
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.
உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
லூக்கா 6: 27-38
“உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்”
நிகழ்வு
ஒரு நகரில் ஒருவர் மளிகைக் கடை நடத்திவந்தார். இவர் மளிகைக் கடை வைத்திருந்த பகுதியில் வேறு யாரும் கடை வைத்திராததால், இவருடைய வியாபாரம் நன்றாக ஓடியது; இவரது வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாகச் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் ஒருவர் இவருடைய கடைக்கு முன்பாகப் பல்பொருள் அங்காடி ஒன்றைக் கட்டித் தொழில் செய்யத் தொடங்கினார். மட்டுமல்லாமல், அவர் இவரிடம், “இன்னும் ஓராண்டுக்குள் உன்னுடைய கடையை இங்கு இல்லாமல் செய்துகாட்டுகின்றேன்” என்று சவால்விட்டார்; இவரைப் பற்றித் தவறாகவும் மற்றவரிடம் பேசத் தொடங்கினார்.
இது பல ஆண்டுகளாக அப்பகுதியில் கடை நடத்தி வந்த இவருக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இவர் என்ன செய்தவதென்று தெரியாமல் புலம்பினார். அப்பொழுது இவருக்குத் தன் சிறுவயதிலிருந்தே அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லும் பெரியவரின் ஞாபகம் வந்தது. உடனே இவர் அந்தப் பெரியவரிடம் சென்று, தனது பிரச்சனைகளை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் இவரிடம், “தம்பி! நீ உன் கடைக்கு முன்பாக புதிதாகப் பல்பொருள் அங்காடியைக் கட்டி, ஒருவர் தொழில் செய்து வருகின்றார் அல்லவா! அவருக்காக இறைவனிடம் வேண்டு! மட்டுமல்லாமல், ஒவ்வொருநாளும் நீ உன் கடையைக் திறந்ததும், உன் கடைக்கு ஆசி கூறுவதுபோல், அவருடைய கடையைப் பார்த்தும் ஆசி கூறு” என்றார்.
பெரியவர் இப்படிச் சொன்னதும், இவர், “என்ன! என்னுடைய பிழைப்பைக் கெடுப்பதற்காகவே பல்பொருள் அங்காடியைத் திறந்து வைத்திருக்கும்… என்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசும்… அந்த மனிதருக்காக நான் இறைவனிடம் வேண்டி, அவருக்கு ஆசி கூறுவதா…? இது என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதே!” என்றார். “நான் சொல்வது போல் செய்! அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பார்” என்று பெரியவர் இவரிடம் வலியுறுத்திக் கூறியதும், அமைதியாகச் சென்றார். பின்னர் இவர் பெரியவர் தன்னிடம் சொன்னதுபோன்று, ஒவ்வொருநாள் காலையிலும் தன்னுடைய கடையைத் திறந்தது, தனக்காகவும் தன்னுடைய கடைக்காகவும் வேண்டிவிட்டு, கடையை விட்டு வெளியே வந்து, எதிரில் இருந்த பல்பொருள் அங்காடிக்காகவும், அதை நடத்தி வந்தவருக்காகவும் இறைவனிடம் வேண்டிவிட்டு, ஆசி கூறினார். இப்படியே ஆறுமாதங்கள் நகர்ந்தன.
ஆறு மாதங்கள் கழிந்து இவர் பெரியவரிடம் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று, “ஐயா! நீங்கள் சொன்னதுபோன்று நான் செய்தேன். இப்பொழுது நான் அந்தப் பல்பொருள் அங்காடிக்கும் பொறுப்பாளர். ஆம், நான் அந்த மனிதருக்காக வேண்டுவதையும், அவருக்கு ஆசிகூறுவதையும் பார்த்துவிட்டு, ‘இப்படியொரு மனிதருக்கா நான் கெடுதல் செய்ய நினைத்தேன்!’ என்று தான் நடத்தி வந்த பல்பொருள் அங்காடியை என்னிடம் மிகக் குறைந்த விலையில் விற்றுவிட்டுப் போய்விட்டார்” என்றார். இச்செய்தியைக் கேட்டுப் பெரியவர் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆம், நாம் நம்மை இகழ்ந்து பேசுவோருக்காக, சபிப்போருக்காக இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, அது நிச்சயம் பலன் கொடுக்கும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் இயேசு, உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இகழ்ந்தோருக்காக இயேசு வேண்டினார்; ஆதலால் நாமும் வேண்டவேண்டும்
நம்மை இகழ்வோரைப் பதிலுக்கு இகழ்வதுதான் உலக வழக்கு. ஆனால், ஆண்டவர் இயேசு இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டச் சொல்கின்றார். இயேசு ஏன் இப்படிச் சொல்கின்றார் எனக் கேள்வி எழலாம்.
நம்மை இகழ்வோரை நாம் பதிலுக்கு இகழ்ந்துகொண்டிருந்தால், பிரச்சனை மேலும் பெரிதாகுமே அன்றி, அமைதி ஏற்படுவதற்கு வழியில்லை. மாறாக, நம்மை இகழ்வாருக்காக நாம் இறைவனிடம் வேண்டும்பொழுது, மேலே வரும் நிகழ்வில் ஏற்பட்ட அமைதி ஏற்படும். மேலும் நம்மை இகழ்வோரை நாம் ஏன் இகழாமல், அவருக்காக இறைவனிடம் வேண்டவேண்டும் எனில், இயேசு தன்னை இகழ்ந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டினார் (லூக் 23: 34), நாமும் நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறுகின்றோம்; விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகவும் ஆகின்றோம்.
ஆகையால், நாம் நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டி, அவரது வழியில் நடப்பவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘வன்முறையாலோ ஆயுதங்களாலோ ஒருபோதும் மனிதனின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது’ என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால். ஆகையால், நாம் இயேசுவும், திருத்தந்தை அவர்களும் சொல்லும் உண்மையை உணர்ந்தவர்களாய் பகைமையை அகற்றி, அன்போடு வாழ்வோம்; நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed