
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15
அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.
நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை.
“அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்”
மறையுரை.
ஒரு கிராமத்தில் ஆரோக்கியசாமி என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் சரியான சந்தேகப் பேர்வழி. எதைச் செய்தாலும் எதைக் கண்டாலும் சந்தேகக் கண்ணோடே பார்ப்பான்; எளிதில் யாரையும் நம்பமாட்டான்; குடும்பத்தில் இருப்பவர்களிடமும் அப்படித்தான் நடந்துகொள்வான். ஆனால், அவன் கடவுளிடம் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தான். ஒருநாள் அவன் இல்லறவாழ்வைத் துறந்து கடவுளின் அருளைப் பெற துறவறவாழ்வை மேற்கொண்டான். அதனால் காட்டில் கடவுளை நினைத்து கடுந்தவம் புரிந்தான். சில மாதங்கள் கழிந்தன. கடவுள் வரவில்லை. ஆண்டுகள் பல கழிந்தன. அப்போதும் கடவுள் வரவில்லை. அனைத்திலும் பக்குவமடைந்த அவனுக்குச் சந்தேகப் புத்தி மட்டும் போகவில்லை. அவனது தவத்தை மெச்சிய கடவுள், அவனது சந்தேகப்புத்தியை நினைத்து நினைத்து வேதனையடைந்தார். அதனால் அவர் அவனிடம் விளையாட நினைத்தார்.
முதலில் ஒரு பக்கிரியாக அவன்முன் தோன்றினார். “மகனே நெடுநாட்களாகத் தவம்புரிகிறாயே… கடவுளைக் காணவா…?” என்றார். ‘இவர் நம்மிடமிருந்து எதுவும் பறித்துக்கொண்டு போகப்போகிறாரோ…?’ என்ற சந்தேகத்துடன் அவரைப் பார்த்தான் ஆரோக்கியசாமி. பின்னர் பக்கிரி வடிவில் இருந்த கடவுள் அவனருகில் அமர்ந்து, “சிறிதுகாலம் நானும் உன்னுடன் தங்கி கடவுளைத் தரிசிக்கப்போகிறேன்” என்றார். அடுத்தநொடியிலிருந்து அவன் கடவுளை விடுத்துப் பக்கிரியைக் கவனிக்கத் தொடங்கினான். சில நாட்களுக்குப் பிறகு பக்கிரி வேடத்திலிருந்த கடவுள் அவனிடம் புன்னகைத்தப்படி விடைபெற்றார். இவனுக்கோ பரம சந்தோஷம். ‘இனி பரமனை நினைக்கலாம்’ என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தான்.
இம்முறை கடவுள் கூன் விழுந்த வயோதிகனாய், பார்க்கவே சகிக்காத தோற்றத்தில் வந்தார். வந்தவர், “தம்பி! நீ கடவுளைக் காணத்துடிப்பதுபோல் நானும் துடிக்கிறேன்… அவர் வரும்வரை காத்திருந்துவிட்டு மீண்டும் சென்றுவிடுகிறேன்” என்றார். உடனே ஆரோக்கியசாமி, ‘அது எப்படி? இங்கே கடவுளுக்காக நான் காத்திருக்கிறேன்… கடவுள் வந்ததும் இவனின் நிலையைக்கண்டு இவனுக்கு வரம் கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வது?’ என்று கடவுளையே சந்தேகப்பட்டான். மறுபுறம் ‘கடவுளுக்கு நம்மைக் கவனிக்க நேரம் ஏது? அவர் வரமாட்டார்’ என்று சந்தேகத்தோடு எதிர்பார்த்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்த கூன் விழுந்த தோற்றத்தில் இருந்த கடவுள் அவனிடமிருந்து விடைபெற்றார்.
இதற்குப் பின்பு ஆரோக்கியசாமிக்கு வயதாகத் தொடங்கியது. அப்போது அவன், ‘இவ்வளவு நாள் வராத கடவுள் இனிமேல் வரப்போகிறாரா?’ என்று நினைக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனுக்குத் திடிரென்று இறப்பு வந்தது. அவன் இறந்தபிறகு அவனுடைய உடலை வானதூதர்கள் விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார்கள். விண்ணகத்தில் அவன் கடவுளைக் கண்டதும், “நீதான் எம்மைக் காக்கும் கடவுளா? எனக்கு உன்னைக் கண்டால் சந்தேகமாக இருக்கிறதே!” என்றான். கடவுள் அவன்முன் பக்கிரியாகவும் கூன் விழுந்த வயோதிகனாகவும் தோன்றி நடந்ததை விளக்கினார். அப்பொழுது ஆரோக்கியசாமி அவரிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் சாமி… தாங்கள் யார் என்று முன்னமே கூறியிருக்கலாமே” என்றான். அதற்குக் கடவுள் அவனிடம், “கொஞ்சம் நிதானித்திருந்தால் நீ என்னைக் கண்டிருக்கலாம். நீதான் சந்தேகம் என்னும் பேயைப் பக்கத்திலேயே வைத்திருந்தாயே… நான் வருவேனா, மாட்டேனா என்ற சந்தேகமே உன் மனம் முழுக்க வியாபித்திருந்தது. உனக்கு முன்னால் நான் தோன்றியும் என்னை புரிந்துகொள்ளாத நீ என்ன பக்தன்!” என்றார். அப்பொழுதான் ஆரோக்கியசாமி தன்னுடைய தவற்றை உணர்ந்து வருத்தத் தொடங்கினான்.
இந்நிகழ்வில் வரும் ஆரோக்கியசாமியைப் போன்றுதான் பலரும் கடவுளிடம் நம்பிக்கை இல்லாமல், அவர் தருகின்ற ஆசியை பெறாமல் போகின்றார்கள். இத்தகைய பின்னணியில், இன்றைய நற்செய்தி வாசகம், கடவுளின் நம்பிக்கை கொண்டு வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியைக் குறித்து எடுத்துச் சொல்லுகின்றது, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையும் நிலைவாழ்வும்.
நற்செய்தியில் இயேசுவுக்கும் நிக்கதேமுக்கும் இடையே நடந்த உரையாடலின்போது இயேசு உதிர்த்த பொன்மொழிதான், “(தன்னிடம்) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்” என்பதாகும். இயேசு இப்பொன்மொழியை உதிர்ப்பதற்கு முன்னதாக, அவர், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் பாம்பால் கடிபட்டதையும் வெண்கலப் பாம்பைக் கண்டவர்கள் உயிர்பெற்றதைக் குறித்துப் பேசுவார்.
இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் பாம்பால் கடிபட்டதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொள்ளாமல் அவருக்கு எதிராகக் கலகம் செய்ததுதான் (எண் 21: 4-9). ஆனால், அவர்கள் வெண்கலப் பாம்பைக் கண்ட பிறகு உயிர்பெற்றார்கள். இதை மேற்கோள் காட்டிப் பேசும் இயேசு, யாராரெல்லாம் (சிலுவையில் உயர்த்தப்பட இருக்கும்) தன்னை நம்பிக்கையோடு உற்றுநோக்குகிறார்களோ அல்லது யாராரெல்லாம் தன்மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்கள் நிலைவாழ்வு பெறுவர் என்று கூறுகின்றார். இவ்வாறு நிலைவாழ்விற்கும் தன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்று இயேசு எடுத்துக் கூறுகின்றார்.
நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு அவர் தரும் நிலைவாழ்வைப் பெறத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சிந்தனை.
‘அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்’ (யோவா 1:12) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகவே, நமக்கு நிலைவாழ்வையும் எல்லா நலன்களையும் தரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed