
நற்செய்தி வாசகம்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.
தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.
முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.
அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்’ என்றார்.
வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.
பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.
அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை’ என்றார்.
அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.
ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.
மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்.
மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
நீங்கள் யார்க்குப் பணிவிடை செய்கிறீர்கள்?
உரோமையை ஆண்டுவந்த தியோளசியன் என்ற பேரரசுனுக்குக் கீழ் குரோமாசியுஸ் என்ற ஆளுநன் இருந்தான். அவனுக்குத் திடீரென்று கொடியநோய் ஒன்ற வந்தது. அதிலிலிருந்து அவன் நலம்பெற யார் யாருடைய உதவியெல்லாமோ நாடினான். அஆனல், யாரும் அவனுக்கு நலம் தரவில்லை. இந்நிலையில்தான் அவன் செபஸ்தியாரைக் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே அவன் தன்னுடைய பணியாளர்களை செபஸ்தியாரிடம் அனுப்பி, தன்னுடைய இல்லத்திற்கு அவரை அழைத்து வருமாறு கேட்டான். அவனுடைய பணியாளர்களும் செபஸ்தியாரிடம் சென்று, குரோமாசியுஸ் சொன்னதை செபஸ்தியாரிடம் சொல்லி, அவரை அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.
செபஸ்தியார், குரோமாசியுசியுஸின் இல்லத்திற்கு வந்தபோது, அவன் படுக்கையில் எழுந்திருந்த முடியாமல் படுத்துக்கிடந்தான். அவரைக் கண்டதும் குரோமாசியுஸ், செபஸ்தியாரிடம் தன் இரு கைகளைக் கூப்பி, “நீங்கள் மட்டும் என்னிடமுள்ள நோயைக் குணப்படுத்திவிட்டால், நான் கிறிஸ்தவனான மாறுவேன்” என்று உறுதியாகச் சொன்னான். உடனே செபஸ்தியார் தன்னுடைய கண்களை அவனுடைய வீட்டில் படரவிட்டுவிட்டு, “உன்னிடமிடமுள்ள நோய் நீங்கவேண்டுமென்றால், முதலில் நீ உன்னுடைய வீட்டில் இருக்கின்ற விக்கிரகங்களை/ போலி தெய்வங்களின் சிலைகளை அப்புறப்படுத்து” என்று சொல்லிவிட்டு அவனுடைய வீட்டிலிருந்து வெளியேறினார்.
குரோமாசியுஸும் தன்னுடைய வீட்டிலிருந்த போலி தெய்வங்களின் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினான். அப்படியிருந்தும் அவனுடைய கொடிய நோய் அவனை விட்டு மறைவதற்குப் பதிலாக, இன்னும் அதிகமானது. இதைக்கண்டு மிரண்டுபோன குரோமாசியுஸ், தன்னுடைய பணியாளர்களை அழைத்து, செபஸ்தியாரை எப்படியும் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான். அவர்களும் செபஸ்தியாரைக் கண்டு, நடந்ததைச் சொல்லி, அவரை குரோமாசியுஸின் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். குரோமாசியுஸ் முன்பைவிடவும் மிகுந்த வேதனையோடு படுக்கையில் கிடந்தான்.
‘நான் சொன்னதுபோல் நீ உன்னுடைய வீட்டிலிருந்த போலி தெய்வங்களின் எல்லாச் சிலைகளையும் உன்னுடைய வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டாயா?” என்று செபஸ்தியார் அவனைப் பார்த்துக் கேட்டார். “என்னுடைய வீட்டிலிருந்த எல்லாச் சிலைகளையும் அப்புறப்படுத்திவிட்டேன். தங்கத்தால் செய்யப்பட்ட சிலை மட்டும் இன்னும் இருக்கின்றது” என்றான் குரோமாசியுஸ். “இதையும் உன்னுடைய வீட்டிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு ஆண்டவராகிய இயேசுவுக்கு உண்மையாக இரு” என்று செபஸ்தியார் சொன்னதும், அவன் அந்தத் தங்கச் சிலையையும் தூக்கித் தீயில் எறிந்தான். அவன் இவ்வாறு செய்த மறுகணம் அவனுடைய உடலில் இருந்த கொடியநோயானது மாயமாக மறைந்தது. அதன்பிறகு அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் இயேசுவுக்கு உண்மையாக இருந்தான்.
குரோமாசியுஸ் போலி தெய்வங்கட்கும் ஆண்டவர் இயேசுவுக்கும் என இரு தலைவர்க்ட்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தபோது அவனுடைய உடலில் இருந்த கொடிய நோய் இன்னும் அதிகமானது. எப்பொழுது அவன் ஆண்டவர் இயேசுவுக்கு மட்டும் உண்மையாக இருந்து, அவர்க்கு மட்டுமே பணிசெய்யத் தொடங்கினானோ அப்பொழுது அவனுடைய உடலிருந்த கொடிய மாயமாய் மறைந்துபோனது.
