
கத்தோலிக்க திருஅவையின் அக நீதிமன்றம் (Apostolic Penitentiary), இவ்வாரத்தில் நடத்திய 31வது பயிற்சியில் பங்குபெற்றவர்களில் ஏறத்தாழ 250 அருள்பணியாளர்களை, மார்ச் 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக, இணையம் வழியாக நடைபெற்ற இந்த பயிற்சியில், 870 அருள்பணியாளர்கள் பங்குபெற்றதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தின் அர்த்தத்தை நன்றாக விளக்கும் மூன்று அம்சங்கள் பற்றி எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
“ஒருவர் இறையன்புக்குத் தன்னையே கையளித்தல்”, “இறையன்பால் மாற்றம் பெற தன்னை அனுமதித்தல்”, “இறையன்புக்குப் பதிலுறுத்தல்” ஆகிய மூன்று அம்சங்கள் பற்றிய தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒருவர் இறையன்புக்குத் தன்னையே கையளித்தல்” என்பது, நம்பிக்கைக்கு உண்மையிலேயே செயலுருவம் கொடுப்பதாகும் என்று கூறினார்.
நம்பிக்கை, கடவுளுக்கும், மனிதருக்கும் இடையேயுள்ள உறவில் வெளிப்படுத்தப்படுகின்றது, மற்றும், புரிந்துகொள்ளப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நம்பிக்கை என்பது, இறைஇரக்கத்தோடு, இரக்கமே உருவான கடவுளோடு நிகழ்த்தும் சந்திப்பாகும் என்று கூறினார்.
இறையன்புக்குத் தன்னையே கையளிக்காதவரின் வாழ்வு, விரைவில் உலகப்போக்கின் கரங்களில் அகப்பட்டு, இறுதியில், வாழ்வை, கசப்புணர்வு, மனவருத்தம், மற்றும், தனிமையில் கொண்டுபோய் நிறுத்தும் என்று கூறியத் திருத்தந்தை, இதனாலேயே, ஒப்புரவு அருளடையாளத்தை நன்முறையில் பெறுவதற்கு முதல் படி, நம்பிக்கைச் செயலாகும் என்று கூறினார்.
ஒருவர் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவது என்பது, கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அவரது அன்பால் முழுவதும் மாற்றம் அடையத் தன்னை கையளிப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, சட்டங்கள் நம்மைக் காப்பாற்றுவதில்லை என்றும், இயேசு கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட, கடவுளன்பைச் சந்திப்பதாலேயே, நாம் மனமாற்றம் பெறுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
ஒப்புரவு அருளடையாளத்தை, நன்றாக நிறைவேற்றுபவர், மனம்வருந்துபவரின் இதயங்களில் கடவுளின் அருள் செயல்படுவதையும், அவர்களில் நிகழும் மாற்றத்தின் அற்புதத்தையும் எப்போதும் பார்ப்பதற்கு அழைக்கப்படுகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Source: New feed
