
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.
நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————-
“தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை” பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 4: 32-37
II யோவான் 3: 7-15
“தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை”
சிறுமியின் மருத்துவச் செலவுக்கு உதவிய கிராமத்து மக்கள்:
அமெரிக்காவிலுள்ள கிராமங்களில் வித்தியாசமானதொரு வழக்கமிருக்கின்றது. அது என்னவெனில், வீடுகளிலுள்ள குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுடைய பெற்றோர் ஓர் ஆடுவளர்ப்பர். அவ்வாறு வளர்க்கப்படும் ஆட்டினை கோடைக்காலத்தில் ஏலம்விட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகையை வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதுண்டு. ஒரு கிராமத்தில் கேத்தி என்றொரு பதினான்கு வயது ஏழைச்சிறுமி இருந்தாள். இவள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இவளது தாய் ஜேன் ஃபிஷர் எல்லாரையும்போன்று ஓர் ஆட்டை வளர்த்தார். கோடைக்காலம் வந்ததும் ஜேன் தன் மகளையும் தான் வளர்த்த ஆட்டையும் அழைத்துக்கொண்டு, ஆடுகள் ஏலம்விடப்படும் இடத்திற்குப்போனார். அங்குப் பலரும் தாங்கள் வளர்த்த ஆடுகளைக் கொண்டுவந்திருந்தனர்.
ஏலம்தொடங்கி, கேத்தியின் ஆடு ஏலத்திற்கு வந்தது. அப்பொழுது அந்தக்கிராமத்தின் தலைவர் எல்லாரும் முன்பாகவந்து, “கத்தியைப்பற்றியும் அவரது குடும்பத்தைப்பற்றியும் நாம் நன்றாகவே அறிவோம். சிகிச்சைக்காகப் பணமின்றிச் சிரமப்படும் அவளுக்கு, அவளுடைய ஆட்டினை நல்லதொகைக்கு ஏலமெடுத்து உதவலாம்” என்றார். இதற்குப்பிறகு கேத்தியின் ஆடு ஏலம்விடப்பட்டது. வழக்காக இரண்டாயிரம் டாலருக்கு ஏலம்போகும் ஆடு ஐயாயிரம் டாலருக்குப்போனது. அந்த ஆட்டினை ஏலத்துக்கு எடுத்தவர், ஏலத்தைத் தொகையைக் கேத்தியிடம் கொடுத்துவிட்டு, மீண்டுமாக அதை ஏலத்திற்கு விட்டார். இந்தமுறை அதை ஏலத்திற்கு வாங்கியவர் முன்னவரைப்போன்று ஏலத்தொகையைக் கேத்தியிடம் கொடுத்துவிட்டு மீண்டுமாக அதை ஏலத்திற்கு விட்டார். இவ்வாறு கேத்தியின் ஆடு முப்பத்தாறு முறை ஏலத்திற்கு விடப்பட்டு, எட்டு இலட்சம் டாலரை ஈட்டித்தந்தது. அது கேத்தியின் சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.
ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கேத்திக்கு உதவ, அவரது கிராமத்துமக்கள் மனமுவந்து உதவியது பாராட்டிற்குரியது. இன்றைய முதல்வாசகத்தில், “தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை” என்று வாசிக்கின்றோம். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்கு எப்படி மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாய் விளங்கினார் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய முதல்வாசகம், அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர் என்றும், எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது என்றும், தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைக்கு அவர்கள், “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” (யோவா 13: 35) என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையாக இருந்தது என்று உறுதியாகச்சொல்லலாம். நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை எப்படி நிரூபிக்கப்போகிறோம்?
சிந்தனைக்கு:
நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை எனில், அது தன்னிலே உயிரற்றது (யாக் 2: 17).
இயேசுவை அன்புசெய்வோர் அவரது கட்டளையைக் கடைப்பிடிப்பர் (யோவா 14: 15).
நாம் செய்யும் நற்செயல்களைக் கண்டு, நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப்புகழட்டும் (மத் 5: 16).
ஆன்றோர் வாக்கு:
‘பகிர்வதும் கொடுப்பதுமே கடவுளின் வழிகள்’ என்கிறது ஒரு பழமொழி. எனவே, நாம் நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்துவாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