எப்பொழுது ஒருவர் இருதலைவர்கட்கு பணிவிடை செய்கின்றாரோ அப்பொழுது அவர் நன்மையை அல்ல, தீயையே பெறுகின்றார். மாறாக அவர் ஆண்டவர்க்கு மட்டுமே பணிவிடை செய்கின்றபோது, நிறைந்த நன்மையைப் பெறுகின்றார் என்ற உண்மையை மிக அழகாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், யாரும் இருதலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது அல்லது ஆண்டவர்க்குப் பணிசெய்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் உண்மையில்லாதவர்கள்.
நற்செய்தியில் இயேசு, “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவட்குப் பணிவிடை செய்ய முடியாது” என்கின்றார். இயேசு சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில், இரு தலைவர்களையும் ஒரே மாதிரி அல்லது நூறு சதவீதம் அன்பு செய்யமுடியாது; ஒருவரை வெறுத்துத்தான் இன்னொருவரை அன்புசெய்ய முடியும். அப்படி யாராவது இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்கின்றார்கள் என்றால், அவர்கள் உண்மையில்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டிற்கு இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர்க்கு ஊழியம் செய்வோம்’ (யோசு 24: 21) என்று வாக்குக் கொடுத்தார்கள். அந்த வாக்குக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவர் ஆண்டவர்க்கு ஊழியம் செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் உண்மையில்லாமல் இருந்தார்கள்.
நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளுக்கும் சாத்தானுக்கும் அல்லது கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடைசெய்து வாழ்கின்றோம் என்றால், நாம் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதுதான் உண்மை.
செல்வத்துக்குப் பணிவிடை செய்பவர்கள் விரைவில் அழிந்து போனார்கள்.
இருதலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் யார்க்கும் உண்மையாக இருப்பதில்லை என்று சிந்தித்துப் பார்த்த நாம், இரு தலைவர்களில் ஒன்றான/ஒருவனான செல்வம் அல்லது சாத்தானுக்குப் பணிவிடை செய்பவர்கள் எப்படி அழிவினைச் சந்திக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
செல்வத்திற்குப் பணிவிடை செய்துவிட்டு விரைவில் அழிவைச் சந்தித்தவர்கட்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு, இயேசுவின் சீடர்களுள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் ஆண்டவர் இயேசுவின் சீடனாக இருந்தான். அதே நேரத்தில் அவன் பணத்தாசை பிடித்தவனாக, திடுடனாக (யோவா 12:6), செல்வத்திற்குப் பணிவிடை செய்பவனாக இருந்தான். அதனால் முப்பது வெள்ளிக்காசுகட்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்து, அந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் அனுபவிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டான். இந்த வரிசையில் அடுத்து வருவது இலவோதிகேயாத் திருஅவை, இத்திருஅவை தன்னிடம் செல்வம் இருக்கின்றது… எல்லாமும் இருக்கின்றது… என்ற கர்வத்தில் இருந்தது. அதனால் அத்திருஅவை அதற்கான முடிவைத் தேடிக்கொண்டது (திவெ 3: 14-18). நாமும் செல்வத்திற்குப் பணிவிடை வாழ்கின்றபோது முட்புதருக்குள் விழுந்த விதை எப்படி முட்புதரால் நெருக்கப்பட்டு அழிந்துபோகின்றதோ அதுபோன்று நாமும் அழிவோம் என்பது உறுதி.
ஆண்டவர்க்குப் பணிவிடை செய்பவர்களோ வாழ்வடைவார்கள்.
இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்கமாட்டார்கள்; அதிலும் குறிப்பாக செல்வத்திற்குப் பணிவிடை செய்பவர்கள் விரைவில் அழிந்துபோவார்கள் என்று சிந்தித்துப் பார்த்த நாம், ஆண்டவருக்கு பணிவிடை செய்பவர்கள் எத்தகைய ஆசியைப் பெறுவார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இணைச்சட்ட நூலில் வருகின்ற இறைவார்த்தைகள் இவை: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்க்கு ஊழியம் செய்தால், நிலத்திற்கு மழை தருவார்; முன்மாரியும் பின்மாரியும் தருவார்; நீங்கள் உண்டு நிறைவு பெறுவீர்கள்” (இச 11: 13-15). ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வாழ்கின்றபோது நிலம் வளம்பெறுவது மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்வே வளம்பெறும். அதே நேரத்தில் கடவுளுக்கு ஊழியம் புரிவது, அவருக்கு உண்மையாக இருந்து, அவருடைய வழியில் நடப்பது கடினமானதாக இருந்தாலும், அதுவே மனித வாழ்வுக்கு எல்லா நலன்களையும் தரும். ஆகையால் அழிவைத் தரும் செல்வத்திற்கு அல்ல, வாழ்வைத் தரும் ஆண்டவர்க்கு ஊழியம் புரிய முயற்சி செய்வோம்.
சிந்தனை.
‘நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது’ (விப 20: 2-3) என்பார் கடவுள். ஆகையால், நம்முடைய வாழ்விற்கு வளம் சேர்க்கும் உண்மைக் கடவுளுக்கு ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed