
குருத்துவத்தின் தெய்வீக மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வோம் என்றால், பூசையின் அளவற்ற மேன்மையை நாம் அதிக முழுமையாகப் புரிந்துகொள்வோம்.
வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார், குருத்துவமே உண்டாக்கப்பட்ட சகல மகிமைகளிலும் அதிக பக்திக் குரிய மகிமையாக இருக்கிறது என்று கூறுகிறார்.
அர்ச். எஃப்ரேம் அதை ஓர் அளவற்ற மேன்மை என்று அழைக்கிறார்.
கடவுளின் குரு சகல உலக அரசர்களுக்கும் மேலாகவும், சகல பரலோக சிகரங்களுக்கு மேலாகவும் உயர்த்தப்பட்டுள்ளார் என்றும், அவர் கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்தவர் என்றும் காஸ்ஸியன் கூறுகிறார்.
குருவானவர் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நடுவில் வைக்கப்பட்டிருக்கிறார்; கடவுளை விடத் தாழ்ந்தவ ராகவும், மனிதனுக்கு மேலானவராகவும் இருக்கிறார் என்று பாப்பரசர் மூன்றாம் இன்னோசென்ட் கூறுகிறார்.
அர்ச். டெனிஸ் குருவானவரை ஒரு தெய்வீக மனிதர் என்றும் குருத்துவத்தை ஒரு தெய்வீக மகத்துவம் என்றும் அழைக்கிறார்.
குருத்துவ மேன்மை என்னும் கொடை மனித புத்திக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று அர்ச். எஃப்ரேம் கூறுகிறார்.
இதன் காரணமாக அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர், ஒரு குருவானவருக்கு சங்கை செலுத்துபவன், கடவுளுக்கே சங்கை செலுத்துகிறான், குருவை அவமதிக்கிறவனோ, கிறீஸ்துநாதரையே அவமதிக்கிறான் என்று கூறுகிறார்.
அர்ச். அமிர்தநாதர் குருத்துவ அலுவலை ஒரு தெய்வீக அலுவல் என்று அழைத்திருக்கிறார்.
அர்ச். அக்குயினாஸ் தோமையாரைப் பொறுத்த வரை, குருத்துவத்தின் மகத்துவம், சம்மனசுக்களின் மகத்துவத் திற்கும் அப்பாற்பட்டது.
சம்மனசுக்களும் கூட குருத்துவத்திற்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்று அர்ச். நாஸியான்ஸன் கிரகோரியார் சொல்லியிருக்கிறார்.
மோட்சத்திலுள்ள சம்மனசுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், ஒரேயொரு பாவத்தைக் கூட அவர்களால் மன்னிக்க முடியாது. காவல் தூதர்கள் தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஆத்துமங்களின் பாவங்களை ஒரு குருவானவர் மன்னிக்கும்படி, அவரிடம் அந்த ஆத்துமங்கள் தஞ்சமடையத் தேவையான வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தருகிறார்கள்.
அர்ச். பிரான்சிஸ் அஸிஸியார், “நான் ஒரு சம்மனசானவரையும், ஒரு குருவானவரையும் ஒரே சமயத்தில் கண்டால், முதலில் குருவுக்கும், அதன்பின் சம்மனசானவருக்கும் முன்பாக முழந்தாளிடுவேன்” என்று கூறுவது வழக்கம்.
பரலோகத்தையும், பூலோகத்தையும் படைப்பதை விட ஒரு பாவியை மன்னிப்பது பெரிய வேலை என்று அர்ச். அகுஸ்தீனார் கூறுகிறார்!
Source: New feed
