
உக்ரைனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேராலயத்தின்மீது மீது குண்டு வீச வேண்டாம் என, உக்ரைனில் உள்ள கிரேக்கக் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள் இரஷ்யாவுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்
Kyiv-Halychன் உக்ரைன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் மற்றும் திருப்பீடத்திற்கான உக்ரைன் தூதரகம், கீவ்வில் உள்ள புனித சோபியா பேராலயத்தின்மீது இரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் பேராயர் அவர்கள், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்தக் கொடிய அழிவுச் செயலிலிருந்து பேராலயத்தைக் காக்க இறைவேண்டல் செய்யுமாறு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள பேராயர் Shevchuk அவர்கள், இத்தகைய அழிவுச் செயலிலிருந்து விலகியிருக்குமாறு ஆக்ரமிப்பாளர்களிடம் விண்ணப்பித்துள்ளதுடன், இந்தக் குற்றத்தைச் செய்ய நினைத்தவர்களின் மனதை, புனித சோபியா மாற்றட்டும் என்றும் கூறியுள்ளார்.
புனித சோபியா பேராலயம் அனைத்து ஸ்லாவிய மக்களுக்கும் புனிதமானது மட்டுமல்ல, இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. ஆர்த்தடாக்ஸ் மற்றும் உக்ரேனிய கத்தோலிக்கர்களுக்கு இப்பேராலயம் மத முக்கியத்துவம் வாய்ந்தது. உக்ரேனிய கத்தோலிக்கர்கள் திருப்பீடத்துடன் தங்கள் ஒன்றிப்பை அறிவித்து, ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடனான ஒன்றிப்பை முறித்துக் கொள்வதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 11ஆம் நூற்றாண்டில் அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
Source: New feed
