
கிறீஸ்துநாதருடைய சீவியம் முழுமையும் சிலுவையும் வேதனையு மாயிருந்தது. நீயோ இளைப்பாற்றியும் சந்தோஷமும் தேடுகிறாய். மோசம் போகிறாய்! துன்பங்களைச் சகிப்பதைவிட வேறு எதையாவது தேடினால் மோசம் போகிறாய். ஏனெனில் இந்த அழிவுக்குரிய சீவியம் முழுமையும் நிர்ப்பந்தங்களால் நிறைந்து சிலுவைகளால் சூழப்பட்டு இருக்கின்றது.
ஒருவன் ஞானத்தில் எம்மாத்திரம் அதிகமாய் விருத்தி அடைந்திருக்கிறானோ, அம்மாத்திரம் அதிக பாரமான சிலுவைகளை அடிக்கடி சுமந்துகொள்வான். ஏனெனில், அவனுக்கு உண்டான சிநேகத்தின் மிகுதியால் அவனது பரதேசத்தின் வேதனை அதிகமாய் வளர்கின்றது.
“உன்னைத்தானே பரித்தியாகம் செய்; உன் சிலுவையைச் சுமந்துகொண்டு சேசுநாதரை பின்செல்” என்ற இந்த வசனம் அநேகருக்குக் கடுமையாய்க் காணப்படுகின்றது. ஆனால், “சபிக்கப்பட்டவர்களே! நம்மைவிட்டு நித்திய அக்கினிக்குப் போங்கள்” என்னும் அந்தக் கடைசி வாக்கியத்தைக் கேட்பதோ இன்னும் வெகு கடுமையாய் இருக்கும்.
ஏனெனில் இப்போது சிலுவையின் வாக்கியத்தை மனப்பூர்வமாய்க் கேட்டு அதைப் பின்செல்கிறவர்கள் அப்போது நித்திய நரகாக்கினைத் தீர்ப்பைக் கேட்பதினால் பயப்படமாட்டார்கள். ஆண்டவர் நடுத்தீர்க்க வரும்போது இந்தச் சிலுவை அடையாளம் வானத்தில் காணப்படும். தங்கள் சீவிய காலத்தில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருடைய பாவனையாய் சீவித்திருந்த சிலுவையின் ஊழியர் எல்லோரும் அப்போது பெரும் நம்பிக்கையோடு நியாயாதிபதியான கிறீஸ்துநாதரை அண்டிப்போவார்கள்.
ஆமென்.
அனைத்து பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் படிக்க, தியானிக்க நமது வெப்சைட்டை பயன் படுத்துங்கள்
Source: New feed
