
ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் குறித்த அரசியல் நிலைப்பாடு, அப்பிரச்சனையின் சிக்கலான சூழலை முழுமையாகக் கருத்தில் கொள்ளாத, கருத்தியல் மோதல்களுக்கு இரை போடுகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இத்தாலிய கூட்டம் ஒன்றில் கூறினார்.
இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும், மக்களிடையே நட்புறவை வளர்க்கும், 40வது கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் ரிச்சர்ட் பால் காலகர் அவர்கள், மிகவும் கவனமுடன் கையாளப்பட வேண்டிய புலம்பெயர்ந்தோர் குறித்த விவகாரத்திற்கு, எல்லா நிலைகளிலும் தெளிவான அரசியல் கண்ணோட்டம் இன்றி, தீர்வு காணப்பட முடியாது என்று கூறினார்.
இப்பிரச்சனைகளோடு தொடர்புடைய கூறுகளை நோக்காமல், இத்தகைய அரசியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க இயலாது என்றும் உரைத்த பேராயர் காலகர் அவர்கள், ஒருமைப்பாடு மற்றும், தவிர்க்க இயலாத மனித மாண்பு பற்றிய கத்தோலிக்க சமுதாய கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரத்தைப் பாதுகாத்தல், நீதியை ஊக்குவித்தல், அமைதியைக் கட்டியெழுப்புதல் ஆகிய முக்கிய தூண்களின் மீது, ஐரோப்பிய ஒன்றியத்தை அமைப்பதற்கு, ஒருமைப்பாடே இன்றியமையாததாக இருந்தது என்பதையும், தன் உரையில் குறிப்பிட்டார், பேராயர் காலகர்.
ஒருமைப்பாடு, பொதுவான மனித இயல்பிலிருந்து பிறப்பதாகும் என்றும், பேராயர் காலகர் அவர்கள், ரிமினி கூட்டத்தில் உரையாற்றிநார்.
ரிமினி நகரில் 1980ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், நொபெல் விருது பெற்றவர்கள், முக்கிய சமயத் தலைவர்கள் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர்.
Source: New feed