
சுனாமிப் பேரலை தாக்கி பல இலட்சம் பேரை பலிவாங்கிய துயர நிகழ்வின் 16ம் ஆண்டு நினைவு நாள், டிசம்பர் 26, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நள்ளிரவில், இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு கடல் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி எனும் உயிர்க்கொல்லி ஆழிப்பேரலைகள், இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கின. ஆசியாவின் 14 நாடுகளில் பல இலட்சம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன, மற்றும், பேரழிவையும் கொணர்ந்தன.
சுனாமி ஆழிப்பேரலைகள், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, குறிப்பாக, தமிழகம் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இவற்றில் பலியானவர்களுக்கு இச்சனிக்கிழமையன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், பேரிடர்களில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, பேரிடர் தடுப்பு யுக்திகள், தேசிய மற்றும், குழும அளவில் வளர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, நவம்பர் 5ம் தேதியை சுனாமி விழிப்புணர்வு உலக நாளாக அறிவித்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2030ம் ஆண்டுக்குள், உலக மக்களில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காட்டினர், வெள்ளம், புயல் மற்றும் சுனாமி தாக்குதல்களுக்கு உள்ளாகும் கடற்கரைப் பகுதிகளில் வாழ்வார்கள் என்று ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் உலகைத் தாக்கியுள்ள சுனாமிகளில் இரண்டு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்
Source: New feed