
எனக்கு அடுத்திருப்பவர் யார்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.
அவர் மறுமொழியாக, “ `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார்.
இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார்.
அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார்.
மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார்.
அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார்.
இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மைய சிந்தனை.
யார் அடுத்திருப்பவர்?
மறையுரை.
(I இணைச்சட்டம் 30: 10-14; II கொலோசையர் 1: 15-20; III லூக்கா 10: 25-37)
செல்வந்தன் ஒருவன் அடர்ந்து காடு வழியாகத் தன்னுடைய குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்தான். வழியில் அவனைத் தடுத்து நிறுத்திய கொள்ளையர் கூட்டம் ஒன்று, அவனிடமிருந்த பணத்தையும் அவனுடைய குதிரை வண்டியையும் அடித்துப் பிடித்துக்கொண்டு, அவனைக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றது.
அதே காட்டில் புத்திசாலியான நரி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அது தன்னுடைய இரண்டு குட்டிகளுடனும் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தது. முன்னே சென்றுகொண்டிருந்த இரண்டு குட்டிகளும் செல்வந்தன் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பதைக் கண்டு தங்களுடைய தாயிடம், “அம்மா! இங்கே ஒரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றான்… அவனுக்கு நாங்கள் உதவிசெய்யப் போகிறோம்” என்று ஓடின. உடனே அவைகளுடைய தாய் அவற்றைத் தடுத்துநிறுத்தி, “கொஞ்சம் பொறுங்கள்… இவனுக்கு உதவி செய்வதற்கு முன்னம், இவன் எப்படிப்பட்ட மனிதன் என்று பார்த்துச் சொல்கின்றேன். இவன் நம்முடைய உதவியைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவன் என்றால் இவனுக்கு உதவி செய்வோம். இல்லையென்றால் இவனை இப்படியே விட்டுவிடுவோம்” என்றது.
தங்களுடைய தாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அந்த இரண்டு குடி நரிகளும் சரியென்றன. பின்னர் அந்தத் தாய் நரி அடிப்பட்டுக் கிடந்த செல்வந்தனை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டுத் தன்னுடைய குட்டிகளிடம் இவ்வாறு சொன்னது: “பிள்ளைகளே! இவன் நம்முடைய உதவியைப் பெறுவதற்கு எந்தவிதத்திலும் தகுதியற்றவன். இவனுடைய காதுகள் வறியவரின் குரலைக் கேட்கவே கேட்காது; இவனுடைய கண்கள் துன்புறுவோரைக் கண்டு இரங்கவே இரங்காது. இவனுடைய மூளை சுயநலத்தால் நிறைந்திருக்கின்றது. இவனுடைய கைகள் செய்யாத தவறுகளே கிடையாது. அப்படிப்பட்ட இவன் நம்மிடமிருந்து உதவியைப் பெற எந்தவிதத்திலும் தகுதியற்றவன். அதனால் இவனுக்கு உதவிசெய்யாமல் இருப்பதே நல்லது.”
இவ்வாறு சொல்லிவிட்டு தாய் நரி தன்னுடைய இரண்டு குட்டிகளையும் கூட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துசென்றது. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்வந்தன், தன்னுடைய நிலையை நினைத்து மிகவும் நொந்து, யாருடைய உதவியில்லாமல் இறந்துபோனான்.
இந்த நிகழ்வில் வருகின்ற நரியினைப் போன்றுதான் மனிதர்களிலும் பலர் தேவையில் உள்ள மனிதர்க்கு உதவி செய்வதற்குக்கூட, தகுதியை எதிர்பார்த்துச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்கட்கு மத்தியில் எந்தவொரு தகுதியையும் எதிர்பாராமல் உதவி செய்யும் ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. அவரைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
நிலைவாழ்வு தொடர்பான கேள்வி.
நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார். இயேசு அதற்கான பதிலை திருமறை நூலிலிருந்து சொல்கின்றார். ஆனால், திருச்சட்ட அறிஞர் தன்னை நேர்மையாளர் என்று காட்டிக்கொள்ள விரும்பியதால், இயேசு அவர்க்கு ஓர் உவமையைச் சொல்லி அவர் வாயாலேயே பதிலைச் சொல்ல வைக்கின்றார். இயேசு அவரிடம் சொல்லக்கூடிய உவமைதான் நல்ல சமாரியன் உவமை. இவ்வுவமையில் கள்வர்கள் கையில் அடிபட்டுக் கிடக்கும் யூதரைத் தவிர்த்து மூன்றுவிதமான மனிதர்கள் இடம்பெறுகின்றார்கள். அம்மூன்றுவிதமான மனிதர்களில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்த்து, நிலைவாழ்வைப் பெறுவது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.
உள்ளதைப் பறித்துக்கொள்ளும் மனிதர்கள்.
