
ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8
அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.
அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா? மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
`பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மைய சிந்தனை.
‘பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’
மறையுரை.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்காஸ் என்ற ஊரில் அடுமனை (Bakery) நடத்தி வந்தவர் முகமது பதான் என்பவர். இவர் தன்னுடைய கடையினுள்ளே வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இரண்டு சிறுவன் பசிக்கொடுமையால் கடையிலிருந்து ரொட்டியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
இதைத் தற்செயலாக அங்கு வந்த முகமது பதானிடம் மகன்கள் இருவரும் பார்த்துவிட, அவர்கள் இருவரும் சிறுவர்கள் இருவரையும் ஓடிச்சென்று பிடித்து, அவர்களை நையப் புடைத்தார்கள். அது மட்டுமல்லாமல், அந்த சிறுவர்கள் இருவருடைய தலையையும் மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி அதை அலைப்பேசியில் படமெடுத்து எல்லார்க்கும் அனுப்பி வைத்தனர். செய்தியறிந்த அந்த இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனுடைய தாயார், காவல்துறையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறை, சாதாரண ரொட்டிக்காக இரண்டு சிறுவர்களையும் கடுமையாகத் தாக்கி, அவமானப்படுத்திய அந்த இரண்டு முரடர்களையும் கைதுசெய்தது. 2017 ஆண்டு, மே 22 ஆம் நாள் நடந்த இந்த சம்பவம் மகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
பசிக்கொடுமையால் ரொட்டியைத் திருடியதற்காக சிறுவர்கள் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவமானப்படுத்தப்பட்டதைப் போன்று, இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் பசியால் கதிர்களைக் கொய்து உண்டதை பரிசேயர்கள் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். இப்படிக் குற்றம் கண்டுபிடித்த பரிசேயர்கட்கு இயேசு என்ன பதிலளித்தார்… இதிலிருந்து நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்… என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
பசியில் கதிர்களைக் கொய்து உண்ட இயேசுவின் சீடர்கள்.
நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களுடன் வயல்வழியே நடந்துசென்றுகொண்டிருக்கும்போது, சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்கின்றார்கள். கதிர்களைக் கொய்து உண்பது குற்றமில்லை (இச 23: 24-25). ஆனால், சீடர்கள் அதை ஓய்வுநாளில் செய்ததால், பரிசேயர்கள் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். சீடர்கள் செய்த இந்தச் சிறு செயலை பரிசேயர்கள் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பதற்கு இயேசு மூன்றுவிதமான பதிலைச் சொல்லி அவர்களுடைய வாயை அடைக்கின்றார். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ட தாவீதும் அவருடைய தோழர்களும்.
சவுல், தாவீதைக் கொல்வதற்காகத் துரத்திக்கொண்டு வருகின்றார். அப்படிப்பட்ட தருணத்தில் தாவீதுக்கும் அவரோடு இருந்தவர்கட்கும் பசி எடுக்கின்றது. எனவே, அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்கின்றார்கள் (1 சாமு 21:1ff). தாவீது செய்த இச்செயல் தவறாகப் பார்க்கப்படவில்லை. அப்படியிருக்கையில் இயேசுவோ தாவீதின் மகன் – சாலமோனை விடப் பெரியவர் (மத் 12: 42) – அப்படிப்பட்டவரின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டது மட்டும் எப்படித் தவறாகும் என்று இயேசு அவர்களிடம் கேள்வியை எழுப்புகின்றார்.
ஓய்வுநாளிலும் பணிபுரியும் குருக்கள்.
ஓய்வுநாளில் எந்தவொரு வேலையையும் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கின்றபோது (விப 20:10) கோவிலில் ஒருசில குருக்கள் பணிபுரிந்து வந்தார்கள். இது குற்றமாகப் பார்க்கப்படவில்லை (எண் 28: 9-10). ஆனால், இயேசு கோவிலைவிடப் பெரியவர் (மத் 12:6) அப்படிப்பட்டவரின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்பதும் குற்றமில்லை என்று இயேசு அவர்கட்குப் பதிலளிக்கின்றார்.
பலியை அல்ல இரக்கத்தை விரும்பும் இறைவன்.
இறைவாக்கினர் ஓசேயா இவ்வாறு கூறுவார்: “உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல; இரக்கத்தையே விரும்புகிறேன்.” (ஒசே 6:6). இயேசுவும் இக்கூற்றினை மத்தேயுவின் வீட்டில் உணவருந்துகின்றபோது மேற்கோள் காட்டிப் பேசியிருப்பார் (மத் 9:13). இதைப் பரிசேயர்களும் அறிந்திருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கள், சீடர்கள் பசியாய் இருந்ததால்தான் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று அவர்கள்மீது இரக்கம் காட்டாமல், அவர்கள்மீது குற்றம் சுமத்தியதால் இயேசு அவர்களைப் பார்த்து, “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்” என்கின்றார்.
இயேசு பரிசேயர்களிடம் கூறுகின்ற இவ்வார்த்தைகள் நாம் நம்மோடு வாழக்கூடிய சகோதரர் சகோதரிகளிடம் குறைந்த பட்ச இரக்கமாவது காட்டவேண்டும் என்ற செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அடுத்தவர் மீதான அன்பை, இரக்கத்தை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்.
சிந்தனை.
‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகின்றது’ (கலா 5:14) என்பார் பவுல். ஆகவே, திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பை ஒருவர் மற்றவரிடம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
