
பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3
அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————-
இயேசுவுக்குப் பணிவிடை செய்வோம்
நிகழ்வு
குருவானவர் ஒருவர் ஆப்ரிக்க மக்கட்கு மத்தியில் மறைப்போதகப் பணியைச் செய்து வந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது, அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கின்றார். அந்த நன்றிப் பெருக்கின் அடையாளமாக அடுத்த வாரம் திருப்பலிக்கு வருகின்றபோது, அவர்க்கு ஏதாவது கொண்டு வாருங்கள்.”
குருவானவர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து, இறைமக்களில் ஒருசிலர் அடுத்தவாரம் திருப்பலிக்கு வந்தபோது, தங்களுடைய தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியற்றவற்றைக் கொண்டு வந்தார்கள்; இன்னும் சிலர் தங்களுடைய இல்லங்களில் இருந்த கோழி, முட்டை, தானியங்களைக் கொண்டுவந்தார்கள்; மற்றும் சிலர் தாங்களாகவே செய்த கைவினைப் பொருள்களான மர நாற்காலிகள், பொம்மைகள், மூங்கில் கூடைகளைக் கொண்டுவந்தார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொருளைக் கொண்டுவந்து கோயிலை நிரப்பினார்கள்.
வழக்கமாக ஞாயிறுத் திருப்பலிக்கு வரும் எல்லாரும் வந்திருந்தார்கள், ஒரே ஒரு பெரியவரைத் தவிர. அவர் சற்றுத் தாமதமாக வந்தார். அவர் தன்னுடைய கையில் எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. இதனால் கோயிலில் இருந்த எல்லாரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். வந்தவர் பீடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு மூங்கில் கூடைக்குள் போய் உட்கார்ந்தார். இதைப் பார்த்துவிட்டு குருவானவர் அவரிடம், “நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், “எல்லாரும் தங்களுடைய நன்றிப் பெருக்கின் அடையாளமாகத் தங்களிடமிருந்த ஏதோவொன்றைத் தந்தார்கள். ஆனால், நான் கடவுளுடைய பணிக்காக என்னையே தருகிறேன்” என்றார்.
இதைக் கேட்டு குருவானவர் ஆலயத்தில் திரண்டிருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார், “மற்ற எல்லாரும் கொடுத்த காணிக்கையை விடவும், தன்னையே காணிக்கையாகத் தந்த இந்தப் பெரியவரின் காணிக்கை மிக உயர்ந்தது.”
ஆம், கடவுளுக்காக, அவருடைய பணிக்காக நம்மிடமிருந்து ஏதோவொன்றைத் தருவதை விடவும் நம்மையே தருவது மிகவும் உயர்ந்தது. இத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு செய்துவந்த நற்செய்திப் பணிக்காகத் தங்களால் இயன்றதையும், ஏன், தங்களையே தந்தும் உதவிய இயேசுவின் பெண் சீடர்களைக் குறித்து வாசிக்கின்றோம். நற்செய்திப் பணிக்காக அவர்கள் செய்த உதவி அல்லது தியாகம் எத்தகையது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்
நகர் நகராய் நற்செய்தி அறிவித்து வந்த இயேசு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு, நகர் நகராய் ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தி அறிவித்து வந்ததைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசு இந்த உலகத்திற்கு வந்ததே நற்செய்தி அறிவிக்கத்தான் (மாற் 1: 38). எனவே அவர் நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். மக்களும் அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட அமுத மொழிகளைக் கேட்பதற்காகக் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள். இயேசு அந்த மக்கட்கு நற்செய்தி அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களிடமிருந்த தீய ஆவிகளை விரட்டியடித்தார். இவ்வாறு இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது, ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைப்பதில் இன்பம் கண்டார்.
ஆண்டவருடைய நற்செய்திப் பணிக்கு உடனிருந்து உதவியவர்கள்
இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியை அறிவித்ததற்கு உடனிருந்து உதவியவர்களை இங்கு நாம் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இயேசு ஆற்றி வந்த நற்செய்திப் பணிக்கு, அவருடைய திருத்தூதர்கள் போக, பெண்கள் சிலரும் உறுதுணையாக இருந்து உதவி வந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மகதலா மரியா, சூசன்னா, யோவன்னா ஆகியோர் ஆவர். இவர்கள் தங்களிடமிருந்த உடைமைகளைக் கொண்டு, இயேசு செய்துவந்த நற்செய்திப் பணிக்கு உதவி வந்தார்கள். இவர்கள் உண்மையிலேயே நம்முடைய பாராட்டிற்கு உரியவர்களாக இருக்கின்றார்கள்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த எத்தனையோ ஆண்கட்குத் தோன்றாத எண்ணம், இவர்கட்குத் தோன்றியது என்றால், அதற்காக இவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பெண் சீடர்களைப் போன்று ஆண்டவருடைய நற்செய்திப் பணிக்கு நாமும் நம்மாலான உதவிகளைச் செய்தாகவேண்டும். அது வெறும் பணமாக மட்டுமில்லாமல், நம்மையே தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சிந்தனை
‘நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விருபுகிறேன்’ (பிலி 4: 17) என்பார் பவுல். ஆகையால், நாம் நற்செய்திப் பணிக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். அதனால் நற்பயனையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