நற்செய்தியில், இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் எருசலேமிலிருந்து எரிக்கோ நோக்கிச் செல்லும் மனிதரை இந்தச் சமூகம் என எடுத்துக்கொண்டால், அவருடைய ஆடையை எப்படிக் கள்வர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்களோ, அதுபோன்று இந்த சமூகத்திலுள்ள மக்களிடமிருந்து அதுவும் வறிய, எளிய மக்களிடமிருந்து இருப்பதையும் பறித்துக்கொண்டு போக அரசியல்வாதிகள் தொடங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் வரை எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் மக்களுடைய இரத்தத்தையும் உழைப்பையும் உறிஞ்சி வாழும் அட்டைகளாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள்; வரிதண்டுபவர்கள் மக்களிடமிருந்து பணத்தையெல்லாம் பிடுங்கினார்கள். இவர்களைப் போன்றும் நாம் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்
சகமனிதரைவிட சமயம் பெரிதென வாழும் மனிதர்கள்.
உவமையில் வருகின்ற இரண்டாவது வகையான மனிதர்கள், குருவும் லேவியரும். இவர்கள் சக மனிதரை விட சமயமே பெரிதென்று நினைத்து வாழக்கூடியவர்கள். இங்கு சமயக் கடமைகள் வேண்டாம் என்று அர்த்தமில்லை. மாறாக, அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பவர்க்கு அந்த நேரத்தில் உதவி செய்யாமல் வேறு எந்த நேரத்தில் உதவிசெய்ய முடியும்!
இன்றைக்கும்கூட பலர் சமயம்தான் பெரிது என்று சக மனிதரைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அல்லது சமயத்திற்குக் கொடுக்கும் முக்கியவத்தை சக மனிதர்கட்குக் கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கை எப்படிக் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கும் என்று தெரியவில்லை. இத்தகையோர் “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” (மத் 9:13) என்று ஆண்டவர் கூறுவதையும் “நம்பிக்கை செயல்வடிவம் பெறாமல், அது தன்னிலே உயிரற்றது” (யாக் 2:17) என்று யாக்கோபு கூறுவதையும் தங்களுடைய கவனத்தில் இருத்துவது நல்லது.
தேவையில் உள்ளவர்கள்மீது பரிவுகொள்ளும் மனிதர்கள்.
உவமையில் வருகின்ற மூன்றாவது மனிதர்தான் நல்ல சமாரியர். இத்தகையோர், யாராரெல்லாம் தேவையில் இருக்கின்றார்களோ அவர்கள்கள்மீது பரிவுகொண்டு, அவர்கட்குத் தேவையானதைச் செய்து தரக்கூடியவர்கள். உவமையில் வருகின்ற சமாரியரும் அடிபட்டுக் கிடக்கும் யூதரும் இனத்தால் பகைவராக இருந்தாலும் (யோவா 4:9; 8:48), சமாரியர் யூதர்மீது அன்பும் பரிவும் கொள்கின்றார். அது மட்டுமல்லாமல், குருவும் லேவியரும் அடிபட்டுக் கிடப்பவர்க்கு உதவி செய்யச் செல்லும்பட்சத்தில், தங்களுடைய உயிர்க்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று விலகிச் செல்கையில், சமாரியர் தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து அவர்க்கு உதவுகின்றார். பின்னர் அவரைச் சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோய் வேண்டியதை செய்கின்றார். இவ்வாறு ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கின்றார்.
இந்த உவமைக்குக் விளக்கம் அளிக்கும் ஒருசில விவிலிய அறிஞர்கள், இயேசுதான் அந்த நல்ல சமாரியர் என்று குறிப்பிடுவர். உண்மைதான். நல்ல சமாரியரைப் போன்றே இயேசு நம் ஒவ்வொருவர்மீதும் பரிவுகொண்டு, சாவின் பிடியிலிருந்த நம்மை விடுவித்துப் புதுவாழ்வு தருகின்றார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நல்ல சமாரியரைப் போன்று/ இயேசுவைப் போன்று தேவையில் உள்ளவர்மீது பரிவோடு வாழும்போது, நாம் அடுத்திருப்பவர்கள் ஆகின்றோம் நிலைவாழ்வையும் நமக்குச் சொந்தமாக்குகின்றோம் என்பது உறுதி,
சிந்தனை.
‘காதுகேளாதவரும் கேட்கக் கூடிய, பார்வையற்றும் பார்க்கக்கூடிய ஒரே மொழி அன்பு என்ற மொழியே’ என்பார் மார்க் ட்வைன் என்ற எழுத்தளார். ஆதலால், நாம் நல்ல சமாரியனைப் போன்று தேவையில் உள்ளவர்மீது பரிவும் அன்பும் கொள்ளும் மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed