
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
அக்காலத்தில் இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.
மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள்.
அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.
எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள்.
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“முதன்மையோர் கடைசியாவர்”
பெரிய கப்பலொன்று கடலில் சென்றுகொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். அந்தக் கப்பலில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது என்ன பழக்கம் என்றால், யாராவது ஒரு பெரிய மனிதரைக் கண்டால், அது திரைப்பட நடிகராக இருக்கலாம், அரசியல் தலைவராக இருக்கலாம், முக்கியமான பொறுப்பில் இருப்பவராகக் கூட இருக்கலாம். அவரிடம் தன்னிடம் இருக்கும் கையேட்டில் கையெழுத்தை (Autograph) வாங்கிக்கொண்டு, அதைத் தன்னுடைய தோழிகளிடமும் தனக்கு அறிமுகமானவர்களிடம் காட்டி, “பாருங்கள்! எனக்கு எவ்வளவு பெரிய ஆளையெல்லாம் தெரியும்” என்று தம்பட்டம் அடிப்பாள்.
அன்று அவள் பயணம் செய்துகொண்டிருந்த அந்தக் கப்பலில் பல்கலைக்கழகங்களில் அதிகப் பட்டம் பெற்று, ஒரு மறைமாவட்டத்தில் ஆயராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயர் ஒருவரும் பயணம் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்மணிக்கு எப்படியும் அவரிடமிருந்து கையெழுத்து வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவள் ஆயரிடம் சென்று, “ஆயர்ப் பெருந்தகையே! எனக்கு உங்களுடைய ஆட்டோகிராப் ஒன்று வேண்டும்” என்றாள். முதலில் சற்றுத் தயங்கிய ஆயர். அந்தப் பெண்மணியின் வற்புறுத்துதலின் காரணமாக, அவளுடைய கையேட்டில் வெறும் பெயரை மட்டும் எழுதினார். அந்தப் பெண்மணி விடவில்லை. “ஆயர் அவர்களே! உங்களுடைய பெயரை மட்டும் குறிப்பிட்டால் எப்படி? நீங்கள் படித்த படிப்பையும் உங்களுடைய தகுதியையும் குறிப்பிடுங்கள்” என்றாள். ஆயர் ஒருகணம் யோசித்துப் பார்த்தார். பிறகு அவளிடமிருந்து பேனாவை வாங்கித் தன்னுடைய பெயர்க்குப் பின்னால் ‘பாவி’ என்று எழுதினார். இதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணி அதிர்ந்து போனாள். “நாமோ இவர் படித்த பட்டங்களையெல்லாம் தன்னுடைய பெயர்க்குப் பின்னால் குறிப்பிடுவார்… அதை என்னுடைய தோழிகளிடமும் தெரிந்தவர்களிடம் காட்டி, ‘எவ்வளவு பெரிய மனிதரிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறேன் பார்த்தாயா!’ என்று கெத்துக் காட்ட நினைத்தால், இவரோ தன்னுடைய பெயர்க்குப் பின்னால் ‘பாவி’ என்று குறிப்பிட்டுவிட்டு யாரிடமும் காட்ட முடியாதவாறு செய்துவிட்டாரே” என்று மிகவும் வருத்தப்பட்டாள்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணியைப் போன்றுதான் பலர், தாங்கள் மற்றவர்களை விடப் பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்று காட்ட விரும்பி இறுதியில் மூக்கு உடைபட்டு நிற்பார்கள். நற்செய்தியிலும் இயேசு சொல்கின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வருகின்ற, அதிகாலை வேலைக்கு வந்தவர்கள், “கடைசியில் வந்த இவர்களையும் எங்களோடு இணையாக்கி விட்டீரே” என்று சொல்கின்றபோது, திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களிடம், “உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்” என்று சொல்லி அவருடைய வாயை அடைக்கின்றார்.
இயேசு சொல்லும் இவ்வுவமைக்குப் பின்னால் இருக்கும் பொருள் என்ன? இயேசு ஏன் இந்த உவமையைச் சொல்லவேண்டும் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
வீண் பெருமை கூடாது.
நற்செய்தியில் இயேசு திராட்சைத் தொட்ட உரிமையாளர் உவமையைச் சொல்கின்றார். இவ்வுவமையில் இரண்டு விதமான வேலையாள்கள் வருகின்றார். ஒருவகையினர் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொண்டவர்கள். அதாவது அதிகாலையில் வேலைக்கு வந்தவர்கள்.. இன்னொரு பிரிவினர், நியாயமான கூலிக்கு ஒத்துக்கொண்டவர்கள். அதாவது தாமதாக வேலைக்கு வந்தவர்கள். இவ்வுவமையில் முதலில் வேலைக்கு வந்தவர்க்கு திராட்சைத் தோட்ட உரிமையாளர் முதலில் கூலியைக் கொடுத்து அனுப்பியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. கடைசியில் கூலி கொடுத்ததால்தான் அவர்கள், ‘கடைசியில் வந்தவர்கட்கே ஒரு தெனாரியம் என்றால், பகல் முழுவதும் வேலை பார்த்த நமக்கு நிச்சயம் அதிகமான கூலி கிடைக்கும்’ என்று தப்புக் கணக்குப் போடத் தொடங்குகின்றார்கள். இறுதியில் கடைசியில் வந்தவர்கட்குக் கொடுக்கப்பட்ட அதே ஒரு தெனாரியம் அவர்கட்கும் கொடுக்கப்பட்டபோதுதான், அவர்கள் முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள்.
இந்த உவமையில், முதலில் வேலைக்கு வந்தவர்கட்கு அநீதி இழைக்கப்படவில்லை. அவர்கட்குச் சொன்னது போன்றுதான் ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்டது. கடைசியில் வந்தவர்கட்கு ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்டது திராட்சைத் தோட்ட உரிமையாளரின் பெருந்தன்மை. இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உவமையை இயேசு சொல்லக்காரணம், யூதர்கள் தாங்கள்தான் கடவுளின் மக்கள். தங்கட்குத்தான் எல்லாவற்றிலும் முதன்மையான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று இறுமாப்போடும் வீண்பெருமை பேசிக்கொண்டும் ஆண்டவருக்கு விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு, கடைசியில் வந்த அல்லது தங்களுடைய தவறை உணர்ந்து திருந்திய புறவினத்து மக்கட்கு விண்ணரசில் முதன்மையான இடம் கொடுக்கப்படும் என்று சொல்கின்றார்.
ஒருவரின் பிறப்பல்ல, அவருடைய வாழ்வே அவர் யாரெனத் தீர்மானிக்கும்.
இவ்வுவமையின் வழியாக இயேசு கூறும் மிக முக்கியமான செய்தி, நாம் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவோ அல்லது ‘உயர் குடியில்’ பிறந்துவிட்டோம் என்பதற்காகவோ விண்ணரசில் இடம் கிடைத்துவிடாது. மாறாக, இறைவன்மீது பற்றுக்கொண்டு அவர்க்கு உகந்தவர்களாக வாழவேண்டும். அப்பொழுதுதான் இறைவன் தருகின்ற விண்ணரசை அவரது ஆசியை உரித்தாக்கிக் கொள்ள முடியும். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற வறட்டுக் கவுரவத்தையும் சாதி, இன, மொழித் திமிரையும் விட்டுவிட்டு இறைவனுக்கு உகந்த அன்பு வழியில் நடப்போம்.
Source: New feed
