
இயேசுவின் திருஇருதயம் நமது புண்ணிய வளர்ச்சிக்கு மாதிரிகை.
நமது ஞானப் பலவீனத்தை அறிந்திருக்கும் இயேசுவின் திரு இருதயமானது நாம் நாள்தோறும் புண்ணிய நெறியில் நடந்து வளர்ச்சியடையும்படி நமக்குத் திவ்விய மாதிரிகையாயிருக்க அருள் புரிந்தார். அளவில்லாத ஞானமும், புனிதத்தனமும் அவரே என்றாலும், நம்முடைய நலனுக்காக நாம் நடக்கவேண்டிய விதத்தைப் படிப்பிக்கத் தாமே புண்ணிய பாதையில் வளர்ச்சியடைவதாகக் காணப்படச் சித்தமானார். ஆனது பற்றியே இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சி யிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்துவந்தார் லூக்கா 2:52) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.
கிறிஸ்தவர்களனைவரும் இயேசுக்கிறிஸ்துநாதர் பாவனையாக வயதிலும் பலத்திலும் அதிகரிக்க, அதிகரிக்க, புண்ணியத்திலும், ஞானக்காரியங்களிலும் வளர்ச்சியடைய வேண்டும். பிள்ளை வளராமலும் பலவீனமாயுமிருந்தால் அதனுடைய உடல்நலத்தைப் பற்றித் தாய் தந்தையருக்கு கரிசனையுண்டாகும். பல ஆண்டு பள்ளிக்கூடத்தில் படித்தபையன் சற்றும் படிப்பில் முன்னேற்றமடையாமல் முட்டாளாயிருந்தால் ஒன்றுக்கும் உதவாதவனென்று ஆசிரியர் அவனை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். நட்ட மரக்கன்று பல ஆண்டுகாலத்துக்குப் பின்பும் வளர்ச்சியடையாமலிருந்தது போலிருந்தால் விவிலியத்தில் சொல்லப்பட்ட காய்க்காத அத்திமரம் போல் தோட்டக்காரன் நட்ட மரத்தை வெட்டி வெளியே எறிவான். பக்தியில் வளர்ச்சியடையாமலும், புண்ணிய பலன் கொடாமலும் வாழுகிற கிறிஸ்தவர்களுடைய கதியும் இதுவே.
ஆனால் வளர்ச்சியடைவதும் அடையாததும் எப்படித் தெரியும்? புண்ணியப்பயிற்சியில் உண்டாகிற இடையூறுகளை உணருவதினால் நாம் வளர்ச்சியடைகிறதில்லையென்று சொல்ல முடியாது. தங்கள் பாவநாட்டங்களை அடக்கி ஜெயிப்பதில் சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட அதிகமாய்ப் போராட வேண்டியிருக்கும். அவர்கள் சிலசமயம் குற்றங்குறைகளினால் தவறினாலும் தங்கள் முயற்சியால் வளர்ச்சியடைவார்கள். நமது பாவநாட்டங்களோடு தொடர்ந்து போராடி, நமது குற்றங்களின் எண்ணிக்கையை நாளுக்குநாள் குறைத்து, விழிப்பாயிருந்து, செய்யவேண்டிய ஞான முயற்சிகளைச் சரிவரச் செய்து, தக்க ஆயத்தத்தோடு அருட்சாதனங்களைப் பெற்று, நம்மை முழுதும் தேவ ஊழியத்துக்குக் கையளிப்பதிலேதான் புண்ணிய அபிவிருத்தி அடங்கியிருக்கிறது. தீய எண்ணத்தாலும் வேண்டுமென்கிற கவனக்குறைவாலும் இல்லாமல் பலவீனத்தால் மாத்திரம் கட்டிக் கொண்ட குற்றங்களிடமாயும் நாம் பலன் அடையலாம். தவறினேன் என்று அறிந்த மாத்திரத்தில் இயேசுவின் திருஇருதயத்துக்கு முன்பாக நமது இருதயத்தை எழுப்பி, நம்பிக்கையோடும் அன்போடும் அவருடைய மன்னிப்பைக் கெஞ்சி மன்றாடி, இனி ஒருபோதும் பாவத்தைச் செய்யாமலிருக்க என்னாலான முயற்சி செய்வேனென்று முடிவு செய்வதே சிறந்த பலனை அடைய எற்றவழியாகும்.
தலைமை திருத்தூதரான புனித பேதுரு தன்பேரில் மிதமிஞ்சின நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ஆண்டவரை மும்முறை மறுதலித்த பிறகு அவர்பட்ட மனஸ்தாபமும் வெட்கமும் அவருடைய இருதயத்தில் எம்மாத்திரம் குடி கொண்டிருந்த தென்றால் அவர் திருச்சபைக்குத் தலைவராகவும், இயேசுக்கிறிஸ்து நாதருக்குப் பதிலாளியாகவும் உயர்த்தப்பட்டாலும், தான் எல்லா திருத்தூதர்களிலும் கடைசியென்கிற தாழ்மையான எண்ணம் அவருடைய உள்ளத்தைவிட்டு ஒருபோதும் நீங்கவில்லை. இதேவிதமாய் நம்முடைய பலவீனத்தால் நாம் கட்டிக்கொண்ட பாவதோஷங்கள் நம்மிடத்தில் தாழ்ச்சியையும், விழிப்பையும், உருக்கமான ஜெபப்பற்றுதலையும் விளைவித்து, நமது பாவாக்கிரமங்களைப் பாராமல், நமது மேல் எப்போதும் இரங்கி, நமது பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அன்பு செய்கிற கடவுள்மட்டில் நன்றியையும் தாராள குணத்தையும் உண்டுபண்ணவேண்டும். ஆனால் வேண்டுமென்று மனது பொருந்தி கட்டிக்கொள்ளுகிற பாவங்களையும், சோம்பல் அசட்டைத்தனத்தையும், பகைத்து வெறுத்துத் தள்ளவேண்டும். இவைகளே தேவ அருட்கொடைக்கு முழுதும் தடையாயிருந்து நம்மை நித்திய ஆபத்துக்களாக்குகின்றன.
