
மாலையில், உரோம் மாநகரின் கொலோசேயம் என்ற இடத்தில், பல்வேறு மதங்கள், மற்றும், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு இணைந்து, உலக அமைதிக்காக வேண்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அக்டோபர் 6, 7 ஆகிய இரு நாள்களில், கொலோசேயத்தில் ஏற்பாடு செய்திருந்த அமைதி குறித்த 35வது பன்னாட்டு கூட்டத்தில், நாற்பது நாடுகளிலிருந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம், புத்தம், Tenrikyo, இந்து, மற்றும், சீக்கியம் ஆகிய மதங்களின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
“மக்கள் அனைவரும் உடன்பிறப்புக்களாக, வருங்காலப் பூமி” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இத்தலைவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிசின் உணர்வில், நட்பு மற்றும், உரையாடலை ஊக்குவிப்பதை எவ்வாறு மீண்டும் துவங்குவது என்பது குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்வில், இத்தலைவர்களோடு இணைந்து அமைதிக்காகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், அனைவர் இதயங்களிலும், அமைதி குடிகொள்ளும்வண்ணம், இதயங்கள் தூய்மைப்படுத்தப்படுவதற்கு உழைக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
வன்முறையற்ற இதயங்கள் உருவாக
போர்களுக்குப் பலியானவர்களுக்காக அமைதியாக சிறிதுநேரம் செபித்தபின்னர், திருத்தந்தை ஆற்றிய உரையில், மனித இதயங்களில் வன்முறை அகலவேண்டும் என கடவுளை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டார்.
வெறுப்பால் நிறைந்துள்ள இதயங்கள் அதனை அகற்றவும், அமைதியைக் கொணரவும் சக்தியளிப்பதன் ஊற்றாக இருப்பது, இறைவேண்டல் என்பதை வெளிப்படுத்துவதற்கு, இவ்வாரத்தில் உரோம் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அனைவரையும் பாராட்டி, தன் உரையைத் துவக்கிய திருத்தந்தை, முன்பு ஒரு காலத்தில், மனிதர்கள், ஒருவர் ஒருவருக்கெதிராயச் சண்டையிட்டு, பெருமளவில் இறந்த்தைப் பார்த்து இரசித்த கேளிக்கை அரங்கில் இச்செப நிகழ்வு நடைபெறுகின்றது என்று கூறினார்.
உடன்பிறப்புக்களே, உடன்பிறப்புக்களைக் கொலைசெய்வதை தொலைதூரத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டாக கருதினால், வன்முறை மற்றும் போரை, இரசிப்பவர்களாக நாமும் மாறிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, வன்முறைகளுக்குப் பலியாகுவோரைப் புறக்கணிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
நம் சகோதரர், சகோதரிகளுக்கு நிகழ்வது அனைத்தும், நம்மையும் பாதிக்கின்றன என்ற உண்மையை உணர்வதற்கு மிகுந்த துணிச்சல் தேவை என்றுரைத்த திருத்தந்தை, போர், மனித உயிர்களோடு விளையாடுகின்றது, மற்றும், அது, அரசியல் மற்றும் மனித சமுதாயத்தின் இயலாத்தன்மையை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
2019ம் ஆண்டில் தான் வெளியிட்ட அனைவரும் உடன்பிறந்தோர் என்ற ஏடு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித இதயங்களிலிருந்து வன்முறையை முற்றிலும் அகற்றுவதற்கு மதங்களுக்கு இருக்கும் கடமையை வலியுறுத்திக் கூறினார்.
மனித இதயங்களிலிருந்து காழ்ப்புணர்வைக் களைவதற்கும், வன்முறையின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகக் கண்டனம் செய்வதற்கும் உதவவேண்டியது மதங்களின் கடமை என்றுரைத்த திருத்தந்தை, அமைதியின்றி, மக்கள், சகோதரர், சகோதரிகளாக நிலைத்திருக்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.
Source: New feed
