர்களைப் போன்ற வாழ்க்கை நடத்தினால், கடவுள் நமக்கும் அதே ஆசியைத் தருவார் என்பது உறுதி.
சிந்தனை.
‘நீதி வெள்ளமெனப் பெருகி வருக, நேர்மை வற்றாத ஆறாய்ப் பாய்ந்து வருக’ (ஆமோ 5:24) என்பார் இறைவாக்கினர ஆமோஸ். ஆகவே, நாம் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து இறைவனுக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