தங்கள் ஆத்தும் மீட்பு விஷயத்தில் நல்ல மனமுமில்லாத கிறிஸ்தவர்களைப் பின்பற்றி நாம் நடக்கலாகாது. இவர்கள் புண்ணியத்தில் வளர்ச்சியடைவதற்குப் பதிலாய் அதே பாவங்களை மனது பொருந்தி கட்டிக்கொண்டு, மனஸ்தாபப்படாமலும், இனி ஒருபோதும் பாவத்தைச் செய்யமாட்டேனென்கிற உறுதியான தீர்மானம் இல்லாமலும், ஒப்புரவு செய்து நாளுக்குநாள் பாவ வழியில் அமிழ்ந்து வாழ்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறதற்குப் பதிலாய் புனித பேதுருவையும் சகல புனிதர்களையும் பின்பற்றக்கடவோம். அவர்களைப்போல் செபத்தினின்றும், அருட்சாதனங்களிலிருந்தும் நம்முடைய ஞான வளர்ச்சிக்கு தேவையான ஞானத்தைரியத்தைப் பெற்றுக்கொள்வதோடுகூட நித்திய மோட்ச சம்பாவனைகளையும் சுதந்தரித்துக்கொள்வோம்.
இயேசு சபையை நிறுவின் புனித இஞ்ஞாசியார் உரோமாபுரியில் இயேசு சபைக்கு தலைவராயிருந்த காலத்தில் சேசுசபை மடத்தில் பதனீரா என்னும் பெயர் கொண்ட பக்தியும் சுறுசுறுப்புமுள்ள ஒரு சிறுவனிருந்தான். இவன் நாள்தோறும் குருமார்களுக்கு பூசைக்கு உதவி செய்த பிறகு சில சொற்ப வேலைகளைச் செய்துவந்தான். இவன் தன்னைச் சேசு சபையில் ஏற்றுக் கொள்ளும்படி புனித இஞ்ஞாசியாரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். புனித இஞ்ஞாசியார் வயது முதிர்ச்சியாலும் நோயினாலும் கோலைப் பிடித்து மெதுவாக நடப்பார். உடனே புனிதர் சரி, நீ இந்த ஊன்றுகோல் உயரம் எப்போது வளருவாயோ அப்போது சபையில் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்றார். சிறுவன் பேசாமல் போய் தனக்குள் ஆலோசித்தான். புனித இஞ்ஞாசியார் அறையிலில்லாத போது உள்ளே சென்று புனிதர் பார்க்காதவிதமாய் அந்த ஊன்றுகோலில் நாள்தோறும் ஒரு சிறு துண்டை அறுத்து எடுத்து அதன் உயரத்தைச் சிறிது சிறிதாக குறைத்துவிட்டான். பல நாள் இப்படி நடந்தது. புனிதர் ஒன்றும் சந்தேகப்படவில்லை. நாள் செல்லச் செல்ல ஊன்றுகோலின் அளவு குறைந்து ரிபதனீராவுடைய உயரத்தின் அளவு வந்துவிட்டது. பையன் திரும்பவும் புனித இஞ்ஞாசியாரிடம் கேட்டான். புனிதர் : இல்லை, இல்லை, நீ இன்னும் இந்த ஊன்றுகோல் உயரம் வளரவில்லை என், பையன், இல்லை, இல்லை, எங்கே அளந்து பாருங்கள், நான் வளர்ந்துவிட்டேன் என்றான். புனித இஞ்ஞாசியார் அளந்து பார்த்து அப்பையனுக்குச் சேசுசபையில் சேர இருந்த ஆவலைக்குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டார். சரி, நாம் சொன்ன வாக்குப்படி உன்னைச் சேசுசபையில் ஏற்றுக்கொள்கிறோமென்று ஏற்றுக்கொண்டார்.
வளர்ச்சி குறைவாயிருந்தாலும் அதை விடாமுயற்சியோடு தினமும் செய்துவந்தால் எப்படி அநுகூலம் அடைவோமென்பதற்கு இந்த உதாரணமே எடுத்துக்காட்டு. உன் துர்க்குணத்தின் சொற்பப் பங்கை, உன் அசட்டைத்தனத்தின் சிறு பாகத்தை நாள்தோறும் குறைப்பாயேயாகில் பதனீரா என்பவர் தான் மேற்கொண்ட காரியத்தில் சிறந்து விளங்கினார். இயேசு சபையில் படிப்பிலும், தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கினது போல் நீயும் புனிதனாவாய் என்பது உறுதி
Source: New feed
