
மனித வாழ்வின் மிக முக்கியமான விழுமியங்களுக்கு, அடிப்படையிலேயே முரணாக அமையும் நடவடிக்கைகளுக்கு எதிரான தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர், யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களின் தலைவர்கள்.
அக்டோபர் 28, இத்திங்களன்று, வத்திக்கானில், ஆபிரகாமின் மதங்கள் எனப்படும் இம்மூன்று மதங்களின் தலைவர்கள், மனித வாழ்வை முடித்துக்கொள்ளும் விவகாரங்கள் குறித்த, விவாதத்துக்குரிய கருத்தியல் அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளனர்.
கருணைக்கொலையும், மருத்துவரின் உதவியுடன் ஆற்றப்படும் தற்கொலையும், இவை எந்த முறையில் நடத்தப்பட்டாலும், மனித வாழ்வின் தவிர்க்க இயலாத மதிப்பீட்டிற்கு, அடிப்படையிலேயே முரணாக உள்ளன என்று கூறும் அவ்வறிக்கை, இவை, நன்னெறி மற்றும், மதக் கோட்பாட்டின்படி தவறானவை என்றும், இவை எந்தவித விதிவிலக்கின்றி தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் கூறியுள்ளது.
குணமாக்க இயலாது என்ற நிலையில், இறக்கும் நிலையிலுள்ளவர்களைப் பராமரிப்பது, நம் கடமை என்றும், இறந்துகொண்டிருக்கும் மற்றும், துன்புறும் நோயாளர்களைப் பராமரிப்பது, மனிதாபிமான மற்றும் அறநெறி சார்ந்த கடமை என்றும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு மனிதருக்கு, முழுமையாகவும், மதிப்புடனும் பராமரிப்பது வழங்குவது, இறந்துகொண்டிருக்கும் அவரின் தனித்துவமிக்க, மனித, ஆன்மீக மற்றும், சமயக் கூறுகளை ஏற்பதாகும் என்றுரைக்கும் அவ்வறிக்கை, நிதி சார்ந்தவற்றில் சுமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ஒரு நோயாளி மரணத்தைத் தேர்ந்துகொள்வதற்குச் சோதிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.
அதற்கு மாறாக, நோயாளிகள் அனைவருக்கும் தகுதிவாய்ந்த மற்றும், தொழில்திறமையுடன்கூடிய சிகிச்சையும், ஆதரவும் வழங்கப்படுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், நாடுகளின் சட்டங்களும், கோட்பாடுகளும், இறந்துகொண்டிருக்கும் நோயாளியின் உரிமைகளையும், மாண்பையும் மதிப்பதாய் அமைய வேண்டும் என்றும், அந்த அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் வழியாக, கருணைக்கொலைகளைத் தவிர்க்கவும், குணமாக்கமுடியாத நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உதவவும் இயலும் என்று அவ்வறிக்கை உரைக்கின்றது.
இஸ்ரேலின் யூதமத ரபி Avraham Steinberg அவர்கள், இந்த அறிக்கை கையெழுத்திடப்பட பின்புலமாக இருந்தவர். இவர் இந்தக் கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பரிந்துரைத்தார். திருத்தந்தையும், இப்பணியை, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களிடம் ஒப்படைத்தார்.
Source: New feed
