
இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார்.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்ற சீடர்களை அனுப்பிய இயேசு
பல ஆண்டுகட்கு முன்னம் ஐரோப்பாவில் இருந்த ஒரு மறைப்பணி நிலையம், ‘ஆண்டுக்கு 2500 டாலர் ஊதியம்’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை சீனாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைத்தது. அந்த இளைஞரும் மிக ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் ஆண்டவருடைய நற்செய்தியை மக்கட்கு அறிவித்து வந்தார். இதனால் அவருடைய பெயரும் புகழும் எங்கும் பரவின.
இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனம் அவரை அழைத்து, “நாங்கள் உங்கட்கு ஆண்டிற்கு ஐந்தாயிரம் டாலர் ஊதியம் தருகின்றோம். நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் வந்து பணிசெய்வீர்களா?” என்று கேட்டது. அவரோ, “அதெல்லாம் முடியாது” என்று மறுத்துவிட்டார். பன்னாட்டு நிறுவனம் தொடர்ந்து அவரிடம், “ஆண்டிற்கு பத்தாயிரம் டாலர் ஊதியம் தருகின்றோம். அப்பொழுதாவது எங்களுடைய நிறுவனத்தில் வந்து பணிசெய்வீர்களா?” என்று கேட்டது. அப்பொழுதும் அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.
‘இவர் இன்னும் அதிகமான ஊதியம் எதிர்பார்க்கிறார் போலும்’ என்று நினைத்துக்கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் அவரிடம், “ஆண்டிற்கு ஐம்பதாயிரம் டாலர் கொடுத்தால், எங்களுடைய நிறுவனத்திற்கு வந்து பணிபுரிவீர்களா?” என்று கேட்டார். அப்பொழுதும் அவர் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் பொறுமையிழந்த அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், “ஒருவேளை நான் கொடுக்கின்ற ஊதியம் உங்கட்குப் பெரிதாக இல்லையோ?” என்றார். “நீங்கள் கொடுக்கின்ற ஊதியமல்ல, நீங்கள் கொடுக்கின்ற வேலை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. எனக்கு நான் இப்பொழுது செய்துவரும் நற்செய்திப் பணிதான் பெரிதாகத் தெரிகின்றது. அந்தப் பணியைச் செய்வவதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை நீங்கள் மில்லியன் டாலர் கொடுத்தாலும் கிடைக்காது” என்றார் அந்த இளைஞர்.
ஆம், நற்செய்திப் பணியை விடவும் சிறந்ததொரு பணியில்லை… அதனை செய்வதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை வேறு எதனாலும் தந்துவிட முடியாது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்கட்கு அனுப்புவதையும் அப்படி அவர் அவர்களை அனுப்புகின்றபோது அவர்கள் எப்படிப் பணிசெய்யவேண்டும் என்பதைப் பற்றி இயேசு கூறுவதையும் குறித்து வாசிக்கின்றோம். அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இறையாட்சியைப் பற்றி அறிவிக்க அனுப்பப்படல்.
நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும் இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் அவர்களை அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது, அவர் அவர்கட்கு வல்லமையும் அதிகாரமும் அளிக்கின்றார். இயேசு தன் சீடர்களைத் திக்கவராய் விடமாட்டார் (யோவா 14: 18) என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது, அவர் அவர்கட்குக் கொடுக்கும் வல்லமையும் அதிகாரமும். இதன்மூலம் சீடர்கள் தங்களுடைய சொந்த வல்லமையைக் கொண்டு அல்ல, இறைவல்லமையைக் கொண்டு, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பதை இயேசு எடுத்துச் சொல்கின்றார்.
ஆண்டவரை நம்பிப் பணிசெய்ய அனுப்பப்படல்.
இயேசு தன் சீடர்களைப் பணிதளங்கட்கு அனுப்புகின்றபோது, அவர்களிடம் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, பயணத்திற்கு வேறு எதையும் (ஓர் அங்கியைத் தவிர) எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்பதாகும். இயேசுவின் இவ்வார்த்தைகள், அவருடைய பணியைச் செய்யக்கூடிய யாரும் பணத்தின்மீதோ பொருளின்மீது அல்ல, ஆண்டவர் மீது தன் நம்பிக்கை வைத்துப் பணிசெய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. இதில் இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளடங்கி இருக்கின்றது. அது என்னவெனில், சீடர்கள் பயணத்தின்போது எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்றால், அவர்கட்குத் தேவையானவை மக்கள் கொடுக்கவேண்டும். இதைத் தான் இயேசு வேலையாள் உணவுக்கு உரிமையுடையவர் (மத் 10: 10) என்கின்றார்
எதிர்ப்புகட்கு அஞ்சாமல் பணிசெய்ய அனுப்பப்படல்.
இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது சொல்கின்ற இன்னொரு முக்கியமான செய்தி, பணித்தளங்கில் வருகின்ற எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதீர்கள் அல்லது புறம்பே தள்ளிவிட்டுப் பணிசெய்யுங்கள் என்பதாகும். நற்செய்தியில் இயேசு சொல்கின்ற, ‘உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுக் கிளம்பும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்’ என்ற வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றது. பணித்தளங்களில் நிச்சயம் எதிர்ப்புகள் வரும். அவற்றை காலில் படிந்துள்ள தூசியை உதறிவிடுவது போன்று உதறிவிட்டுப் பணிசெய்யவேண்டும் என்பதுதான் இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டு அவருடைய பணியைத் திறம்படச் செய்வோம்.
சிந்தனை.
‘அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும்… உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருப்பேன்’ (எரே 1: 19) என்பார் ஆண்டவர். ஆகையால், கடவுள் இறைவாக்கினர் எரேமியாவிற்குச் சொன்ன இவ்வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு இறையாட்சிப் பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
